கொடைக்கானலில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

கொடைக்கானல் கீழ் மலைப் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி குடும்பம் நடத்தி ஏமாற்றியதால் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
கே.சி.பட்டியில் தன்னை ஏமாற்றிய காதலன் வீட்டின் முன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட பெண்
கே.சி.பட்டியில் தன்னை ஏமாற்றிய காதலன் வீட்டின் முன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட பெண்
Published on
Updated on
1 min read

கொடைக்கானல் கீழ் மலைப் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி குடும்பம் நடத்தி ஏமாற்றியதால் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதி தாண்டிக்குடி அருகே உள்ள கே.சி பட்டியை சேர்ந்தவர் பவுன்ராஜ். இவரது மகள் மாலதி (வயது 28). இவருக்கு திருமணமாகி கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இதற்கிடையே கடந்த மூன்று ஆண்டுகளாக தாண்டிக்குடி பகுதியை சேர்ந்த நடராஜ் என்பவரின் மகன் சதீஷ் என்பவருடன் மாலதி பழகி வந்துள்ளார். ஓட்டுநர் வேலை செய்து வரும் சதீஷ் மாலதியை திருமணம் செய்து கொள்வதாக கூறி தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளார்.

இவர்கள் இருவரும் நெருங்கி பழகிய காரணத்தினால் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். 

இரு வீட்டு பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். மாலதி தனது ஆண் குழந்தையை தனது கண்காணிப்பில் வைத்திருந்தார். 

இதற்கிடையே சதீஷிற்கு நேற்று முன்தினம் பண்ணைக்காடு பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்தத் தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த மாலதி கே.சி. பட்டியில் உள்ள சதீஷின் வீட்டிற்கு தனது குழந்தையுடன் சென்ற மாலதி, வீட்டு வாசலில் முன்பு அமர்ந்து நியாயம் கேட்டுள்ளார்.

ஆனால் சதீஷின் பெற்றோர் மாலதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கிருந்து விரட்டி விட்டுள்ளனர்.

இதில் மனவேதனை அடைந்த மாலதி தன்னுடைய ஆண் குழந்தையை அருகில் உள்ள கடை ஒன்றில் அமர வைத்துவிட்டு, பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டதில் சம்பவ இடத்திலேயே உடல் கருகிப் பரிதாபமாக உயிரிழந்தார்.

தாண்டிக்குடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மாலதியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக தாண்டிக்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இறப்புக்கு காரணமான சதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரின் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்யும் வரை மாலதியின் உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் தெரிவித்தனர்.

மூன்று ஆண்டுகளாக காதலித்து குழந்தையையும் கொடுத்து திருமணம் செய்யாமல் ஏமாற்றி நிலையில் பெண் தற்கொலை செய்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com