பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கோயில் பணியாளர்களுக்கு ரூ. 4,000 உதவித்தொகை: தமிழக அரசு

தமிழகத்தில் உள்ள கோயில்களில் மாத ஊதியமின்றி பணியாற்றும் பணியாளர்களுக்கு உதவித் தொகையாக ரூ. 4,000 வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

News image
Updated On :31 மே 2021, 11:20 am

DIN

தமிழகத்தில் உள்ள கோயில்களில் மாத ஊதியமின்றி பணியாற்றும் பணியாளர்களுக்கு உதவித் தொகையாக ரூ. 4,000 வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

கரோனா நோய் பெருந்தொற்றினால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, திருக்கோயில்களில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் பிற பணியாளர்களின் வாழ்வாதாரத்தினைப் பாதுகாக்கும் வகையில் உதவித் தொகை ரூ. 4,000, 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்கள் வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள செய்தியில்,

இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் கிட்டத்தட்ட 36,000-க்கும் மேற்பட்ட திருக்கோயில்கள் உள்ளன.  அவற்றில் சுமார் 34,000 திருக்கோயில்களின் ஆண்டு வருமானம் ரூ. 10,000க்கும் கீழ் மட்டுமே ஆகும். 12,959 திருக்கோயில்களில் ‘ஒரு கால பூஜைத்திட்டம்’ அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேற்கண்ட திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு நிலையான சம்பளம் ஏதும் வழங்கப்படுவதில்லை.  கரோனா நோய் பெருந்தொற்று காரணமாக திருக்கோயில்களில் பக்தர்கள் வருகை இல்லாததால் போதிய வருமானமின்றி அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் பிற பணியாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தினை இழந்து தவிக்கின்றனர்.  மேற்கண்ட திருக்கோயில்களின் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் பிற பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.

பக்தர்கள் வருகையின்மையால் திருக்கோயில்களில் மாதச் சம்பளம் இல்லாமல் பணிபுரியும் திருக்கோயில் ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்ட நிலையில், திருக்கோயில் ஊழியர்களால் தங்கள் வாழ்வாதாரத்திற்கு அரசு நிதியுதவி வழங்கிட வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. திருக்கோயில் ஊழியர்களின் இக்கோரிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது கவனத்திற்கு கொண்டுச்செல்லப்பட்டது.

திருக்கோயில் ஊழியர்களின் கோரிக்கையினைக் கனிவுடன் பரிசீலித்த தமிழ்நாடு முதலமைச்சர், திருக்கோயில் ஊழியர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் பொருட்டு,  திருக்கோயில்களில் மாதச் சம்பளம் பெறாமல் பணியாற்றும் ஒவ்வொரு திருக்கோயில் ஊழியருக்கும் ரூ. 4,000 உதவித்தொகை, 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்கள் வழங்குவதற்கு ஆணையிட்டுள்ளார்கள்.

மேலும், இந்த உதவித்தொகை, 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்கள் திருக்கோயில் பணியாளர் அல்லாத  திருக்கோயிலின் மூலம் உரிமம் பெற்றோருக்கும் வழங்கப்படும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறேன்.  இதன் வாயிலாக, ஆக மொத்தம், சுமார் 14,000 திருக்கோயில் ஊழியர்கள் மற்றும் திருக்கோயில் மூலம் உரிமம் பெற்ற இதர பணியாளர்கள் பயனடைவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்திட்டம் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது பிறந்த தினமான ஜூன் மாதம் மூன்றாம் தேதியன்று துவக்கப்படும் என்பதையும் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.