உத்தரப் பிரதேசத்தில் உள்ள சீதாபூர் மாவட்டத்தின் கிராமத்தில், ஞாயிற்றுக்கிழமை (மே 26), 11 வயது சிறுமி ஒருவர் மூன்று சிறுவர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார்.
இந்த சம்பவம் சீதாபூர் மாவட்டத்தில் ராம்பூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறை தரப்பில் தெரிவித்ததாவது: பாதிப்புக்குள்ளான சிறுமி செங்கல் சூளைக்கு அருகில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றபோது, சிலரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து சிறுமி அவரது தாயிடம் கூறியுள்ளார். சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில், மூன்று சிறுவர்கள் மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின்படி, பிரிவு 376டிபி (12 வயதிற்குட்பட்ட பெண்மீது கூட்டு பாலியல் துன்புறுத்தல் தண்டனை) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் தொடர்புடைய விதிகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட சிறுவர்கள் மூவரும் சுமார் 15 வயதுடையவர்கள். பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், மாவட்ட மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.