மக்கள் சக்தியே மகேசன் சக்தி - அடுத்தடுத்து ராஜிநாமா செய்யும் லெபனான் அரசுகள்!

மக்கள் சக்திக்கு நிகர் எதுவும் இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக, லெபனானில் மக்கள் போராட்டத்தால் ஓர் ஆண்டு இடைவெளியிலேயே இரு அரசுகள் அடுத்தடுத்து ராஜிநாமா செய்துள்ளன. 
பெய்ரூட் வெடிவிபத்து (கோப்புப்படம்)
பெய்ரூட் வெடிவிபத்து (கோப்புப்படம்)
Updated on
3 min read

மக்கள் சக்திக்கு நிகர் எதுவும் இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக, லெபனானில் மக்கள் போராட்டத்தால் ஓர் ஆண்டு இடைவெளியிலேயே இரு அரசுகள் அடுத்தடுத்து ராஜிநாமா செய்துள்ளன. 

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் கடந்த 4-ம் தேதி மாலை சக்திவாய்ந்த வெடி விபத்து நேரிட்டது. லெபனான் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த உலகையே உலுக்கிய இந்த வெடிவிபத்து அங்கு மிகப் பெரிய நாசத்தை ஏற்படுத்தியது.    

2013-இல் உரிமையாளரால் கைவிடப்பட்ட எம்வி ரோசுஸ் சரக்குக் கப்பலில் இருந்து, அருகிலுள்ள கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்து சிதறிய இந்த விபத்தில் சுமார் 200 பேர் பலியாகினர். 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பல்வேறு கட்டடங்கள் சேதமடைந்தன. 3 லட்சம் பேர் வீடுகளை இழந்தனர்.

இந்த வெடிவிபத்தின் அதிர்வுகள் ரிக்டர் அளவுகோலில் 3.3 அலகுகளாகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. ஜோர்தான் நிலநடுக்கக் கண்காணிப்பு மையம், 4.5 ரிக்டர் அளவுகோலாகப் பதிவானதாகத் தெரிவித்தது.

இதைக் காட்டிலும் மிகப் பெரிய அதிர்வலையாக லெபனான் அரசையே ராஜிநாமா செய்ய வைத்துள்ளது இந்த வெடிவிபத்து. 

வெடிவிபத்தால் வீடற்று வீதிக்கு வந்த பெய்ரூட் மக்களைக் கண்டு வெகுண்டெழுந்த லெபனான் மக்களும் அரசுக்கு எதிராகப் போராட வீதிக்கு வந்தனர். ஏற்கெனவே ஊழல், நிர்வாகக் கோளாறு ஆகியவற்றால் விரக்தியிலிருந்த மக்களை, இந்த வெடிவிபத்து சம்பவம் மேலும் தீவிரப்படுத்தியது. 

அரசின் இந்தத் தோல்வியைக் கடுமையாக விமரிசித்த மக்கள், பிரதமர் ஹசன் தியாப் அரசுக்கு எதிரான முழக்கத்தை முன்வைத்தனர். உள்நாட்டு விசாரணை அமைப்பு மீது நம்பிக்கையில்லாததால், வெடிவிபத்து குறித்து அரசுசாரா தன்னதிகார அமைப்பின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையையும் சிலர் எழுப்பினர். ஆனால், லெபனான் அதிகாரிகள், சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட மறுத்தனர்.

எனினும், பிரதமர் ஹசன் தியாப் தலைமையிலான அரசு ராஜிநாமா செய்வதற்கு முன்பாக கடைசி முடிவாக வெடிவிபத்து பற்றிய விசாரணையை லெபனான் உச்ச நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்தது.

லெபனானில் ஹசன் தியாப் தலைமையிலான அரசு கடந்த ஜனவரி மாதம் 21-ம் தேதிதான் பொறுப்புக்கு வந்தது. எனினும் 8 மாதங்கள்கூட தாக்குப்பிடிக்காத இந்த அரசு, மக்கள் போராட்டத்துக்கு அடிபணிந்து ராஜிநாமா செய்துள்ளது.

மக்கள் போராட்டத்துக்கு அடிபணிந்தது ஹசன் தியாப் அரசு மட்டுமல்ல. ஹசன் தியாப்புக்கு முந்தைய பிரதமரான சாத் ஹரிரி தலைமையிலான அரசும் கடந்தாண்டு அக்டோபர் மாதம் இதேபோல் மக்கள் போராட்டத்துக்கு அடிபணிந்துதான் ராஜிநாமா செய்தது.

கட்செவி அழைப்புக் கட்டணம் கவிழ்த்த சாத் ஹரிரி அரசு

சாத் ஹரிரி அரசு கடந்த 2016-இல் பொறுப்பேற்றது. இவருடைய பதவிக்காலம் 2020-இல்தான் நிறைவடைய வேண்டும். எனினும், வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி, ஊழல் காரணமாக அரசு மீது லெபனான் மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தி ஏற்பட்டது. மிகப் பெரிய நிதிப் பற்றாக்குறையில் லெபனான் தவித்தது.

இந்த நிலையில்தான், கட்செவி (வாட்ஸ்-ஆப்) வாயிலான அலைபேசி அழைப்புக்கு சாத் ஹரிரி அரசு கட்டணம் விதித்தது. ஏற்கெனவே, அதிருப்தியிலிருந்த மக்களை இந்த முடிவு கொந்தளிப்பில் ஆழ்த்தியது. இதன் விளைவாக கடந்தாண்டு அக்டோபர் 17-ம் தேதி லெபனான் மக்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். சாலைகளை மறித்துக் கூடாரங்கள் அமைத்துப் போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்தின் எதிரொலியாக கட்செவி அழைப்புக்குக் கட்டணம் விதிக்கப்பட்ட முன்மொழிவை அரசு திரும்பப் பெற்றது. எனினும், போராட்டம் குறையவில்லை.

மேலும் முனைப்புப் பெற்ற போராட்டக்காரர்கள், ஹரிரி அரசுக்கு எதிரான போராட்டமாக மட்டுமின்றி ஊழல், நிர்வாகக் குளறுபடிகள், பொருளாதார நெருக்கடி உள்ளிட்டவற்றுக்கு இந்த அரசியல் அமைப்பு முறைதான் சிக்கல் என்பதை உணர்ந்து, அந்த நாட்டு அரசியல் அமைப்பு முறைக்கு எதிராகவே போராட்டத்தை நிலைமாற்றினர். ஹரிரி அரசு வெளியேறினாலும், அரசியல் செல்வாக்கு மிகுந்த மற்றொரு அரசுதான் மீண்டும் பொறுப்புக்கு வரும் என்பதால், மாற்று அரசியல் தேவை என்பதை அவர்கள் வலியுறுத்தினர்.

போராட்டக்காரர்களுக்குப் பதிலளிக்கும் வகையில், 3 நாள்கள் அவகாசம் கோரினார் ஹரிரி. இதையடுத்து, ஹரிரி பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். எனினும் போராட்டம் ஓயவில்லை.

இதன்பிறகு, நாட்டில் நிலவும் நெருக்கடிக்குத் தீர்வு காண முடியாததை வெளிப்படையாகவே தெரிவித்த ஹரிரி, கடந்தாண்டு அக்டோபர் 29-ம் தேதி ராஜிநாமா செய்தார்.

போராட்டத்துடன் தொடங்கிய ஹசன் தியாப் ஆட்சி

சாத் ஹரிரி அரசின் ராஜிநாமாவுக்குப் பிறகு, 3 மாதங்கள் புதிய அரசு இல்லாமலே லெபனான் செயல்பட்டு வந்தது. இதன் காரணமாக, அந்த நாட்டின் பொருளாதார நிலை மேலும் சரிந்தது. இதையடுத்து, கடந்த ஜனவரி 21-ம் தேதி ஹசன் தியாப் தலைமையிலான புதிய அரசு உருவானது. பெய்ரூட்டிலுள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தின் போராசிரியராக இருந்தவர் ஹசன் தியாப்.

சாத் ஹரிரி ஆட்சியின்போது போராட்டக்காரர்கள் முன்வைத்த கோரிக்கைகளில் மிக முக்கியமான கோரிக்கையே, வல்லுநர்கள் அடங்கிய அரசியல் தலையீடு இல்லாத புதிய அரசுதான். ஹசன் தியாப் பேராசிரியர் என்றாலும், அவரும் லெபனான் அரசியலில் ஏற்கெனவே ஆதிக்கம் செலுத்தி கூட்டணிகளுடனேயே ஆட்சிக்கு வந்தார். இதன் காரணமாக, தியாப் அமைச்சரவை பொறுப்பேற்பின்போதும், லெபனான் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் முன்வைத்த 'அரசியல் மாற்றம்' பூர்த்தி செய்யப்படாததால், மீண்டும் ஏமாற்றத்துக்குள்ளானார்கள்.

இப்படி லெபனான் மக்கள் விரக்தி மேல் விரக்தியிலிருந்த நிலையில்தான் இந்த பெய்ரூட் வெடிவிபத்து சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவம், லெபனான் அரசு மீது மக்களிடமிருந்த அரசியல் வெறுப்பை மேலும் வலுப்படுத்தியது. இது மீண்டும் போராட்டமாக வெடிக்க, ஹரிரி அரசைத் தொடர்ந்து, தற்போது தியாப் அரசும் ராஜிநாமா செய்திருக்கிறது.

லெபனானின் தேவை

லெபனானுக்குத் தற்போதைய தேவையாக இருப்பது, நெருக்கடி நிலையிலுள்ள நாட்டை மீட்க பொருளாதார சீர்திருத்தமும் அந்த நாட்டு மக்களின் நம்பிக்கையும். அடுத்து வரும் அரசு இவற்றை நிறைவு செய்வதையே முதன்மையானதாக வைத்திருக்க வேண்டும். இதைச் செய்யத் தவறினால், அடுத்த பிரதமருக்கும் சாத் ஹரிரி மற்றும் ஹசன் தியாப் நிலைதான் ஏற்படும் எனக் கருதப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com