விளைச்சல் இருந்தும் விலையில்லை: மஞ்சள் விவசாயிகள் வேதனை!

மஞ்சளுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்யப்படாததால், நல்ல விளைச்சல் இருந்தபோதும் நிலையான விலை கிடைக்காமல் மஞ்சள் சாகுபடி விவசாயிகள் தவிக்கின்றனர்.
விளைச்சல் இருந்தும் விலையில்லை: மஞ்சள் விவசாயிகள் வேதனை!
Published on
Updated on
2 min read


மஞ்சளுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்யப்படாததால், நல்ல விளைச்சல் இருந்தபோதும் நிலையான விலை கிடைக்காமல் மஞ்சள் சாகுபடி விவசாயிகள் தவிக்கின்றனர்.

கரோனா பொது முடக்கம் காரணமாக, மஞ்சள் விலை கடந்த 2 மாதங்களாக  கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. தமிழக, கர்நாடக அளவில் மஞ்சள் விற்பனைக்கான மையம் அமைந்துள்ள ஈரோட்டில் உள்ள மஞ்சள் ஏல மையங்களில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மஞ்சள் ஏலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 

மேலும், வாகனப் போக்குவரத்து இல்லாததால் வெளியூருக்கு மஞ்சளை அனுப்பிவைக்க முடியாதது; இருப்பு மஞ்சளை விற்பனை செய்ய முடியாதது; வெளி மாநிலங்களில் இருந்து புதிய மஞ்சளை விற்பனைக்குக் கொண்டுவர முடியாதது போன்ற காரணங்களால், மஞ்சள் விற்பனை கடந்த 2 மாதங்களாக முற்றிலும் முடங்கியது. தற்போது வாகனப் போக்குவரத்து சீரானதால், ஈரோட்டில் மஞ்சள் ஏலம் மீண்டும் தொடங்கப்பட்டு விட்டது. இருப்பினும், தினசரி மஞ்சள் ஏலத்தில் வெளி மாநில வியாபாரிகள் பங்கேற்பது வெகுவாகக் குறைந்து விட்டது. 

கோயில் விழாக்கள், பண்டிகைக் காலங்கள் இல்லாததாலும், ஹோட்டல்கள் முழு அளவில் இயங்காததாலும், மஞ்சள் விற்பனை சரிவடைந்துள்ளது. கடந்த ஆண்டு பரவலாக மழை பெய்ததால் மஞ்சள் சாகுபடி அதிகரித்தது. அதன் எதிரொலியாக, இந்த ஆண்டு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் மஞ்சள் விளைச்சல் 30 சதவீதம் வரை அதிகரித்தது. 
இந்த ஆண்டும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் மஞ்சள் சாகுபடி அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

இப்போது தமிழகத்தில் ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கோவை, திருநெல்வேலி, தென்காசி என மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மஞ்சள் சாகுபடி அதிகரித்திருக்கிறது. ஏற்கெனவே விளைந்த மஞ்சளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததால், மஞ்சளை விற்பனை செய்யாமல் விவசாயிகள் இருப்பு வைத்துள்ளனர். இந்நிலையில் இந்த ஆண்டும் மஞ்சள் சாகுபடி அதிகரித்தால், இதற்கு கட்டுப்படியான விலை கிடைக்குமா என்பதே விவசாயிகளின் கேள்வியாக உள்ளது. 

தற்போது ஒரு குவிண்டால் விரலி மஞ்சள் குறைந்தபட்சம் ரூ. 6,500 முதல் அதிகபட்சமாக ரூ. 8,000 வரை, தரத்திற்கேற்ப விலை போகிறது. கிழங்கு மஞ்சள் ஒரு குவிண்டால் ரூ. 6,000 முதல் அதிகபட்சமாக ரூ. 7,500 என்ற விலையில் விற்பனையாகிறது. இந்த விலை தங்களுக்கு கட்டுப்படியாவதில்லை என்பது விவசாயிகளின் மனக்குறை.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.சி.ரத்தினசாமி, ஈரோடு மாவட்டச் செயலாளர் சுப்பு என்கிற முத்துசாமி ஆகியோர் கூறியதாவது: 

ஒரு ஏக்கரில் மஞ்சள் சாகுபடி செய்து, அறுவடை செய்த மஞ்சளை வேக வைத்து, உலர்த்தி, பாலீஷ் செய்து விற்பனைக்காக சந்தைக்குக் கொண்டு வர ரூ. 1.25 லட்சம் வரை செலவாகிறது. மண்ணின் தன்மை, சீதோஷ்ண நிலை, மழையளவு போன்றவற்றுக்கு ஏற்ப ஏக்கருக்கு 20 குவிண்டால் முதல் 30 குவிண்டால் வரை மஞ்சள் விளைச்சல் கிடைக்கிறது. 
தற்போது ஒரு குவிண்டால் மஞ்சளுக்கு அதிகபட்சமாக ரூ. 8,000 விலை கிடைக்கிறது. அதுவும் முதல் தர மஞ்சளுக்குத்தான் இந்த விலை கிடைக்கும். இரண்டாம், மூன்றாம் ரக மஞ்சளுக்கு கட்டுப்படியான விலை கிடைப்பது அரிது. 

நடப்பாண்டில் தமிழகம், கர்நாடக மாநிலங்களில் மஞ்சள் விளைச்சல் அதிகரித்துள்ளதால் தற்போதைய மஞ்சள் விலை மேலும் சரிவடைய வாய்ப்புகள் அதிகம். 

எனவே, மஞ்சளுக்கு கட்டுப்படியான விலையை நிர்ணயம் செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும். 
ஏற்கெனவே நெல், பருப்பு, கோதுமை, கொப்பரை போன்றவற்றுக்கு அரசு விலை நிர்ணயம் செய்துள்ளதுடன், அரசே நேரடியாக கொள்முதல் செய்து இருப்பு வைத்து தேவையான காலத்தில் பயன்படுத்தி வருகிறது. அதேபோல, விளைச்சல் அதிகரிக்கும் காலங்களில் மஞ்சளை இருப்பு வைத்து, அதனை மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக மாற்றி விற்பனை செய்வதன் மூலம் அரசு கூடுதல் லாபம் ஈட்ட முடியும். 

எனவே மஞ்சளுக்கு அரசே கட்டுப்படியான விலையை நிர்ணயம் செய்து, விவசாயிகளிடம் இருந்து அரசே கொள்முதல் செய்து இருப்பு வைத்து, அதற்கான விலை கிடைக்கும்போது அரசு விற்பனை செய்து கொள்ளலாம். இதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டால் மட்டுமே மஞ்சள் சாகுபடி  விவசாயிகள் நஷ்டத்தில் இருந்து தப்ப முடியும் என்றனர். 

ஏற்றுமதியில் கவனம் தேவை:
தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.சி.ரத்தினசாமி கூறியதாவது: தமிழகத்தில் விளையும் மஞ்சளுக்கு வெளிநாடுகளில் நல்ல "கிராக்கி' உள்ளது. தற்போது இலங்கையில் மஞ்சள் இறக்குமதிக்கு தடை உள்ளதால், இந்தியாவிலிருந்து மஞ்சள் மூட்டைகளை கள்ளத்தனமாக விசைப்படகுகளில் கடத்திச் செல்வது அதிகரித்துள்ளது. 
இலங்கையில் ஒரு கிலோ மஞ்சள் ஆயிரம் ரூபாய் வரை விலை போகிறது. எனவே, இந்த மஞ்சளை கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்திச் செல்வது அதிகரித்துள்ளது. இதனால் அரசுக்கு ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருவாயில் இழப்பு ஏற்படுகிறது.  
இந்த நிலையைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி, அரசு கொள்முதல் செய்த மஞ்சளை வெளிநாடுகளுக்கு நல்ல விலைக்கு ஏற்றுமதி செய்யலாம். இதன்மூலம் நாட்டின் அந்நியச் செலாவணி உயரும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com