ஓர் அறிக்கை, இரு பேட்டிகள்: பிளவை நோக்கிச் செல்கிறதா அதிமுக?
ஓர் அறிக்கை, இரு பேட்டிகள்: பிளவை நோக்கிச் செல்கிறதா அதிமுக?

ஓர் அறிக்கை, இரு பேட்டிகள்: பிளவை நோக்கிச் செல்கிறதா அதிமுக?

பன்னீர்செல்வமோ (எடப்பாடியின் நிலைப்பாட்டை மிக நன்றாகவே அறிந்திருந்தபோதிலும்) சசிகலா விஷயத்தில் கொஞ்சம் அனுசரணையாகக் கட்சித் தலைமை நிர்வாகிகள் முடிவெடுப்பார்கள் என்று கூறியிருக்கிறார்கள்.

பிளவை நோக்கிச் செல்கிறதா அதிமுக? கடந்த சில நாள்களாகக் கட்சிக்குள் நடப்பதாகக் கூறப்படும் சில நிகழ்ச்சிகள் யாவும் இந்தத் திசையில்தான் கைகாட்டுகின்றன என்று சந்தேகிக்கிறார்கள் அதிமுகவினர்.

தொடக்கத்திலேயே இந்த ஓட்டைக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் பெரிய உடைப்பெடுத்துக் கட்சி வீணாகப் போய்விடும் என்றும் இவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இதற்குச் சான்றாக அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி   பழனிசாமி வெளியிட்ட ஓர் அறிக்கையும் இரு பேட்டிகளில் பழனிசாமியும்  கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும் தெரிவித்த கருத்துகளும் காட்டப்படுகின்றன.

சில நாள்களுக்கு முன், புதிதாகப் பொறுப்பேற்ற ஆளுநர் ரவியைச் சென்னையில் கட்சித் தலைவர்களுடன் சென்று சந்தித்த எடப்பாடி கே. பழனிசாமி, பின்னர் செய்தியாளர்களுடன் பேசுகையில், அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்துவது குறித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதிமுக பொதுச் செயலர் என்ற பெயரில் தொண்டர்களுக்கு சசிகலா கடிதம் எழுதுவது, கல்வெட்டில் தன்னைக் கட்சியின் பொதுச் செயலர் என்று குறிப்பிடுவது பற்றிக் கேட்டபோது, மிகக் காட்டமாக, அவர் எது வேண்டுமானாலும் சொல்லட்டும். அதுபற்றி எங்களுக்கு என்ன? நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் நாங்கள்தான் அதிமுக என்று சொல்லிவிட்டது என்றும்  பதிலளித்தார்.

உண்மையான அதிமுக நாங்கள்தான் என்று அறிவித்த பழனிசாமி, சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை. அவர் மீது சட்டப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும், ஏற்கெனவே காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

மறப்போம், மன்னிப்போம் என்ற சசிகலாவின் கருத்து பற்றிக் குறிப்பிட்ட பழனிசாமி, அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்தத் தொடர்புமில்லை என ஏற்கெனவே பலமுறை தெரிவித்துவிட்டோம் என்றார் கறாராக.

ஆனால்...

ஆனால், சசிகலா பற்றிய விஷயங்களில் முடிந்த முடிவாகக் கட்சியின் இணை  ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துவிட்ட நிலையில், தடாலடியாக மதுரையிலிருந்து ஒரு புதிய பந்தை வீசியிருக்கிறார் கட்சி ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம்.

அதிமுகவில் சசிகலாவைச் சேர்த்துக் கொள்வது பற்றிக் கருத்துத் தெரிவித்த ஓ. பன்னீர்செல்வம், இதுகுறித்துக் கட்சித் தலைமை நிர்வாகிகள் முடிவு செய்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களுடன் திங்கள்கிழமை பேசிய அவர், அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், ஆனால், அவர்களை ஏற்றுக்கொள்வது  மக்களின் மனநிலையைப் பொருத்தது என்றிருக்கிறார்.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டு அவர்களுடைய வழிகாட்டலின்படி அதிமுக செயல்பட்டுவருகிறது. சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்வது குறித்து அதிமுகவின் தலைமை நிர்வாகிகள் கூடிக் கலந்துபேசி முடிவெடுப்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார் பன்னீர்செல்வம்.

சசிகலா விஷயத்தில் இவர்கள் இருவரின் நிலைப்பாடுகளும் மாறுபடுவதுடன், பழனிசாமியோ வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக இனி ஒட்டுமில்லை, உறவுமில்லை என்று கறாராக இருக்க, பன்னீர்செல்வமோ (எடப்பாடியின் நிலைப்பாட்டை மிக நன்றாகவே அறிந்திருந்தபோதிலும்) சசிகலா விஷயத்தில் கொஞ்சம் அனுசரணையாகக் கட்சித் தலைமை நிர்வாகிகள் முடிவெடுப்பார்கள் என்று கூறியிருக்கிறார்.

இந்த நிர்வாகிகள் எல்லாம் யார், யார்? இவர்கள் எல்லாம் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி சொல்வதைப் போல பேசுவார்களா, அல்லது ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் சொல்வதைப் போலப் பேசி முடிவெடுப்பார்களா?

வெளிப்படையான, சர்ச்சைக்குரிய, கட்சியின் எதிர்காலத்தைப் பாதிக்கக் கூடிய, தொண்டர்களின் மன உறுதியைக் குலைக்கக் கூடிய ஒரு விஷயத்தில், அதுவும் பத்தாண்டு ஆட்சிக் காலத்துக்குப் பின் தேர்தலில் கட்சி தோற்றுத் தளர்ந்திருக்கும் நிலையில் உயர்நிலையிலுள்ள இவ்விரு தலைவர்களும் இப்படிதான் மாறுபட்டுப் பேசுவார்களா? எனக் கடும் எரிச்சலை வெளிப்படுத்துகிறார்கள் தொண்டர்கள்.

இந்தப் பிரச்சினை இன்று நேற்று தொடங்கவில்லை என்றும் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து நிகழ்ந்துகொண்டுதானிருக்கிறது என்றும் இவர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், மருத்துவக் கவனிப்புக்காகக் கோவையில் இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில் அவர் இல்லாமலேயே, அதனாலென்ன என்கிற பாணியில், ஆளுநரைச் சென்று சந்தித்தார் பழனிசாமி. இவ்விஷயத்தில் தாம் புறக்கணிக்கப்படுவதாக பன்னீர்செல்வம் சங்கடத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

அடுத்த சில நாள்களிலேயே எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமானவர் என அறியப்படும் தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கித் தலைவர் சேலம் ஆர். இளங்கோவன் சம்பந்தப்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனைகள் நடத்தியதும், கட்சி சார்பில் கண்டனம் தெரிவித்துக்  கூட்டறிக்கை வெளியிடக் கேட்டபோது பன்னீர்செல்வம் ஆர்வம் காட்டவில்லை என்கிறார்கள்.

இந்த நிலையில் அக்டோபர் 22 ஆம் தேதி, வழக்கத்துக்கு மாறாக, அதிமுக சார்பில், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி மட்டுமே கையெழுத்திட்ட கண்டன அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்தச் சூழலில்தான், பசும்பொன் தேவர் ஜெயந்தியையொட்டி, தேவர் சிலைக்குப் பொருத்த நன்கொடையாக ஜெயலலிதா வழங்கிய தங்கக்  கவசத்தை வங்கியிலிருந்து பெற்று விழாக் குழுவினரிடம் ஒப்படைத்த பிறகு மதுரையில் செய்தியாளர்களுடன் பேசிய பன்னீர்செல்வம், அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், ஆனால், மக்களின் மனநிலையைப் பொருத்தே அவர்களை ஏற்றுக்கொள்வது அமைகிறது என்று தெரிவித்திருக்கிறார்.

உள்ளபடியே ஓ. பன்னீர்செல்வம் யாரைச் சொல்கிறார், சசிகலாவைத்தான் சொல்கிறாரா, அல்லது எடப்பாடி பழனிசாமியையும் சேர்த்தே சொல்கிறாரா எனக் குழம்பிப் போயிருக்கிறார்கள் தொண்டர்கள். எப்போதும்போல அவருடைய முகபாவனைகளை வைத்து எதையும் அறிய முடியவில்லை என்கிறார்கள் செய்தியாளர்கள்.

இதனிடையே, ஏற்கெனவே ஜெயலலிதா சமாதிக்குச் சென்றுவந்த நிலையில், தேவர் ஜெயந்தி விழாவையொட்டி, அக்டோபர் 29 ஆம் தேதியே  பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்துக்கும் சென்று சசிகலா மரியாதை செலுத்தப் போகிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

என்னடா, அதிமுகவுக்கு வந்த சோதனை? என்பதுதான் கட்சியின் அடிநிலைத் தொண்டர்களின் இப்போதைய முணுமுணுப்பு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com