இன்று முதல் எதன் விலையெல்லாம் உயருகிறது? ஒரு அலசல்

மத்திய அரசு மாற்றியமைத்த ஜிஎஸ்டி வரி விகிதங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருவதால், எதன் விலைகள் எல்லாம் குறைகின்றன, எதன் விலைகள் எல்லாம் அதிகரிக்கின்றன என்பது குறித்து ஒரு அலசல்.
இன்று முதல் எதன் விலையெல்லாம் உயருகிறது? ஒரு அலசல்
இன்று முதல் எதன் விலையெல்லாம் உயருகிறது? ஒரு அலசல்

மத்திய அரசு மாற்றியமைத்த ஜிஎஸ்டி வரி விகிதங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருவதால், எதன் விலைகள் எல்லாம் குறைகின்றன, எதன் விலைகள் எல்லாம் அதிகரிக்கின்றன என்பது குறித்து ஒரு அலசல்.

பண்டல் செய்யப்பட்ட அரிசி, தானியங்கள் உள்ளிட்டவற்றுக்கு 5 சதவீத சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) விதிப்பதற்கு அண்மையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு, இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

பண்டல் செய்யப்பட்ட உணவுப் பொருள்களும் இனி ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் சில உணவுபொருள்களின் விலைகள் அதிகரிக்கவிருக்கின்றன.

ஜிஎஸ்டி கவுன்சிலின் 47வது கூட்டத்தில், அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் பொருள்கள் மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஜிஎஸ்டி வரிக்குள் வராத, ஒரு முறை மட்டும் பண்டல் செய்யப்பட்டு அடையாளமிடப்படும் பருப்பு, தானியம், மாவுப் பொருள்கள் 25 கிலோ வரை இருந்தால் அவை இன்று முதல் ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வரப்பட்டு அவற்றுக்கு 5 சதவீத வரி விதிக்கப்படுகிறது.

இது மட்டுமல்ல, சில்லறை விற்பனைக்கு ஏற்ற வகையில், சிறுசிறு பொட்டலமிடப்பட்ட ஏராளமான பண்டல் அடங்கிய ஒரு பெரிய பண்டலும் ஜிஎஸ்டி வரம்புக்குள் வரும். உதாரணத்துக்கு 10 கிலோ எடைகொண்ட பத்து பண்டல்கள் கொண்ட பெரிய பண்டல்.

அதாவது, மத்திய நேரடி வரி வருவாய் வாரியம் இது குறித்துக் கூறுகையில், முன்கூட்டியே பண்டல் செய்யப்பட்ட உணவுப் பண்டமானது அங்கு விற்பனை செய்யப்பட்டாலும் செய்யப்படாவிட்டாலும் அடையாளமிடப்பட்டதில் கூறப்பட்டிருக்கும் எடையுடன் இருக்கும். எனவே, அளவையியல் சட்ட விதிப்படி, ஒரு குறிப்பிட்ட பண்டம் குறிப்பிட்ட எடையுடையது என்று அடையாளமிடப்பட்டாலே அது ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கிறது.

எந்தெந்த பொருள்களின் விலைகள் உயர்கின்றன?

முன்கூட்டியே பண்டல் செய்யப்பட்ட மற்றும் முன்கூட்டியே அடையாளமிடப்பட்ட சில்லறை விற்பனைக்குக் கொண்டு வரும் உணவுப் பொருள்கள் அளவையியல் சட்ட விதிப்படி இனி பண்டலிடப்பட்டு அடையாளமிடப்பட்ட தயிர், லஸ்ஸி, மோர் ஆகியவை 5% ஜிஎஸ்டி வரிவிகிதத்தின் கீழ் வருகிறது. இவை முதலில் ஜிஎஸ்டி வரி விலக்கில் இருந்தது.

அரிசி, கோதுமை மற்றும் மாவுப்பொருள்கள் மற்றும் இதுபோன்ற பருப்பு மற்றும் தானியங்கள் 25 கிலோ அல்லது 25 லிட்டருக்கு உள்பட்ட பொட்டலங்கள் இதே 5% ஜிஎஸ்டிக்குள் வருகிறது. அதன் காரணமாக, பண்டல் செய்யப்பட்ட அரிசி, கோதுமை, பருப்பு, தயிா், பன்னீா் ஆகியவற்றின் விலைகள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதுபோல, தலா பத்து கிலோ எடைகொண்ட 10 மாவுப் பொட்டலங்கள் அடங்கிய பெரிய பொட்டலமும் இந்த 5% விகிதத்துக்குள் வருகிறது. 

இந்த மாற்றம் காரணமாக விலை உயர வாய்ப்புள்ள பொருள்கள்: அச்சுப் பிரதி, எழுத அல்லது வரைவதற்கு பயன்படும் இங்க், வெட்டும் கத்திகள், பென்சில் ஷாா்பனா்கள், சுரண்டிகள், ஃபோா்க்ஸ், என்இடி விளக்குகள், வரைவதற்கான உபகரணங்கள் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது.

காசோலைகளை வழங்குவதற்கு வங்கிகள் வசூலிக்கும் கட்டணத்துக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. சாலைகள், பாலங்கள், ரயில்வே, மெட்ரோ, சுத்திகரிப்பு ஆலைகள், மயான கட்டுமான பணி ஒப்பந்தங்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது.

ரிசா்வ் வங்கி, ஐஆா்டிஏ, செபி போன்ற ஒழுங்கு நடைமுறை அமைப்புகளின் சேவைகளுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட உள்ளது.

உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு அமைப்புகளுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட உள்ளது. ரூ. 1,000-க்கும் குறைவாக ஒருநாள் வாடகை கொண்ட ஹோட்டல் அறைகள், அட்லஸ், மேப் உள்ளிட்ட வரைபடங்களுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது.

சூரிய சக்தியில் இயங்கும் சோலாா் வாட்டா் ஹீட்டா்களுக்கான ஜிஎஸ்டி 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது.

பண்டல் செய்யப்பட்ட அரிசி, கோதுமை, பருப்பு, தயிா், பன்னீா் உள்ளிட்ட பொருள்களுக்கும், ரூ. 5,000-க்கும் மேல் ஒருநாள் வாடகை கொண்ட மருத்துவமனை அறைகளுக்கும் 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது.

எதற்கெல்லாம் விலை குறையும்?

சரக்கு மற்றும் பயணிகள் சாலைப் போக்குவரத்து வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. சரக்கு வாகனங்கள் மற்றும் லாரிகளை வாடகைக்கு எடுப்பதற்கு விதிக்கப்பட்டுவந்த 18 சதவீத ஜிஎஸ்டி 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாடகை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மேற்கு வங்கத்தின் பக்தோக்ரா நகரத்திலிருந்து விமானத்தில் ‘எகானமி’ வகுப்பில் பயணிப்பதற்கு ஜிஎஸ்டி-யிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மின்சார வாகனங்கள் பேட்டரி பொருத்தப்பட்ட அல்லது பொருத்தப்படாமல் இருந்தாலும் ஜிஎஸ்டி விதிப்பில் 5 சதவீத சலுகை பெற தகுதி அளிக்கப்பட்டுள்ளது.

என்னசொல்கிறது ஜிஎஸ்டி வரிவிகித மாற்றம்?

ஜிஎஸ்டி வரம்புக்குள் பண்டலிடப்பட்ட உணவுப் பொருள்கள் கொண்டு வரப்பட்டிருப்பது மற்றும் மக்கள் பயன்படுத்தும் பொருள்களுக்கான ஜிஎஸ்டி விகிதம் அதிகரிக்கப்பட்டிருப்பதால் விலை உயரும் பொருள்களின் பட்டியல் அதிகமாகவும், ஜிஎஸ்டி வரிவிலக்கு மற்றும் விலை குறைப்பு போன்றவை ஏழை, எளிய, அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்போருக்கு எந்த வகையிலும் பயன்படாததாக இருப்பதால் அதன் பட்டியல் காற்றுப்போன டயர்போல இருப்பதாகவும் மக்கள் கருதுவதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com