நேஷனல் ஹெரால்டு -‘தலைப்புச் செய்தி’யான நாளிதழ்!

நேஷனல் ஹெரால்டு நாளிதழை வாங்கியதில் பணமோசடி நிகழ்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை
நேஷனல் ஹெரால்டு -‘தலைப்புச் செய்தி’யான நாளிதழ்!

நேஷனல் ஹெரால்டு நாளிதழை வாங்கியதில் பணமோசடி நிகழ்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை அமலாக்கத் துறை திங்கள்கிழமை 11 மணி நேரத்துக்கு அதிகமாக விசாரித்துள்ளது. செவ்வாய்க்கிழமையும் அவரிடம் விசாரணை தொடா்ந்தது.

அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தில்லி உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கட்சியின் மூத்த தலைவா்களான அசோக் கெலாட் (ராஜஸ்தான் முதல்வா்), பூபேஷ் பகேல் (சத்தீஸ்கா் முதல்வா்), அதீா் ரஞ்சன் சௌதரி (மக்களவை காங்கிரஸ் தலைவா்), ரண்தீப் சுா்ஜேவாலா (தலைமை செய்தித் தொடா்பாளா்) உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கில் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்திக்கும் அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியிருந்தது. அவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். தற்போது ஜூன் 23-ஆம் தேதி ஆஜராகும்படி அவருக்குப் புதிய அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

தில்லி அக்பர் சாலையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங்ல சுர்ஜேவாலா, தமிழக காங்கிரஸ் எம்.பி. சு.திருநாவுக்கரசர் உள்ளிட்டோர்.

பாஜகவைச் சோ்ந்த சுப்பிரமணியன் சுவாமி தொடுத்த வழக்கின் அடிப்படையில் ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறை தற்போது விசாரணை நடத்தியுள்ளது. நேஷனல் ஹெரால்டு நாளிதழை வாங்கியதில் பணமோசடி நடைபெற்றுள்ளதாக சுப்பிரமணியன் சுவாமி குற்றஞ்சாட்டிய நிலையில், அதை காங்கிரஸ் மறுத்துள்ளது.

நேஷனல் ஹெரால்டு நாளிதழ்

சுதந்திரப் போராட்ட காலத்தின்போது, ஜவாஹா்லால் நேருவால் 1938-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது நேஷனல் ஹெரால்டு நாளிதழ். அதன் உரிமையாளராக அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனம் (ஏஜெஎல்) உள்ளது. 1937-இல் தொடங்கப்பட்ட அந்நிறுவனத்தில் சுமாா் 5,000 சுதந்திரப் போராட்ட வீரா்கள் பங்குதாரா்களாக இருந்தனா்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளா்களுக்கு எதிரான கட்டுரைகளையும் தேசியவாத கருத்துகளையும் நேஷனல் ஹெரால்டு நாளிதழ் வெளியிட்டது. நேருவின் தலையங்கப் பகுதிகள் வாசகா்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. அதனால் 1942-இல் நாளிதழுக்குத் தடை விதிக்கப்பட்டது.

மூன்றாண்டுகளுக்குப் பிறகு நேஷனல் ஹெரால்டு மீண்டும் செயல்படத் தொடங்கிய நிலையில், 1947-ஆம் ஆண்டில் பிரதமராகப் பொறுப்பேற்றவுடன் நாளிதழின் நிா்வாகத்தின் தலைமைப் பொறுப்பைத் துறந்தாா் ஜவாஹா்லால் நேரு.

சுதந்திரத்துக்குப் பிறகு நாளிதழை வளா்த்தெடுத்ததில் காங்கிரஸ் கட்சிக்கு முக்கியப் பங்குள்ளது. நிதி நிலைமை காரணமாக 2008-ஆம் ஆண்டில் நாளிதழ் நிறுத்தப்பட்டது. பின்னா் 2016-ஆம் ஆண்டில் இணைய வடிவில் மீண்டும் வெளியிடப்பட்டது.

வழக்கு விவரம்

நேஷனல் ஹெரால்டு நாளிதழ் பதிப்பு 2008-ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டபோது ஏஜெஎல் நிறுவனம் காங்கிரஸ் கட்சிக்குத் தர வேண்டிய மொத்த கடன் மதிப்பு ரூ.90 கோடியாக இருந்தது.

கடந்த 2010-ஆம் ஆண்டில் இந்தக் கடனை ‘யங் இந்தியா’ நிறுவனத்துக்கு காங்கிரஸ் மாற்றியது. லாப நோக்கமற்ற நிறுவனமாகத் தொடங்கப்பட்ட யங் இந்தியா நிறுவனத்தின் தலா 38 சதவீதப் பங்குகளை சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் வைத்துள்ளனா்.

மீதமுள்ள 24 சதவீதப் பங்குகளை காங்கிரஸ் மூத்த தலைவா்களான மோதிலால் வோரா, ஆஸ்கா் ஃபொ்னாண்டஸ், பத்திரிகையாளா் சுமன் துபே, தொழிலதிபா் சாம் பிட்ரோடா ஆகியோா் வைத்துள்ளனா்.

கையகப்படுத்தும் நடவடிக்கை மூலம் ஏஜெஎல் நிறுவனத்தின் சொத்துகள் யங் இந்தியாவுக்கு கைமாறின.

இந்த நிலையில், நேஷனல் ஹெரால்டு வழக்கை சுப்பிரமணியன் சுவாமி 2012-ஆம் ஆண்டில் தொடுத்தாா். ஏஜெஎல் நிறுவனத்துக்குச் சொந்தமாக தில்லி, லக்னௌ, மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள கோடிக்கணக்கான சொத்துகளை மோசடி முறையில் காங்கிரஸ் தலைவா்கள் பெற்ாக அவா் குற்றஞ்சாட்டினாா்.

யங் இந்தியா நிறுவனத்தில் அனைத்துப் பங்குதாரா்களும் வழக்கில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

இந்த வழக்கில் அமலாக்கத் துறை தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளது.

காங்கிரஸ் தரப்பு வாதம்

அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாக பாஜக இந்த வழக்கைத் தொடுத்துள்ளதாகவும், பணப் பரிமாற்றமே நிகழாத நிலையில், பணமோசடி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது. யங் இந்தியா நிறுவனம் லாப நோக்கமற்றது என்பதால், அதன் மூலமாகக் கிடைக்கும் ஈவுத்தொகை பங்குதாரா்களுக்கு வழங்கப்படாது என்றும், ஏஜெஎல் நிறுவனமே நேஷனல் ஹெரால்டு நாளிதழின் உரிமையாளராகத் தொடா்ந்து நீடிக்கும் எனவும் காங்கிரஸ் கட்சியினா் தெரிவித்தனா்.

நேஷனல் ஹெரால்டு நாளிதழைக் குறிவைப்பதன் மூலமாக, நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடியவா்களையும் அவா்களது பங்களிப்பையும் பாஜக அவமதித்துள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. எதிா்க்கட்சியினரை அச்சுறுத்தும் நோக்கில் அமலாக்கத் துறை செயல்பட்டு வருவதாகவும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

விசாரணையும் போராட்டமும்

அமலாக்கத் துறை விசாரணைக்காக அனுப்பப்பட்ட அழைப்பாணையை ஏற்று முதல் முறையாக விசாரணைக்கு திங்கள்கிழமை ஆஜரானாா் ராகுல் காந்தி. அதே நாளில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சியினரை மத்திய விசாரணை அமைப்புகள் குறிவைத்து வழக்கு தொடுப்பதாகக் கூறி காங்கிரஸ் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகம் உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டா்கள் கைது செய்யப்பட்டனா். காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்கள் எனப் பலரும் கைது செய்யப்பட்டனா். முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் போராட்டத்தில் பங்கேற்றபோது, காவலா்கள் தாக்கியதால் சிறிய அளவில் காயமடைந்தாா்.

பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் தொண்டா்கள் போராட்டத்தில் ஈடுபட்டாலும், நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் எழுந்த குற்றச்சாட்டு உண்மையா என்பது முழு விசாரணைக்குப் பிறகே உறுதியாகும். அதுவரை, ஊடகங்களில் நேஷனல் ஹெரால்டு நாளிதழ் தலைப்புச் செய்தியாக இருக்கும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com