சுகம் தரும் சித்த மருத்துவம்: தூக்கமின்மையை போக்கி, நினைவாற்றலை அதிகரிக்குமா 'வாடிகம்'..?  

தூக்கம் என்பதை இரவில் தான் தூங்க வேண்டும் என்பதை நமது முன்னோர்கள் வகுத்துள்ளனர். பகலில் தூங்கினால் அனைத்து விதமான வாத நோய்களும் வந்தடையும் என்கிறது பதார்த்த குணசிந்தாமணி எனும் சித்த மருத்துவ நூல். 
சுகம் தரும் சித்த மருத்துவம்: தூக்கமின்மையை போக்கி, நினைவாற்றலை அதிகரிக்குமா 'வாடிகம்'..?  


இரவில் விரைவில் படுக்கைக்கு செல்வதும், அதிகாலையில் எழுவதும் உடல் நலத்திற்கு நன்மை தரும் என்பது நம் முன்னோர்கள் கணிப்பு. இதனை இன்றைய அறிவியலும் உறுதி செய்துள்ளது. ஆனால், இன்றோ கணினி மயமாகிவிட்ட உலகில் இரவுப்பணி என்பது தனியான வாழ்வியல் நெறிமுறை ஆகிவிட்டது. தூக்கம் வராமல் இருக்க இரவில் காபி, டீ குடிப்பதும் நவீன வாழ்வியலுக்கு உதாரணமே.

தூக்கம் என்பதை இரவில் தான் தூங்க வேண்டும் என்பதை நமது முன்னோர்கள் வகுத்துள்ளனர். பகலில் தூங்கினால் அனைத்து விதமான வாத நோய்களும் வந்தடையும் என்கிறது பதார்த்த குணசிந்தாமணி எனும் சித்த மருத்துவ நூல். 

இரவுப்பணிக்கு செல்வோர் நிலைமை மட்டுமல்ல, இரவில் அலைபேசியை பயன்படுத்தி தூக்கத்தை தவறவிட்டவர்களின் நிலைமையும் அதே தான். இரவில் தூக்கம் கெடுதி உடலில் ஹார்மோன் சுழற்சியில் மாறுபாடுகளை உண்டாக்குவதாகவும் உள்ளது.  இத்தகைய வாழ்வியல் மாற்ற நெறிமுறைகளால் தூக்கத்தை தொலைத்து நினைவாற்றலை இழப்பவர்கள் ஏராளம்.

உலக அளவில் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களில் 9 சதவீதம் பேர் தூக்கமின்மையால் அவதிப்படுவதாக கூறும் ஆய்வுகள், 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 35-50 சதவீதம் பேர் தூக்கமின்மையில் உள்ளதாக தெரிவிப்பது என்பது வயோதிகப் பருவத்தில் கூடுதல் வருத்தம் தருவது.  

தூக்கம் கெடுதியால் வரும் நோய்கள் பற்றியும் சித்த மருத்துவ நூல்கள் பேசுகின்றன. அதில் முக்கியமாக தூக்கம் கெடுவதால் நினைவாற்றல் குறைவதாகவும் உள்ளது. அதிகாலையில் எழுந்து படிப்பதே நினைவாற்றலை அதிகரிக்கும் செயல். இரவில் எவ்வளவு தான் தூக்கம் கெட்டு படித்தாலும் நினைவாற்றல் சிறப்பாக இருப்பதில்லை என்கிறது சமீபத்திய சில ஆய்வுகள். 

பள்ளி, கல்லூரி தேர்வுகள் நெருங்கும் நேரங்களில் “டாக்டர் என் பையன் எவ்வளவு படித்தாலும் மறந்து விடுகிறான், அவனுக்கு நினைவுத்திறன் குறைவாக உள்ளது” என்று வருத்தப்படும் பெற்றோர்கள் ஏராளம். அதே போல், தூக்கம் கெட்டு படிப்பதாலும், பணி புரிவதாலும் உண்டாகும் மன அழுத்தமும் ஒன்று சேர்ந்து அதனால் பலப்பல துன்பம் அடைகின்றனர். படுக்கையில் படுத்த உடனே தூக்கம் என்பது பலருக்கு இன்று எட்டாக்கனியாக மாறிவிட்டது.

“டாக்டர் இரவில் தூக்கம் சரியாகவே வரவில்லை, நடு நடுவே விழிப்பும் உண்டாகிவிடுகிறது, தூங்கி எழும்போது ஒரு புத்துணர்ச்சி என்பதே இல்லை” என்று தூக்கத்திற்கு ஏங்குபவர்கள் ஏராளம். 

இத்தகைய தூக்கமின்மையை போக்கி நினைவாற்றலை அதிகரிக்க, மன வளத்தை மேம்படுத்த ஏதேனும் எளிய மூலிகை இருப்பின் அது இன்றைய இளைஞர்களுக்கு மிகப்பெரிய இயற்கை தந்த நன்கொடை தான்.

அப்படிப்பட்ட ஒரு சித்த மருத்துவ மூலிகை தான் ‘வாடிகம்’ எனும் ‘பிரமி’. வாடிகம் என்ற சொல்லின் பொருளை ஆராயுமிடத்து அறிவு வாடிய காலத்து மூளையின் செயல்திறனை தூண்டி அறிவை செம்மைப்படுத்தும் தன்மையை பெற்றுள்ள மூலிகை என்று பொருள் விளங்குவது சிறப்பு.

பிரமி எனும் எளிய மூலிகை நீர்பாங்கான இடங்களில் வளரும் சிறிய கீரை வகை தான். சித்த மருத்துவம் கூறும் வாதம், பித்தம், கபம் இவை மூன்றில் தூக்கமின்மைக்கான முதன்மைக் காரணம் ‘வாதம்’ தான். துரித உணவு முறையால், நவீன வாழ்வியல் முறையால் உடலில் அதிகரிக்கும் வாதம் மூளையை பாதித்து, இயல்பான தூக்கத்தைக் கெடுத்து தூக்கமின்மையை உண்டாக்குவதாக சித்த மருத்துவம் கூறுகின்றது. பிரமி கீரையானது துவர்ப்பும், கசப்பும் கலந்த சுவையுடைய மூலிகை. இது வாதம், பித்தம் இவை இரண்டையும் சீர் செய்யும் தன்மை உடையது.

பிரமி கீரையில் உள்ள பாகோசைடு எனும் அல்கலாய்டு வேதி மூலக்கூறுகள் அதன் மருத்துவ குணத்திற்கு காரணமாக உள்ளது. அது பாகோசைடு ஏ மற்றும் பி ஆகிய இரண்டு வகையாக உள்ளது. இந்த மூலப் பொருட்களால் இது வீக்கமுருக்கியாகவும், உடல் வெப்பத்தை தணிப்பதாகவும், மன பதட்டத்தைக் குறைப்பதாகவும்,  மன அழுத்தத்தை போக்குவதாகவும், நரம்புகளை வன்மைபடுத்துவதாகவும், ஆண்மையை பெருக்குவதாகவும், ஞாபக மறதி நோயை தடுப்பதாகவும், நினைவாற்றலை அதிகரிப்பதாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரமியின் முக்கிய செயலியல் கூறுகளில் பிராமைன், ஹெர்பெஸ்டைன் போன்ற பல்வேறு அல்கலாய்டுகள் அடங்கும். மேலும் டி-மேன்னிடால் மற்றும் ஹெர்சபோனின் மற்றும் மோன்னியரின் போன்ற சபோனின்கள் உள்ளன. இதில் உள்ள பேகோசைடு ஏ எனும் அல்கலாய்டு ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மையும், நினைவாற்றலை மேம்படுத்தும் செயல்பாட்டையும் கொண்டுள்ளது.

மேலும் பாகோசைடு ‘ஏ’ மற்றும் ‘பி’ ஆகிய வேதிப்பொருட்கள் நரம்பு செல்களுக்கு (நியூரான்களுக்கு) இடையே உள்ள தூண்டுதல்களின் பரிமாற்றத்தை மேம்படுத்துகிறது. மேலும் சேதமடைந்த நியூரான்களை சரிசெய்து, புதிய தகவல்களைக் கற்றுக்கொள்வதையும் நினைவில் வைத்திருப்பதையும் எளிதாக்குகிறது.

பிரமி கீரையின் சிறப்பம்சமானது என்னவெனில், இது மூளையில் செரோடோனின் உற்பத்தியை அதிகரித்து இயல்பான தூக்கம் வர வழிவகையும் செய்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.

தூக்கமின்மையை போக்க விரும்பும் பலரும் மருந்து மாத்திரைகளை நாடாமல் மெனக்கெட்டு கீரை சந்தையை நாடுவது நல்லது. பிரமி கீரையை அவ்வப்போது நெய் விட்டு வதக்கி உண்ண அதன் மருத்துவ குணங்கள் அனைத்தும் கிடைக்கும். இயல்பான உறக்கத்தைத் தூண்டும் மனதிற்கு நிம்மதியும் தரும்.

பிரமி கீரை

சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள ‘பிரமி நெய்’ எனும் சித்த மருந்தினை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக்கொள்ள நினைவாற்றலை பெருக்கி மதிப்பெண்களை உச்சம் தொட வைக்கும். அது மட்டுமின்றி ‘பிரமி தைலம்’ எனும் சித்த மருந்தினைக் கொண்டு வாரம் இருமுறை எண்ணெய் குளியல் எடுப்பதும் நல்லது. அல்லது பிரமி தைலத்தைக் இரவில் ஐந்து முதல் பத்து சொட்டு வரை பாலில் கலந்து எடுத்துக்கொள்ள தூக்கமின்மையைப் போக்கி உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி தரும். தொடர்ந்து மூன்று மாதத்திற்கு மேல் தொடரும் தூக்கமின்மை நாள்பட்ட இன்சோம்னியா (தூக்கமின்மை) என்று கருதப்படும். அத்தகைய நிலையிலும் பிரமி சேர்ந்த மருந்துகளை பயன்படுத்தி பயனடையலாம்.

கிட்டத்தட்ட ஆண்டு ஒன்றுக்கு 1000 டன் அளவுக்கு பிரமி மூலிகையின் வர்த்தகம் உலக அளவில் நடைபெற்றுக்கொண்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த வர்த்தகம் அதன் நினைவாற்றலை அதிகரிக்கும் தன்மைக்காகவே என்பது சிறப்பு. ஆனால், பிரமி கீரையின் தாய் வீடான நம்ம ஊரில் அது மறந்து போன மூலிகை ஆகிவிட்டது என்பது வருத்தமே. அதை பயன்படுத்த தொடங்கி இருந்தால் நிச்சயம் மறந்திருக்க முடியாது. 

இவ்வளவு சிறப்பு வாய்ந்த சித்த மருத்துவ மூலிகையை உணவாகவோ, மருந்தாகவோ பயன்படுத்த உடலும், மனமும் வளம் பெறும் என்பது திண்ணம். ஞாபக மறதி நிலை நம்ம ஊர் பக்கமே வராது என்பதும் வெளிப்படையான உண்மை. அதனை பயன்படுத்தி சுகமடைவோம்.

மருத்துவரின் ஆலோசனை மற்றும் தொடர்புக்கு இ-மெயில்– drthillai.mdsiddha@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com