FOLLOW US

ON GOOGLE DISCOVER

24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!சென்னை ஐஐடியில் ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய்- மகன்!மூன்றாவது மொழி! சிபிஎஸ்இ மாணவர்களுக்கு இந்த ஆண்டு மட்டும் விலக்கு!மீண்டும் தலைதூக்கும் கரோனா பாதிப்பு! இந்த அறிகுறிகள் இருந்தால் கவனம்!கைரேகை, கருவிழி ஒற்றுமையுடன் இரட்டையர்கள்! ஆதார் புதுப்பிக்க என்னதான் வழி?அதிமுக எம்எல்ஏக்களை திருடும் முதல்வர் விஜய்தான் களவாணி: எடப்பாடி பழனிசாமிஅகழாய்வுப் பணிகளை தவெக அரசு தொடர வேண்டும்! மு.க. ஸ்டாலின் லண்டனில் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட மு.க. ஸ்டாலின்!மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!
/

நீட் மோசடிக்கு எதிராகத் தொடரும் உண்ணாவிரதம்! வெற்றி பெறுமா, சோனம் வாங்சுக்கின் போராட்டம்?

நீட் மோசடிக்கு எதிராகத் தொடரும் சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதப் போராட்டத்தின் நிலை குறித்து...

News image

சோனம் வாங்சுக் - பிடிஐ

Updated On :14 ஜூலை 2026, 6:17 pm IST

நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் லடாக்கைச் சேர்ந்த சமூக ஆர்வலரான சோனம் வாங்சுக். இவர் உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கி இன்றோடு 16 நாள்கள் ஆகின்றன.

ஆடல், பாடல், கதை கூறல் என பல்வேறு கலை வடிவங்களுடன் மேடையில் அமர்ந்து போராட்டம் நடத்தியவர், தற்போது அமரக்கூட முடியாதபடி படுத்துக்கொண்டு உண்ணாவிரத போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார். அவரின் உடல்நிலையும் கடுமையாக மோசமடைந்து, தற்போது வயிறு வலிக்கத் தொடங்கியுள்ளதாக கூறுகிறது கரப்பான்பூச்சி மக்கள் கட்சி.

இவ்வாறு தீவிரமாக உண்ணாவிரதம் இருந்துவரும் சோனம் வாங்சுக்கை அரசாங்கமோ, அமைச்சர்களோ, அவர் போராட்டம் நடத்திவரும் ஜந்தர் மந்தர் இடம் இருக்கும் தில்லியின் பிரதிநிதிகளோ அல்லது மக்களோ என யாரும் அவரைக் கண்டுகொள்ள மறுக்கிறார்கள். அவர் போராட்டம் நடத்திவரும் ஜந்தர் மந்தர் திடலைப் பார்த்தாலே அது தெரிந்துவிடும்.

மேடை அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு அருகே கரப்பான் பூச்சி மக்கள் கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே உள்பட ஒருசிலர் மட்டுமே அவருடன் இருக்கின்றனர். தில்லி எதிர்க்கட்சியான ஆம் ஆத்மியின் தலைவர்கள் அவ்வபோது அவரை வந்து நலம் விசாரித்துச் செல்கின்றனர்.

மேடையின் எதிரே சிலர் சைக்கிள் ஓட்டியபடியும், சிலர் நடந்து சென்றுகொண்டும், அவரை விடியோ எடுத்துக்கொண்டும் இருக்கின்றனர். ஆனால், அவரின் போராட்டத்தின் தீவிரத்தை புரிந்துகொண்டு ஆதரவு எண்ணிக்கை அதிகரித்ததா? என்றால் இல்லை என்றே சொல்லலாம்.

Story image

கரப்பான் பூச்சி மக்கள் கட்சியின் 2.18 கோடி பேர் எங்கே?

நாட்டில் உரிமைக்காகப் போராடும் வேலையில்லாத இளைஞர்களை கரப்பான் பூச்சி போன்றவர்கள், சமூகத்தின் ஒட்டுண்ணிகள் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் விமர்சித்த கருத்தால் ஆவேசமடைந்து இளைஞர்கள் உருவாக்கியதுதான் கரப்பான்பூச்சி மக்கள் கட்சி.

ஆளும் பாரதிய ஜனதா கட்சியையும் குற்ற வழக்குகளை பின்னணியாகக் கொண்ட அக்கட்சியின் சில தலைவர்களையும் பகடி செய்யும் விதமாக வெளிநாட்டில் இருந்த அபிஜீத் தீப்கே என்பவர் கரப்பான்பூச்சி மக்கள் கட்சி என்ற சமூக வலைதளப் பக்கத்தை உருவாக்கினார்.

பகடியாக உருவாக்கப்பட்ட இந்த இயக்கத்தில், மிகக் குறுகிய காலத்திலேயே பல இளைஞர்கள் இணைந்தனர். அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்ட கட்சியில் இணையும் உறுப்பினர்களின் வேகத்தை விட தன்னெழுச்சியாக இதில் இணைந்தவர்கள் அதிகம்.

குறுகிய காலத்திலேயே லட்சக்கணக்கில் இளைஞர்கள் இணைந்துள்ளதாகச் செய்திகளும் வெளியாகின. வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என ஒட்டுமொத்த அரசியல் அமைப்பு மீதான தங்களின் ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் இளைஞர்களின் கூட்டமாக கரப்பான்பூச்சி மக்கள் கட்சி உருவானது.

வங்கதேசத்தில் இளைஞர்கள் தன்னெழுச்சியாகக் கூடி அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு நாட்டையே சூறையாடினர். அரசு சொத்துகள் உள்பட பொதுச்சொத்துகள் பல சேதமடைந்தன. அவற்றை மதிப்பிட்டால், அந்நாடு மீண்டும் இயல்பு நிலைக்கு வருவதற்கு சில ஆண்டுகள் தேவைப்படும்.

ஆனால், அவ்வாறு ஆக்ரோஷமாக இல்லாமல், ஆக்கப்பூர்வமாக தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்வதாக இந்திய இளைஞர்கள் வெகுவாகப் பாராட்டப்பட்டனர். அரசின் மீதான அதிருப்தியை, எதிர்ப்பை அரசியலமைப்புச் சட்டத்திற்குள்பட்டு வெளிப்படுத்துவதாக கரப்பான்பூச்சி மக்கள் கட்சியை பலர் பாராட்டினர்.

தில்லியில் நீட் முறைகேடுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது நாட்டையே திரும்பிப் பார்க்கவைத்தது. வெளிநாட்டு நாளிதழ்களிலும் கரப்பான்பூச்சி மக்கள் கட்சி இளைஞர்களின் போராட்டம் இடம்பெற்றது.

இதேபோன்று, சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து இளைஞர்கள் இன்னும் அதிக அளவில் கூடியிருக்க வேண்டும். 2.18 கோடி உறுப்பினர்களைக் கொண்டுள்ள கரப்பான்பூச்சி மக்கள் கட்சியில் இருந்து பகுதி அளவேனும் ஆதரவாக நின்றிருக்க வேண்டும்.

Story image

உண்ணாவிரதம் தேவையில்லை

நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி ஜூன் 20 ஆம் தேதி முதல் கரப்பான்பூச்சி மக்கள் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. லடாக்கை சேர்ந்த சமூக ஆர்வலரான சோனம் வாங்சுக், இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஜூன் 28 ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அவர், மற்ற இளைஞர்களை உண்ணாவிரதம் இருந்து ஆதரவு கொடுக்க வேண்டும் என அழைக்கவில்லை. இளைஞர்கள் உண்ணாவிரதம் இருக்கத் தேவையில்லை; ஒருநாளாவது போராட்டத்தில் உடன் நின்று பங்கேற்றால் போதும் என்கிறார்.

இது தொடர்பாக உண்ணாவிரத மேடையில் இருந்தவாறு விடியோ வெளியிட்டுள்ள அவர்,

பெரும்பாலான மக்கள் என்னை 21 ஆம் நூற்றாண்டின் நவீன காந்தி என்று அழைக்கிறார்கள். சிலர் என்னை நாயகன் என்று அழைக்கின்றனர். இதுபோன்ற கருத்துகள் எனக்கு சங்கடமாக உள்ளன. நான் காந்தியும் அல்ல; நாயகனும் அல்ல. என் பொறுப்புகளை நிறைவேற்ற முயற்சி செய்கிற சாதாரன குடிமகன் அவ்வளவுதான்.

ஆகவே என்னை காந்தி, நாயகன் என்றெல்லாம் அழைக்காதீர்கள். நாட்டின் குடிமக்களாக உங்கள் பொறுப்பை நிறைவேற்றுங்கள்.

நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்களை உங்கள் சகோதர சகோதரிகளாக உணர்ந்தால் எங்களுடன் இணைந்திருப்பீர்கள். ஜந்தர் மந்தரில் நிகழும் இந்தப் போராட்டத்தில் ஒரு நாளாவது பங்கேற்க முயற்சியுங்கள்.

எங்களைப் போல நீங்களும் பட்டினியாக இருக்க வேண்டியதில்லை. உணவு உண்ட பிறகு வாருங்கள். ஆனால் குடிமக்களாக பொறுப்பேற்று வரும் ஜூலை 20 அன்று எங்களுடன் இணையுங்கள் என்று சோனம் வாங்சுக் கோரிக்கை வைத்துள்ளார்.

ஜூலை 11 ஆம் தேதி சோனம் வாங்சுக் இந்த கோரிக்கையை வைத்தார். அதன் பிறகேனும் ஒருசில இளைஞர்கள் அவருக்கு ஆதரவு கொடுத்து அங்கு வந்திருக்க வேண்டும். ஆனால், நிலையையில் ஒரு மாற்றமும் ஏற்படவில்லை என்கிறது கரப்பான்பூச்சி மக்கள் கட்சி.

சோனம் வாங்சுக் உடன் கரப்பான்பூச்சி மக்கள் கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே

சோனம் வாங்சுக் உடன் கரப்பான்பூச்சி மக்கள் கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே - பிடிஐ

இளைஞர்களை நம்பும் சோனம் வாங்சுக் யார்?

லாடாக்கைச் சேர்ந்த சோனம் வாங்சுக் சமூக ஆர்வலராக பலரால் அறியப்படுகிறார். ஆனால் உண்மையில் அவர் ஒரு அறிவியல் அறிஞர். பொறியியல் பட்டதாரியான சோனம், லடாக் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் தங்கும் கூடாரங்களில், குளிர்காலத்தில் வெப்பமூட்டுவதற்காக சூரிய ஆற்றல் மூலம் மின்சாரம் பெறும் நடமாடும் வெப்பமூட்டும் கருவிகளை நிறுவினார். இதன் மூலம் லடாக் போன்ற பனிமலைப் பிரதேசங்களில் சேவையாற்றும் 50 ஆயிரம் வீரர்கள் பயனடைந்து வருகின்றனர்.

2013 ஆம் ஆண்டுல் லடாக் மாணவர் இயக்கத்தை உருவாக்கி, அரசு ஒத்துழைப்புடன் பள்ளிகளில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான கிளை இயக்கங்களை உருவாக்கினார். கடந்த ஆண்டு கூட, லடாக் ஒன்றியப் பகுதிக்கு மாநிலத் தகுதி கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதில், அவரின் உடல்நிலை மோசமானதால், கொந்தளித்த மாணவர் அமைப்பினர், போராட்டத்தில் களமிறங்கினர். அவர்களை காவல் துறையினர் கட்டுப்படுத்த முயன்றபோது, வன்முறை வெடித்தது. பாஜக அலுவலகம் சூறையாடப்பட்டது. காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்தனர். கலவரத்தை தூண்டிவிட்டதாக சோனம் வாங்சுக்கை மத்திய அரசு கைது செய்தது.

தற்போது 59 வயதாகும் சோனம் வாங்சுக், 1988 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட லடாக் மாணவர்கள் கல்வி மற்றும் பண்பாட்டு இயக்கத்தின் இயக்குநராக உள்ளார்.

சோனம் வாங்சுக்கை அழைத்துவரும் ஆதரவாளர்கள்

சோனம் வாங்சுக்கை அழைத்துவரும் ஆதரவாளர்கள் - பிடிஐ

சோனம் வாங்சுக் ஏமாற்றப்படுகிறாரா?

அரசுக்கு எதிராக மிகப்பெரிய கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் சோனம் வாங்சுக்.

மாணவர்கள் மற்றும் அவர்களின் உரிமைகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட சோனம் வாங்சுக், நீட் தேர்வுக்குத் தயாராகும் லட்சக்கணக்கான மாணவர்களின் நலனுக்காக மத்திய அரசுக்கு எதிராக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதற்கு வலுவான பின்புலம் கொண்ட கட்சியைத் தேர்வு செய்து இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தால், அக்கட்சியின் தொண்டர்கள் மூலம் கூட்டமாவது கூடியிருக்கும் என்றும், தன்னெழுச்சியாகச் சேர்ந்த இளைஞர் கூட்டத்தை நம்பி சோனம் வாங்சுக் களமிறங்கியுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுகின்றன.

காங்கிரஸ் ஆட்சியின்போது 2011 ஆம் ஆண்டு ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் 11 நாள்கள் நீடித்தது. அந்த போராட்டத்தின்போது பெரிய அளவில் மக்கள் கூட்டம் திரண்டது. செய்திகளும் பெரிதாகின. இதன் விளைவாக அந்த போராட்டம் வெற்றிகரமானதாக முடிந்தது.

நிலக்கரி ஊழல், அலைக்கற்றை ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல் என பல்வேறு ஊழல்களை விசாரிக்க லோக் பால் சட்டம் கொண்டுவர வேண்டும், மாநிலங்களில் லோக் ஆயுக்தா கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தின் பின்புலமாக தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால், உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், அரசியல் ஆர்வலர் யோகேந்திர யாதவ் போன்றோர் இருந்தனர். அவர்களின் ஒருங்கிணைப்பு அன்னா ஹசாரேவின் போராட்டத்திற்கு பலமாக இருந்தது.

ஆனால், தற்போது பாஜக அரசுக்கு எதிராக சோனம் வாங்சுக் மேற்கொண்டுள்ள போராட்டத்தை ஒருங்கிணைக்க வலுவான ஆளுமை என்று யாரும் இல்லாததுதான், போராட்டம் அடுத்த கட்டத்துக்கு நகராமல் முடங்கிக் கிடக்கக் காரணமோ எனக் கருதப்படுகிறது.

சோனம் வாங்சுக் போராட்டத்துக்கு ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்த போதிலும், அந்த ஆதரவு இந்தப் போராட்டக் களத்தில் பிரதிபலிக்கவில்லை.

ஆதரவு திரளுமா? அல்லது கலகக்காரரான சோனம் வாங்சுக்கின் போராட்டம் வீணாகிவிடப் போகிறதா?

Summary

Hunger strike against the NEET scam continues Will Sonam Wangchuk's protest succeed? Cockroach Janata Party

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.