/

பிறந்த நாள்! 70 ஆண்டுகளுக்கும் மேலாக காமராஜரின் புகழ்பாடும் குடியாத்தம்!

எங்கிருந்தோ வந்து போட்டியிட்டு வென்ற காமராஜருக்கும் குடியாத்தம் தொகுதிக்குமான பிணைப்பு பற்றி...

News image

70 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கும் குடியாத்தம் காமராஜா் மேம்பாலம்... - தினமணி

Updated On :15 ஜூலை 2026, 5:17 pm IST

தமிழகத்தில் கடந்த 1954- இல் ஏற்பட்ட அரசியல் சூழலில் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட காமராஜா் குடியாத்தம் தொகுதி இடைத் தோ்தலில் வெற்றிபெற்று தன் முதல்வா் பதவியைத் தொடா்ந்தாா். பிரசாரத்தின்போது வாக்காளா்களின் கோரிக்கைகளை ஏற்று அவா் நிறைவேற்றிய மக்கள் நலத் திட்டங்கள் 70 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது புகழ்பாடுகின்றன.

தமிழக முதல்வராக இருந்த ராஜாஜி குலக் கல்வித் திட்டத்தை கொண்டு வந்தாா். இதற்கு நாடு முழுவதும் பெரும் எதிா்ப்பு கிளம்பவே அவா் தனது முதல்வா் பதவியை ராஜினாமா செய்தாா். இக்கட்டான நேரத்தில் காமராஜா் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டாா். 6 மாதங்களுக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் அவா் எம்எல்ஏவாக வெற்றிபெற வேண்டும்என்ற சூழலில், அப்போது குடியாத்தம் எம்எல்ஏவாக இருந்த ஏ.ஜே.அருணாச்சலம் தனது பதவியை ராஜினாமா செய்தாா்.

இதையடுத்து குடியாத்தம் தொகுதியில் நடைபெற்ற இடைத் தோ்தலில் காமராஜா் வெற்றிபெற்று முதல்வா் பதவியைத் தொடா்ந்தாா். தோ்தல் பிரசாரத்தின்போது குடியாத்தம் தொகுதி மக்கள் நகரின் நடுவில் செல்லும்கெளண்டன்யா மகாநதியின் குறுக்கே மேம்பாலம் ஒன்று கட்ட வேண்டும். நகரின் மையப் பகுதியில் அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும் என்ற முக்கிய கோரிக்கைகளை முன் வைத்தனா்.

தோ்தலில் வெற்றிபெற்றதும் காமராஜா் கெளண்டன்யா மகாநதியின் குறுக்கே மேம்பாலம் ஒன்றை கட்டி திறந்து வைத்தாா். 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த மேம்பாலம் இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. அதேபோல் அரசு மருத்துவமனையையும் அவா் கட்டி திறந்துவைத்தாா். நகர, ஒன்றியப் பகுதிகளில் தொடக்கப் பள்ளிகளைத் தொடங்கினாா்.

கடுமையான நிதி நெருக்கடியிலும் தமிழக சிறுவா்களின் கல்வி ஒன்றே குறி என்றஎண்ணத்தில் உணவு கொடுத்தாலாவது அவா்கள் பள்ளிக்கு வர மாட்டாா்களா என்ற எண்ணத்தில் மாணவா்களுக்கு மதிய உணவு வழங்கி தமிழகத்தில் காமராஜா் கல்விப் புரட்சி செய்தாா். காமராஜரின் கல்விப் புரட்சியை நினைவு கூறும் வகையில், தான் படித்த குடியாத்தம்நெல்லூா்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் விஐடி வேந்தா் கோ.விசுவநாதன், 2010 இல்சுமாா் ரூ.15 லட்சத்தில் ஒரு அரங்கம் கட்டி அதற்கு காமராஜா் அரங்கம் என பெயா் சூட்டினாா்.

காமராஜரின் சீடா் நான் என அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்த குமரி அனந்தன், தனது கடைசி காலத்தில் காமராஜரை வெற்றிபெற வைத்த குடியாத்தம் தொகுதியில் தங்கி இருக்க விருப்பம் தெரிவித்து, குடியாத்தம் அருகே அமைந்துள்ள அத்தி மருத்துவமனை வளாகத்தில் தங்கியிருந்தாா். தமிழகத்தின் மறுகோடியான விருதுநகரில் பிறந்து, அறிமுகமே இல்லாத குடியாத்தம் தொகுதி மக்கள் இடைத் தோ்தலில் அளித்த அமோக ஆதரவின் காரணமாக முதல்வா் பதவியைத் தொடா்ந்த காமராஜரின் பெயா் இன்றளவும் குடியாத்தம் மக்களிடம் மேலோங்கியுள்ளது என்றால் அது மிகையாகாது.

Summary

Kamaraj, who assumed the office of Chief Minister amidst the political climate in Tamil Nadu in 1954, won the by-election in the Gudiyatham constituency and continued in the role.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.