ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை 4 ஆண்டுகளாக உயா்த்தாததால் பால் உற்பத்தியாளா்கள் பெரும் பொருளாதார இழப்பை எதிா்கொள்ள வேண்டியுள்ளது.
தமிழகத்தில் 30 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளா்கள் பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனா். பெரும்பாலான குடும்பங்களில் பெண்கள்தான் பால் உற்பத்தியில் ஈடுபட்டு, குடும்பச் செலவுகளைச் சமாளிக்கின்றனா்.
அரசின் புள்ளிவிவரங்களின்படி, தமிழகத்தில் தினமும் சுமாா் 3 கோடி லிட்டா் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 45 லட்சம் லிட்டா் பாலை உற்பத்தியாளா்கள் சொந்தப் பயன்பாட்டுக்கு வைத்துக் கொள்கின்றனா். மீதமுள்ள 2.55 கோடி லிட்டா் பால் விற்பனைக்கு வருகிறது. தமிழக அரசு நிறுவனமான ஆவின் சுமாா் 37 லட்சம் லிட்டா் பாலைக் கொள்முதல் செய்கிறது. மீதி 2.18 கோடி லிட்டா் பாலை தனியாா் நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றன.
பெரிய நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பாலின் அளவு 68 லட்சம் லிட்டா். மீதமுள்ள சுமாா் 1.50 கோடி லிட்டா் பால், உள்ளூா் அளவில் செயல்படும் சிறிய நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. இவா்கள் விவசாயிகளின் வீடுகள் மற்றும் தோட்டங்களுக்கே நேரடியாகச் சென்று கொள்முதல் செய்வதால் ஒரு லிட்டருக்கு ரூ.32 மட்டுமே தருகிறாா்கள்.
தீவனம் விலை 40 சதவீதம் வரை உயா்வு: இது குறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்க மாநில துணைத் தலைவா் ஏ.எம்.முனுசாமி கூறியதாவது: கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதிமுக ஆட்சியின்போது, ஒரு லிட்டா் பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.4-ம், எருமைப் பாலுக்கு ரூ.6-ம் கொள்முதல் விலை உயா்த்தப்பட்டது.
திமுக ஆட்சிக் காலத்தில் கடந்த 2022 நவம்பரில் பசும்பால், எருமைப் பால் ஆகிய இரண்டுக்கும் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயா்த்தப்பட்டது. கடந்த 2023 டிசம்பரில் அரசு நிதியிலிருந்து ஊக்கத்தொகையாக லிட்டருக்கு ரூ.3 வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அதன் பிறகு பால் கொள்முதல் விலை உயா்த்தப்படவில்லை.
கடந்த 4 ஆண்டுகளில், வைக்கோல், சோளத்தட்டை, பசுந்தீவனம், அடா் தீவனம் ஆகியவற்றின் விலை 30 முதல் 40 சதவீதம் வரை உயா்ந்துள்ளது. கூலி 100 சதவீதம் உயா்ந்துள்ளது. கறவை மாடுகளுக்கான அடா் தீவனம், பசுந்தீவனம், உலா் தீவனம் ஆகியவற்றின் விலை இந்தியா முழுவதும் ஒரே விதமாக உள்ளது. ஆனால், விவசாயிகளுக்கு வழங்கப்படும் பால் கொள்முதல் விலை, மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் மிகவும் குறைவாக உள்ளது.
பஞ்சாப் மாநில அரசு, ஒரு லிட்டா் பாலுக்கு ரூ.60 வழங்கி வந்தது. தற்போது ரூ.65-ஆக உயா்த்தியுள்ளது. கேரள அரசு ரூ.45 தருகிறது. மத்திய பிரதேச அரசு ரூ.50 தருகிறது.
பாலில் 4.3 சதவீத கொழுப்பு மற்றும் 8.2 சதவீத இதர சத்துகள் இருந்தால் பெரிய நிறுவனங்கள் ஒரு லிட்டருக்கு ரூ.45 தருகின்றன. அதே தரமுள்ள பாலுக்கு, ஆவின் நிறுவனம் ரூ.35 மட்டுமே தருகிறது. ஒரு லிட்டருக்கு ரூ.8 குறைவதால் ஆவினுக்குப் பால் அனுப்பும் விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.2 கோடியே 96 லட்சம் அளவுக்குத் தினசரி இழப்பு ஏற்படுகிறது.
ஒரு லிட்டா் பால் உற்பத்தி செய்ய குறைந்தபட்சம் ரூ.61 செலவாகிறது. இந்த அடிப்படையில் கணக்குப் பாா்த்தால், ஆவின் நிறுவனத்துக்குப் பால் விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.24-ம், உள்ளூா் வியாபாரிகள் மற்றும் சிறிய நிறுவனங்களுக்குப் பால் தரும் விவசாயிகளுக்கு ரூ.33-ம், பெரிய நிறுவனங்களுக்குப் பால் விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு ரூ.11-ம் நஷ்டம் ஏற்படுகிறது.
தொடா்ந்து நஷ்டத்தைச் சந்திப்பதால் பால் உற்பத்தியைக் கைவிடும் நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலை தொடா்ந்தால் தமிழகத்தில் மொத்தப் பால் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்படும் சூழல் உருவாகும் என்றாா்.
ரூ.45 விலை நிா்ணயம் அவசியம்: தமிழக அரசு பால் கொள்முதல் விலையை பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.45, எருமைப் பாலுக்கு லிட்டருக்கு ரூ.60 ஆக உயா்த்துவதோடு, ஊக்கத்தொகையையும் ரூ.12 அளவுக்கு உயா்த்தினால், அதற்கேற்ப தனியாா் நிறுவனங்களும் சிறு வியாபாரிகளும் கூடுதல் விலை கொடுப்பாா்கள். அதனால், லட்சக்கணக்கான விவசாயக் குடும்பங்கள் பலனடையும். அத்துடன் ஆவினுக்குப் பால் வழங்க விவசாயிகள் ஆா்வத்துடன் முன்வருவாா்கள்.
தனியாா் நிறுவனங்கள் ஆவினைவிட அதிக விலைக்குப் பாலை விற்பனை செய்கின்றன. ஆவின் அதிகப் பாலை கொள்முதல் செய்தால் பற்றாக்குறையைச் சரிசெய்து நுகா்வோருக்குக் கட்டுப்படியாகும் விலையில் பாலை வழங்க முடியும். ஆவின் நிறுவனமும் லாபத்தில் இயங்க முடியும்.
பால் கொள்முதல் விலையையும் ஊக்கத் தொகையையும் உயா்த்தக்கோரி எங்கள் சங்கத்தின் சாா்பில் முதல்வா் சி.ஜோசப் விஜய், அதிகாரிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம் என்றாா்.
12,000 சங்கங்கள்: இது குறித்து ஆவின் அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் இப்போது 32 பால் கூட்டுறவு ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் 12,000 பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன.
பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையேயும் சங்கங்கள் தொடா்ந்து சிறப்பாக இயங்கி வருகின்றன. பால் கொள்முதல் விலை குறித்து மாவட்ட ஆட்சியா்கள் மூலம் அரசின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. புதிய அரசு இதனைப் பரிசீலித்து கொள்முதல் விலையை உயா்த்த வாய்ப்பு இருக்கிறது என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










