ரயில்வே படுக்கை விரிப்பு காகித உறைகளில் மீண்டும் காணாமல்போன தமிழ்!

ரயில்களில் குளிர்சாதனப் பெட்டிகளில் படுக்கை விரிப்புகள் வழங்கப்படும் காகித உறைகளில் ஹிந்தியும் ஆங்கிலமும் இடம் பெறத் தமிழ் இல்லாதது பற்றி...

Tamil goes missing once again from the paper covers for railway bedrolls

ரயில்வே படுக்கை விரிப்பு காகித உறைகளில் தமிழ் இல்லை .... - தினமணி

Updated On :

தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்ரமாதித்தின் அல்ல, வேதாளம்,  கிடைக்கிற ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக் கொண்டு, மீண்டும் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொள்வதைப் போலவேதான் ரயில்வேயும்.

தமிழ்நாட்டிற்குள்ளே செல்லும் ரயில்களிலேயே குளிர்வசதி கொண்ட பெட்டிகளில் இரு வெள்ளைப் விரிப்புகள் வைத்து வழங்கப்படும் பழுப்புநிற காகித உறைகளில் மீண்டும் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் மட்டுமே தகவல்கள் அச்சிடப்பட்டு வழங்கத் தொடங்கியிருக்கின்றனர்; தமிழ்நாட்டு மொழியான தமிழ், மருந்துக்கும்  இல்லை!

2025 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் இதேபோல வெள்ளை விரிப்புகள் வழங்கப்படும் பழுப்புநிற காகித உறைகளில் தமிழில் ஒற்றைச் சொல்கூட இல்லாமல் முழுவதும் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே தகவல்கள் இடம் பெற்றிருந்தது பற்றித் தினமணி இணையதளம் வெளிப்படுத்தியது.

தொடர்ந்து, இரு மாதங்களில், தமிழில் தங்கள் பயணம் இனிதாக அமைய வாழ்த்துத் தெரிவிக்கும் பழுப்பு காகித உறைகளை அச்சிட்டு வழங்கத் தொடங்கியது ரயில்வே.

அப்போது அந்தப் பழுப்பு உறைகளை அச்சிட்டு வழங்கியது தென் ரயில்வேயின் மதுரை கோட்டம். இப்போது வழங்கிக் கொண்டிருப்பது தென் ரயில்வே. தற்போது வழங்கப்படும் காகித உறைகளில் தமிழுடன் மதுரைக் கோட்டமும் சேர்ந்து காணாமல்போய்விட்டது (ரயில் புறப்படுகிற இடத்தைப் பொருத்திருக்குமோ?).

டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சேலம், மதுரை வழியாக போடிநாயக்கனூர் செல்லும் விரைவு ரயிலில் கடந்த நவ. 6 ஆம் தேதி இரவு வழங்கப்பட்ட உறைகளில் தமிழைக் காணோம்! விசாரித்தபோது, அடிக்கடி ரயில்களில் சென்றுவரும் பல பயணிகள், ‘ரயில்வேயில் இதெல்லாம் சாதாரணமப்பா’ என்று தெரிவிக்கின்றனர்.

ஏற்கெனவே, ரயில் பயணங்கள் பெரும்பாலும் ஏதோ வெளிநாட்டுப் பயணம் போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. எல்லா இடங்களிலும் ஹிந்தியும் ஆங்கிலமும்தான்.  கணிசமான அளவில் பணியாளர்களும் தமிழில் பேசுவதில்லை. தமிழில் எதுவும் இல்லை!

தமிழ் பேசுகிற மக்கள் வாழ்கிற தமிழ்நாட்டிற்குள்ளேயே இருக்கும் ஒரு நகரத்திலிருந்துதான் இன்னொரு நகரத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறோம் என்பதைக்கூட அருகிலுள்ள சக பயணிகளை வைத்துதான் உறுதி செய்துகொள்ள வேண்டும் போல. நிலைமை அப்படியிருக்கிறது.

ஏற்கெனவே, ரயில்வேயின் அறிவிப்புப் பலகைகளும் ரயில் நிலைய அறிவிப்புகளும் மும்மொழித் திட்டப்படி. அதுவும் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் என்ற கீழிறங்கு வரிசையில்!  சென்னை மின்சார ரயில்களுக்குள்ளேயே ஒலிபரப்பாகும் நிலையங்கள் பற்றிய அறிவிப்புகளும் மும்மொழிகள்தான்.

தமிழ்நாட்டிற்குள்ளேயே இருக்கும் இரு ஊர்களுக்கு இடையே இயக்கப்படும் தமிழ் பேசும், தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த மக்கள் மட்டுமே அதிகளவில் பயணம் செய்யும் ரயில்களிலேயே தமிழை இடமில்லாமல் செய்தால்... கிடைக்கிற ஒவ்வொரு வாய்ப்பையும் ஏதோவொரு வகையில் ஹிந்தி அல்லது ரயில்வே பயன்படுத்திக் கொண்டுவிடுகிறது.

ரயில்வேயில் ரயில் பெட்டிகளின் கழிப்பறைகள் உள்பட பல இடங்களில் முற்றிலுமாகத் தமிழ் புறக்கணிக்கப்பட்டு ஆங்கிலம், ஹிந்தி ஆகிய இரு மொழிகள் மட்டுமே இடம் பெறுவது இன்னொரு பக்கம்.

மதுரையிலிருந்து வட மாநிலங்களிலுள்ள நகர்களுக்குச் செல்லும் ரயில்கள் என்றால்கூட பரவாயில்லை. தமிழ்நாட்டு நகர்களுக்கு இடையே செல்லும் ரயில்களில் – எதுவாக இருந்தாலும் - தமிழ் இடம் பெற வேண்டும்; இடம் பெறும் என்பதைத் தமிழ்நாடு அரசும் தமிழுக்காக சங்கமம் போன்ற நிகழ்ச்சிகள் எல்லாம் நடத்தும் மத்திய அரசும் ரயில்வேயும் உறுதி செய்ய வேண்டியது அவசியம்.

இவ்வாறாகத் தமிழ் மட்டுமே அறிந்த மக்கள், தமிழ்நாட்டிற்குள்ளேயே அந்நிய நாட்டவர்களைப் போல அவதிப்படுவது தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு  மக்களவைக்கும் மாநிலங்களவைக்கும் சென்றிருக்கும் நம்முடைய 54 எம்.பி.க்களுக்கும் தெரிந்திருக்குமா? ஆமாம், இவர்களில் எத்தனை பேர் ரயில்களில் பயணம் செய்யப் போகிறார்கள்?  சற்றும் மனந்தளராமல் தன் முயற்சிகளைத் தொடரும் ரயில்வே, வெறும் ஹிந்தியில் மட்டுமே எல்லாவற்றையும் அச்சிட்டு வழங்காத வரைக்கும் தமிழ் மக்கள் மகிழ்ச்சி கொண்டாடிக்கொள்ள வேண்டியதுதான்! ம்.

Summary

Tamil goes missing once again from the paper covers for railway bedrolls

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.