ஜார்க்கண்ட் நிலக்கரிச் சுரங்கம்! அபாயத்தில் 6 லட்சம் மரங்களும் யானைகள் வாழ்விடமும்!!
ஜார்க்கண்ட் நிலக்கரிச் சுரங்கம் திட்டத்துக்கு அனுமதி கிடைத்திருப்பதால், 6 லட்சம் மரங்களும் யானைகள் வாழ்விடமும் அழியும் அபாயம்

ஜார்க்கண்ட் நிலக்கரிச் சுரங்கம் - ENS
ஜார்க்கண்டில் நிலக்கரிச் சுரங்கத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதன் மூலம், அப்பகுதியில் உள்ள 6 லட்சம் மரங்களும் யானைகளின் வாழ்விடமும் அழியும் அபாயத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
ஜார்க்கண்டின் சத்ரா மாவட்டத்தில் திறந்தவெளி நிலக்கரிச் சுரங்கத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்காக 2,300 ஏக்கர் வனப்பரப்பை பயன்படுத்திக் கொள்ள சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் உள்ள வன ஆலோசனைக் குழு ஒப்புதல் அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏற்கனவே, எல் நினோவால் நாடு பாதிக்கப்பட்டு, ஒரு பக்கம் மழையின்மை, கடும் வெப்பம் போன்றவற்றால் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும்போது, 2300 ஏக்கர் வனப்பரப்பை அழித்தொழித்துவிட்டால், விரைவில் உலக உருண்டைக்கே முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பி தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த சுரங்கப் பணிக்காக 2.43 லட்சம் 'சால்' வகை மரங்கள் உள்பட சுமார் 6 லட்சம் மரங்களை அகற்ற வேண்டியிருக்கும். இதனால், வனப்பகுதிகளில் சுற்றித் திரிந்து கொண்டிக்கும் நூற்றுக்கணக்கான யானைகள் வாழ்விடத்தை இழக்கும். பிறகென்ன? மனித-யானை மோதல்கள்தான் அதிகரிக்கும். வனத்தை அழித்துவிட்டு, யானை நடமாட்டம் என்று தலைப்புச் செய்தி போட்டுக் கொண்டிருப்பார்கள்.
ஏற்கெனவே, ஜார்க்கண்டில் மனிதர்கள் - யானைகள் இடையிலான மோதல் மிகப்பெரிய சிக்கலாக இருக்கும் நிலையில், மேலும் வனப்பகுதிகள் அழிக்கப்படுவது, மோதலை தீவிரப்படுத்த வழிவகுக்கும் என்பது சுரங்க திட்டத்துக்கு அனுமதி வழங்கியிருக்கும் யாருக்குமே தெரியாமல் போனது எப்படி என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
இந்திய வனவிலங்கு அமைப்பு 2000-ஆவது ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை நடத்திய நீண்டகால ஆய்வின்படி, மாநிலத்திலுள்ள 22 வனப் பிரிவுகளில் நிகழ்ந்த 1,740 மோதல் சம்பவங்களில் 1,340 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 400 பேர் காயமடைந்துள்ளனர். 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மட்டும், இத்தகைய மோதல்களால் 20 பேர் உயிரிழந்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அழிக்கப்படவிருக்கும் வனப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இல்லாவிட்டாலும், இதில், ஏராளமான யானைகள், கழுதைப்புலிகள், குள்ளநரிகள், வங்க நரிகள் மற்றும் மலைப்பாம்புகள் வாழ்கின்றன.
அசோக் விரிவாக்க திறந்தவெளி நிலக்கரி சுரங்கத் திட்டத்தால் ஆண்டுக்கு 2 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இது சத்ரா மாவட்டத்தில் உள்ள வடக்கு கரன்புரா நிலக்கரி வயலில், சத்ரா தெற்கு வனப் பிரிவின் அதிகார வரம்பிற்குள் அமைந்துள்ளது. இந்த விரிவாக்கப் பணி, தற்போதுள்ள சுரங்கத் திட்டத்திலிருந்து மேற்கு நோக்கி மேற்கொள்ளப்பட உள்ளது.
Summary
Jharkhand coal mine! 6 lakh trees and elephant habitats at risk!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

