நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

தமிழ்நாட்டில் காங்கிரஸ் திமுகவின் ஆறாவது விரலாக மாறி விட்டதா? தேர்தலில் தனித்துவம் பழங்கனவே தானா?

காங்கிரஸ் கட்சிக்கென்று தனியாக ஒரு நிலைப்பாடு இருக்க வேண்டும். அப்படியில்லாமல் எல்லா நேரங்களிலும் திமுகவின் எண்ணத்தை பிரதிபலிப்பதாக இருக்குமேயானால், காங்கிரஸ் என்று தனியாக ஒரு கட்சி எதற்கு?

News image
Updated On :22 ஜூலை 2025, 11:18 am

சாது ஸ்ரீராம்

தங்க உருண்டை!

ஒரு அரசர். அவரிடம் மூன்று அமைச்சர்கள் பணிபுரிந்து வந்தனர். ஒரு நாள் அவையில் அனைவரும் அமர்ந்திருக்கும் போது முதலாவது மந்திரி பேசினார்.

‘அரசே! எங்கள் மூவரில் யார் மீது அதிக அன்பு வைத்திருக்கிறீர்கள்', என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்', என்றார்.

யோசித்தார் அரசர். நேராக தனது அறைக்குச் சென்றார். வரும் போது கருப்பு நிறத்தில் மூன்று சிறிய உருண்டைகளை எடுத்து வந்தார். மந்திரிகளிடம் ஆளுக்கொன்றாக கொடுத்தார்.

‘மந்திரிகளே! இவை தங்க உருண்டைகள். இதை உங்கள் வீட்டில் வைத்து பூஜை செய்யுங்கள். ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் உருண்டைகளை சோதனை செய்கிறேன். நான் யார் மீது அதிக அன்பு வைத்திருக்கிறேனோ, அவரிடம் கொடுக்கப்பட்ட உருண்டை தங்கமாகவே இருக்கும். அதே நேரத்தில் மற்ற இருவரிடமும் கொடுக்கப்பட்ட உருண்டை இரும்பாக மாறிவிடும், என்றார் அரசர்.

அரசனின் உத்தரவை ஏற்று தங்க உருண்டைகளை தங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து பூஜிக்கத் தொடங்கினார்கள் மந்திரிகள்.

அடுத்த நாள் அரண்மனையில் மீண்டும் கூடினர். அரசர் பேசினார்.

‘மந்திரிகளே! என்னுடைய தங்க உருண்டை யோசனை எப்படி? என்று பெருமையோடு கேட்டார் அரசர்.

‘மிக அருமையான யோசனை', என்றார் முதலாவது மந்திரி.

‘அரசே! இது எந்த மாதிரியான யுக்தி என்பது எனக்குப் புரியவில்லை. எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை உணர்த்த ஆயிரம் வழிகள் இருக்கும் போது, ஒரு தங்க உருண்டை அதை தீர்மானிக்கிறது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை', என்றார் இரண்டாம் மந்திரி.

‘அரசே! உங்கள் யுக்தியை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அரசரின் முடிவை ஏற்றுக் கொள்வதுதான் ஒரு நல்ல பிரஜையின் கடமை. ஆகையால் கண்ணை மூடிக்கொண்டு உங்கள் யோசனையை ஏற்கிறேன்', என்றார் மூன்றாம் மந்திரி.

சில நாட்கள் சென்றன. மீண்டும் அவையில் அரசர் பேசினார்.

‘அமைச்சர்களே! திருடர்கள் தொல்லை நாட்டில் அதிகமாகிவிட்டது. இதைக் கட்டுப்படுத்த திருடர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும்; என்றார் அரசர்.

‘அருமையான யோசனை. திருடர்களுக்கு இந்த தண்டனை மிக அவசியம். உங்கள் கருத்தை ஏற்கிறேன்', என்றார் முதலாம் அமைச்சர்.

‘அரசே! திருட்டு என்பது மனம் சம்பந்தப்பட்டது. சிறைவாசத்தில் ஏற்படும் மனமாற்றம் அவர்களை நல்ல மனிதர்களாக மாற்றிவிடும். ஆகையால், அவர்களை பிடித்து சிறையில் அடைப்பதுதான் மிகச்சரியான முடிவு', என்றார் இரண்டாம் மந்திரி.

‘அரசே! இரண்டாவது மந்திரி சொல்வது மிகச்சரி. ஆனால், அரசன் சொல்லியதை ஏற்பது பிரஜையின் கடமை. ஆகையால் உங்களின் யோசனையை ஏற்கிறேன்', என்றார் மூன்றாவது மந்திரி.

இப்படி ஒவ்வொரு முறையும் அரசர் சொல்லும் யோசனையை முதலாவது மந்திரி அப்படியே ஏற்றுக் கொண்டார். இரண்டாம் மந்திரி சாதக, பாதகங்களை எடுத்துச் சொல்லி அரசனுக்கு உண்மையை உணர்த்த முயற்சித்தார். ஆனால், மூன்றாவது மந்திரியோ, முதலாம் மற்றும் இரண்டாவது மந்திரிகளின் கருத்துக்களை ஒன்றாக சேர்த்து அதை தனது யோசனையாக அரசனிடம் தெரிவித்து வந்தார்.

இப்படியே ஒரு வருடம் ஓடிப் போனது. மூன்று மந்திரிகளும் தங்களிடமிருந்த தங்க உருண்டைகளுடன் அரசரை சந்தித்தனர். அரசர் உருண்டைகளை சோதித்தார். இரண்டாவது மந்திரியிடம் கொடுக்கப்பட்ட உருண்டை பல இடங்களில் தேய்க்கப்பட்டிருந்தது. ஆனால், முதலாம் மற்றும் மூன்றாவது மந்திரிகளிடம் கொடுக்கப்பட்ட உருண்டை அப்படியே இருந்தது. எந்த மாற்றமும் அதில் காணப்படவில்லை.

அரசர் யோசித்தார். முதலாவது மந்திரியையும், மூன்றாம் மந்திரியையும் அழைத்தார்.

‘போட்டியின் அடிப்படையில் யார் மீது நான் அதிக அன்பு வைத்திருக்கிறேன் என்பதை நிர்ணயம் செய்வது தங்க உருண்டை. இந்த ஓராண்டு காலத்தில் நீங்கள் இருவரும் உங்களிடம் இருக்கும் உருண்டை தங்கமாக இருக்கிறதா! அல்லது இரும்பாக மாறிவிட்டதா என்பதை ஒருமுறை கூட சோதித்துப் பார்க்கவில்லை. ஒரு விஷயத்தை புரிந்து கொள்வது அவசியம். தன்னிடம் இருப்பது தங்கமாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் அதை சோதிக்காமல் இருப்பதும், அது இரும்பாக மாறியிருக்குமோ என்ற பயத்தில் அதை சோதிக்காமல் இருப்பதும் ஒன்றுதான். ஆனால், இரண்டாம் மந்திரி தனக்கு சந்தேகம் வரும் போதெல்லாம் உருண்டையை தேய்த்து அது தங்கம் என்பதை உறுதி செய்து கொண்டார். அதாவது நான் அவர் மீது அதிக அன்பு வைத்திருக்கிறேனா என்பதை உறுதி செய்து கொண்டார். நீங்கள் இருவரும் உருண்டைக்கு பூஜை செய்ததைத் தவிர உறுப்படியாக வேறு எந்த செயலையும் செய்யவில்லை. ஆகையால் நீங்கள் இருவரும் இந்த போட்டியிலேயே இல்லை என்ற உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.’

‘இதைவிட ஒரு முக்கியமான உண்மை ஒன்று உள்ளது...

இரண்டு நபர்கள், எல்லா சூழல்களிலும் ஒரே கருத்தை ஏற்றுக் கொள்வாராயின், அந்த இருவரில் ஒருவர் தேவையில்லை. அந்த அடிப்படையில் என்னுடைய எல்லா கருத்துக்களையும், எல்லா நேரங்களிலும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்ளும் முதல் மந்திரி தேவையற்றவர். இன்று முதல் அவருக்கு அரண்மனையில் இடமில்லை.

அதே நேரத்தில் கையிலிருப்பதை சோதித்துப் பார்க்கும் எண்ணம் கொண்ட இரண்டாம் மந்திரியே சிறந்தவர். காரணம் தன்னை சோதித்து அறிபவனை எந்த வெற்றியும் துள்ளிக் குதிக்க வைக்காது. எந்த தோல்வியும் துவண்டு போகச் செய்யாது', என்றார் அரசர்.

இந்தக் கதையில் வரும் முதலாம் மந்திரியைப் போன்ற ஒரு கட்சி தமிழ்நாட்டில் இருப்பதை நம்மில் எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம்?

ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வில் இறங்கின. ஆனால், திமுக தனது வேட்பாளரை தேர்வு செய்வதற்கு முன்னரே காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை திமுகவிற்கு அளிப்பதாக அறிவிப்பை வெளியிட்டது.

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் என்பது ஒரு திருவிழா. இதில் வெற்றி, தோல்வி இரண்டாம்பட்சம். போட்டியிடுவது தான் முக்கியம். வாய்ப்புள்ள கட்சிகளுக்கு வெற்றி, தோல்வியும், மற்றவர்களுக்கு தங்களின் பலத்தை அறிந்து கொள்ளும் ஒரு வாய்ப்பாகவே இந்த திருவிழா பார்க்கப்படுகிறது. ஆனால், திமுக வை ஆதரிப்பதால் காங்கிரஸுக்கு கிடைப்பது என்ன? காங்கிரஸே! உங்களுடைய தனிப்பட்ட பலம் என்னவென்றே தெரியாமல் அடுத்தவரை ஆதரிக்கிறோம் என்று சொல்வது நகைப்புக்குரியதாக இல்லையா!

காங்கிரஸ் கட்சியே! கதையில் வரும் முதல் மற்றும் மூன்றாம் மந்திரிகளைப் போல நீங்கள் காங்கிரஸ் என்ற தங்க உருண்டையை வீட்டில் வைத்து பூஜை செய்கிறீர்கள், அவ்வளவுதான். உங்களின் ஓட்டு வங்கியை சோதித்து பலத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்று ஏன் உங்களுக்கு தோன்றவில்லை?

  • 1952ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் 34.88 % ஓட்டுக்கள் பெற்று 152 சட்டமன்ற தொகுதிகளை வென்றிருந்தது.
  • 1957ம் ஆண்டு தேர்தலில் 45.34 % ஓட்டுக்கள் பெற்று 151 சட்டமன்ற தொகுதிகளை வென்றது.
  • 1962ம் ஆண்டு தேர்தலில் 46.14 % ஓட்டுக்கள் பெற்று 139 சட்டமன்ற தொகுதிகளை வென்றது.
  • 1967ம் ஆண்டு தேர்தலில் 41.10 % ஓட்டுக்கள் பெற்று 51 சட்டமன்ற தொகுதிகளை வென்றது. 
  • 1971ம் ஆண்டு தேர்தலில் 34.99 % ஓட்டுக்கள் பெற்று 15 சட்டமன்ற தொகுதிகளை வென்றது.

1977ம் ஆண்டுக்கு பிறகு நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளை அதிகம் நம்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. காங்கிரஸின் ஓட்டு வங்கி படிப்படியாக குறைந்து இன்று ஒற்றை இலக்கத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையை ஒரு வேளை அரசியல் கட்சிகள் இழக்குமேயானால், காங்கிரஸுடன் யாரும் கூட்டு வைப்பார்களா என்பதே சந்தேகம்தான்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் தொடர் வீழ்ச்சிக்கு காரணமான சில விஷயங்களைப் பார்ப்போம்.

  • மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியைப் பற்றி கவலைப்படாமல் தமிழக எம்.பிக்களின் எண்ணிக்கையில் மட்டும் கவனத்தைச் செலுத்திய அகில இந்திய காங்கிரஸின் சுயநலம்.
  • யாருக்கும் கட்டுப்படாத குட்டித் தலைவர்களின் செயல்பாடுகள்.
  • அடிக்கடி மாற்றப்படும் மாநில தலைமை.
  • மாநிலத்தில் கூட்டணி கட்சிகளிடம் அடங்கிப் போகும் அடிமைக் குணம்.
  • கூட்டணிக் கட்சிகளுக்காக தொடர்ந்து தொகுதிகளை விட்டுக் கொடுப்பது.

இப்படி பல காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இவையெல்லாம் தமிழக காங்கிரஸ் கட்சியின் ஓட்டுக்கள் கரைந்து போனதற்கான சில காரணங்கள்.

எது எப்படியோ! தமிழக காங்கிரஸ், இன்று திமுகவின் ஆறாவது விரலாக மாறியிருக்கிறது. ஆறாவது விரல் என்றைக்குமே அழுத்தம் கொடுக்கப் பயன்படாது.

இனி வரும் காலங்களிலாவது காங்கிரஸ் தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். கூட்டணி இருந்தால் மட்டும் போட்டி என்ற நிலை உங்களின் பலவீனத்தையும், பதவி ஆசையையும் மட்டுமே வெளிப்படுத்துகிறது. ஆகையால், கதையில் வரும் இரண்டாம் மந்திரியைப் போல, கையில் இருக்கும் தங்கமாகிய மக்களின் அன்பை இது போன்ற தேர்தல்களில் சோதித்துப் பாருங்கள். தோல்வியால் ஏற்படும் பாதிப்பை விட, போட்டியில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியிருக்கும் போது ஏற்படும் பாதிப்பு அதிகம். இதை இன்று வரை நீங்கள் இழந்த ஓட்டுக்கள் உங்களுக்கு உணர்த்தியிருக்கும்.

காங்கிரஸ் கட்சிக்கென்று தனியாக ஒரு நிலைப்பாடு இருக்க வேண்டும். அப்படியில்லாமல் எல்லா நேரங்களிலும் திமுகவின் எண்ணத்தை பிரதிபலிப்பதாக இருக்குமேயானால், காங்கிரஸ் என்று தனியாக ஒரு கட்சி எதற்கு? திமுக என்ற கட்சியே போதுமே! கதையில் வரும் முதலாம் மந்திரியைப் போல காங்கிரஸ் கட்சி தேவையற்றதாகிவிடும். இனியாவது உணருங்கள். கையிலிருக்கும் தங்கத்தை உரசிப் பார்த்து உறுதி செய்து கொள்ளுங்கள்.

அப்படியில்லாமல் இதே நிலை தொடர்ந்து நீடித்தால், தற்போது கட்டெறும்பாக காட்சியளிக்கும் காங்கிரஸ் விரைவில் வரலாற்றுச் சின்னமாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மேலே சொன்ன விஷயங்கள் காங்கிரஸுக்கு மட்டுமல்ல, தேர்தலில் போட்டியிடாமல், தினமும் தொலைக்காட்சியின் முன் அமர்ந்து பேட்டி கொடுக்கும் எல்லா கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் பொருந்தும்.

- சாது ஸ்ரீராம்  (saadhusriram@gmail.com)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.