கம்பம்: பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை தொடர்ந்து போக்குக்காட்டி வருவதால், அணைக்கு நீர்வரத்து குறைவாகவே உள்ளது. பல நாட்களாக அணையின் நீர்மட்டமும் 112.50 அடியை தாண்டவில்லை.. இதனால் தேனி மாவட்டத்தில் பெரியாற்று தண்ணீரை நம்பி உள்ள முதல்போக விவசாயத்திற்கு ஜூன் மாதம் திறக்கப்பட வேண்டிய தண்ணீர் எப்போது திறக்கப்படும் என்று காத்திருக்கின்றனர் விவசாயிகள்.
கம்பம் பள்ளத்தாக்கு உத்தமபாளையம் வட்டத்தில் 11 ஆயிரத்து 807 ஏக்கர், போடி வட்டத்தில் 488 ஏக்கர், தேனி வட்டத்தில் 2 ஆயிரத்து 412 ஏக்கர் என தேனி மாவட்டத்தில் 14 ஆயிரத்தி 707 ஏக்கர் நிலங்களில் முல்லைப் பெரியாறு தண்ணீர் மூலம் இருபோக நெல் சாகுபடி விவசாயம் நடைபெற்று வருகிறது.
முல்லைப் பெரியாற்று நீரை நம்பியிருக்கும் இவ்விளை நிலங்களுக்கு, ஆண்டு தோறும் முதல் போக சாகுபடி நாற்று நடவுக்காக ஜூன் முதல் வாரத்திற்குள் தண்ணீர் திறப்பது வழக்கம்.
இந்த ஆண்டு பருவ மழையினால் பெரியாறு அணை நீர்மட்டம் உயரும், முதல்போக விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்கும் விவசாயம் செழிக்கும், என விவசாயிகள் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் பருவமழை தொடர்ந்து போக்குகாட்டி வருவதால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெரியாறு அணையின் நீர்மட்டம் 112.50 அடியாக உள்ளதால், குடிநீருக்காக மட்டுமே அணையிலிருந்து வினாடிக்கு 125 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு பருவமழை போக்குகாட்டி வருவதால் இப்பகுதிக்கு முதல்போகம் என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் வருணபகவானின் கருணையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் இப்பகுதி விவசாயிகள்.