ஏப். 20 முதல் அனைத்து சரக்குப் போக்குவரத்துகளுக்கும் அனுமதி
By DIN | Published On : 15th April 2020 11:56 AM | Last Updated : 15th April 2020 01:23 PM | அ+அ அ- |

மத்திய அரசு அறிவித்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளின்படி, ஏப். 20 முதல் அனைத்து சரக்குப் போக்குவரத்துகளும் அனுமதிக்கப்படும்.
ரயில்வேயைப் பொருத்தவரை சரக்குகள் மற்றும் பார்சல்கள் கொண்டு செல்லும் ரயில்கள் யாவும் இயக்கப்படும்.
சரக்குகள், பொருள்கள் கொண்டு செல்வதற்காகவும் நிவாரணப் பொருள்கள் கொண்டுசெல்லவும் சிக்கிக் கொண்டிருப்பவர்களை அழைத்துச் செல்லவுமான விமான போக்குவரத்தும் அவை தொடர்பான செயல்பாடுகளும் அனுமதிக்கப்படும்.
அங்கீகரிக்கப்பட்ட சுங்கத் துறை முகமைகள் உள்பட சரக்குப் போக்குவரத்துக்கான துறைமுகங்கள், உள்நாட்டு சரக்குப் பெட்டக முனையங்கள் செயல்படத் தொடங்கும்.
எல்லைகள் தாண்டி செல்ல பெட்ரோலியப் பொருள்கள், சமையல் எரிவாயு, உணவுப் பொருள்கள், மருத்துவப் பொருள்கள் போக்குவரத்து அனுமதிக்கப்படும்.
இரு ஓட்டுநர்கள் மற்றும் ஓர் உதவியாளர் இருக்கும் அனைத்து சரக்கு லாரிகளும் வாகனங்களும் சரக்குகள் கொண்டு செல்லவும், எடுத்துவர, இறக்கிவிட்டுவரக் காலியாகச் செல்லவும் அனுமதிக்கப்படும்.
நெடுஞ்சாலைகளில் வாகன பழுதுபார்ப்புக் கடைகளும் உணவகங்களும் அனுமதிக்கப்படும்.
இவை அனைத்தின் இயக்கம் தொடர்பான அனைத்து, நிரந்தர, ஒப்பந்த ஊழியர்களும் உரிய அனுமதிச் சீட்டுகளுடன் வெளியில் சென்றுவர அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...