
திருப்பூர்: தமிழகத்தில் நாளை முதல் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் அமல்படுத்தப்படவுள்ளதால் திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் பொதுமக்களின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அலைமோதியது.
தமிழகம் முழுவதும் கரோனாநோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வரும் திங்கள்கிழமை முதல் ஒர வாரகாலத்துக்கு தளர்வுகளற்ற பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. இந்த பொதுமுடக்கத்தின்போது மளிகை, காய்கறி, பலசரக்கு கடைகள் செயல்படவும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, பொதுமக்களின் நலன் கருதி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து கடைகளும் செயல்பட அரசு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.
மேலும், தென்னம்பாளையம் மீன் மார்க்கெட், இறைச்சிக் கடைகள், காய்கறி, மளிகைக் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.அதே போல, திருப்பூர் பழைய பேருந்து நிலையம், குமரன் சாலை, பி.என்.சாலை, அவிநாசி சாலை, புதிய பேருந்து நிலையம், புஷ்பா ரவுண்டானா ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் வாகனப் போக்குவரத்தும் அதிகரித்துக் காணப்பட்டது.
குறைந்த அளவு பேருந்துகளே இயக்கம்: அதே வேளையில், திருப்பூரில் இருந்து தாராபுரம், பழனி, மதுரை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்பட்டது.
அதிகரிக்கும் கூட்டம் கரோனா தொற்றை அதிகரிக்கும்: தமிழக அரசு கரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் தளர்வுகளற்ற பொதுமுடக்கத்தை அமல்படுத்தவுள்ளது. ஆனால் திருப்பூரில் அதிக அளவிலான பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்காததும் கரோனா பரவலைக் அதிகரிக்கும் என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் ஏற்கெனவே 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 323 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.