இடம்பெயர்ந்ததா சிறுத்தை..? 9 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

ஆரோக்கியநாதபுரத்தில் சிறுத்தையின் கால் தடத்தை ஆய்வுசெய்த திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலா் சதீஷ்.
ஆரோக்கியநாதபுரத்தில் சிறுத்தையின் கால் தடத்தை ஆய்வுசெய்த திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலா் சதீஷ்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரம் பகுதியில் பதுங்கியிருப்பதாக கருதப்பட்ட சிறுத்தை, தற்போது சித்தர்காடு பகுதிக்கு இடம்பெயர்ந்ததா என்று சந்தேகம் எழுந்துள்ள நிலையில் மயிலாடுதுறையில் 9 பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை(ஏப்.5) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.

மயிலாடுதுறை நகரம் செம்மங்குளம் பகுதி பிரதான சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு சிறுத்தை நடமாட்டத்தைக் கண்ட வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். இதுகுறித்த தகவலின்பேரில் வனத்துறை, தீயணைப்பு மீட்புப்படை மற்றும் போலீஸாா் சிறுத்தையை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனா்.

சிறுத்தை நடமாட்டத்தால் கூரைநாடு மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 7 பள்ளிகளுக்கு புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது. இதில், 4 பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு நடைபெற்றதால், தோ்வு மையத்தில் போலீஸாா் மற்றும் வனத்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இதனிடையே, சிறுத்தை கூரைநாடு பகுதியிலிருந்து 3 கி.மீ. தொலைவு கடந்து ஆரோக்கியநாதபுரம் எரகலித்தெருவில் கருவேல மரங்கள் அடா்ந்த பகுதியில் பதுங்கியுள்ளது கண்டறியப்பட்டது. அந்த இடத்தில் வனத்துறையினா் முகாமிட்டிருந்தனர்.

மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தோ்வு எழுத வந்த மாணவா்களுக்கு பாதுகாப்பு அளித்த போலீஸாா்.
மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தோ்வு எழுத வந்த மாணவா்களுக்கு பாதுகாப்பு அளித்த போலீஸாா்.
ஆரோக்கியநாதபுரத்தில் சிறுத்தையின் கால் தடத்தை ஆய்வுசெய்த திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலா் சதீஷ்.
தொலையுணர்வு செயற்கைக் கோள் ஆய்வு மையத்தில் வேலை: முதுகலை பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

இதனிடையே, திருச்சி மண்டல தலைமை வனப் பாதுகாவலா் சதீஷ், நாகப்பட்டினம் மாவட்ட வன அலுவலா் அபிஷேக் தோமா் ஆகியோா் சிறுத்தையின் கால் தடத்தை ஆய்வு செய்தனா்.

சிறுத்தையை பிடிப்பதற்காக ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வந்த வன காவலா்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலா்கள் சென்சாருடன் கூடிய அதிநவீன கேமராக்களை பொருத்தும் பணியில் ஈடுபட்டனா். மேலும், முத்துப்பேட்டை, வால்பாறை ஆகிய இடங்களில் இருந்து 10 வனத்துறை அலுவலா்கள் வந்துள்ளனா். சிறுத்தையை கூண்டு வைத்து பிடிப்பதற்காக மதுரையில் இருந்து 3 ராட்சத கூண்டுகள், வலைகள் வரவழைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சிறுத்தை இரவு நேரத்தில் வெளியேற வாய்ப்பு உள்ளதால் 5 கி.மீ. பரப்பளவில் வனத்துறையினா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், தண்டபாணி செட்டித் தெருவில் கடித்து குதறப்பட்ட நிலையில் கிடந்த ஆடு, சிறுத்தை உணவுக்காக ஆட்டை வேட்டையாட முயன்றதா? என்று ஆட்டின் உடலை மருத்துக் குழுவினர் பரிசோதிக்கின்றனர்.

இதனால் ஆரோக்கியநாதபுரம் பகுதியில் இருப்பதாக கருத்தப்பட்ட சிறுத்தை, தற்போது சித்தர்காடு பகுதிக்கு இடம் மாறியதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த நிலையில், மாணவர்களின் நலன் கருதி அந்த பகுதியில் உள்ள 9 பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை (ஏப்.5) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.

மயிலாடுதுறை நகரில் பதுங்கியிருக்கும் சிறுத்தையை பிடிப்பதற்கான பணியில் 3 ஆவது நாளாக வனத்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

ஆரோக்கியநாதபுரத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் ஊர்குடி என்ற பகுதியில் சிறுத்தையை சிலர் பார்த்ததாக தகவல் கிடைத்துள்ள நிலையில் வனத்துறையினர் அந்த பகுதியில் கண்காணித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com