
பழநியில் 2024 ஆகஸ்ட் 24 மற்றும் 25 தேதிகளில் நடைபெறவுள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கான அழைப்பிதழ் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு முதல்வர் தலைமையில் 27.02.2024 அன்று நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் கூட்ட முடிவுகளின்படி, 'தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் பெருமையை உலகில் உள்ள முருகபக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடத்தப்படவுள்ளது.
இம்மாநாடு தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் வகையில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் தலைமையில் ஆன்மிக பெரியோர்கள் மற்றும் துறை உயர் அலுவலர்கள் உள்ளிட்ட 20 உறுப்பினர்களைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தலைமையில் 11 செயற்பாட்டுக் குழுக்களும் அமைக்கப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
இம்மாநாட்டில் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்பும் பேராளர்கள்/ஆய்வு மாணவர்கள் பதிவு செய்திடும் வகையில் தனி இணையதளம் தொடங்கப்பட்டு இதுவரை இந்தியாவிலிருந்து 583 நபர்களும், வெளிநாடுகளிலிருந்து 153 நபர்களும் பங்கேற்க பதிவு செய்துள்ளதோடு, 1,003 நபர்கள் ஆய்வுக் கட்டுரைகளையும் சமர்ப்பித்துள்ளனர்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தலைமையில் இம்மாநாடு தொடர்பாக 15 ஆய்வுக் கூட்டங்களும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோர் பழனியில் மாநாட்டு பணிகளை 4 முறை களஆய்வும், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 2 முறை அனைத்துத் துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டமும் நடத்தப்பட்டுள்ளது.
இம்மாநாட்டின் நிறைவு நாளில் தமிழ்க்கடவுள் முருகனின் பெருமைகளை உலகறியும் வகையில் பறைசாற்றிய அடியார்கள், சமயப்பணி புரிந்தோர், சமய சொற்பொழிவாளர்கள், அதிகளவில் திருப்பணி மேற்கொண்டோர், ஆன்மிக மற்றும் இலக்கிய படைப்பாளர்களை சிறப்பிக்கும் வகையில் 15 முருகனடியார்களின் பெயரில் விருதுகள் வழங்கி சிறப்பு செய்யப்பட உள்ளது. இம்மாநாடு இந்து சமய அறநிலையத்துறையின் வரலாற்றில் முத்தாய்ப்பாக அமைவதோடு உலகெங்கும் உள்ள முருக பக்தர்கள் பெருமை அடைய செய்யும் வகையில் சிறப்பாக நடத்தப்படவுள்ளது.
இந்நிகழ்வில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் பி.சந்தரமோகன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என். ஸ்ரீதர், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர் ரா.சுகுமார், இ.ஆ.ப., அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் திருவண்ணாமலை ஆதீனம் பொன்னம்பல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபரசுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள், சுகி சிவம், மு.பெ. சத்தியவேல் முருகனார், தேசமங்கையர்க்கரசி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.