
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 239 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கயானாவில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி மேற்கிந்தியத் தீவுகளின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 160 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டேன் பிட் அதிகபட்சமாக 38 ரன்கள் குவித்தார். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஷமர் ஜோசப் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் 144 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 54 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவரைத் தொடர்ந்து, கீஸி கார்ட்டி அதிகபட்சமாக 26 ரன்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்கா தரப்பில் வியான் முல்டர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நண்ட்ரே பர்கர் 3 விக்கெட்டுகளையும், கேசவ் மகாராஜ் 2 விக்கெட்டுகளையும் மற்றும் ககிசோ ரபாடா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
16 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது தென்னாப்பிரிக்க அணி. தொடக்க ஆட்டக்காரர்கள் அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர். 79 ரன்களுக்கு தென்னாப்பிரிக்க அணி முதல் விக்கெட்டை இழந்தது. டோனி டி ஸார்ஸி 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் கேப்டன் டெம்பா பவுமா 4 ரன்களிலும், டேவிட் பெடிங்ஹம் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். நிதானமாக விளையாடிய அய்டன் மார்க்ரம் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் எடுத்துள்ளது. கைல் வெரைன் 50 ரன்களுடனும், வியான் முல்டர் 34 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென்னாப்பிரிக்க அணி மேற்கிந்தியத் தீவுகளைக் காட்டிலும் 239 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.