சென்னை: “முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான, திமுக ஆட்சியில் 2,000-ஆவது கோயில் குடமுழுக்கு விழா மயிலாடுதுறை, வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் வருகிற ஆக.30 ஆம் தேதி நடைபெற உள்ளது” என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இந்து அறநிலையத்துறை தனது ஆளுகைக்குட்பட்ட தென்மையான கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், குடமுழுக்கு நடத்துதல், திருக்குளங்கள், திருத்தேர்கள் மற்றும் நந்தவனங்களை சீரமைத்தல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்து வழங்குதல், கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு பாதுகாத்தல், கோயில்களின் வருவாய் இனங்களை முறைப்படுத்தி வசூலித்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
“கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆகம விதிப்படி குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும்; குடமுழுக்குகள் நடைபெறாத கோயில்களை கண்டறிந்து குடமுழுக்கு நடத்தும் பணிகளை திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த 39 மாதங்களாக இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது; ஆக.27 வரை 1,983 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளன; இதில் 1,000-வது குடமுழுக்காக சென்னை, மேற்கு மாம்பலம், காசி விஸ்வநாதர் கோயிலில் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதியும், 1,500-ஆவது குடமுழுக்கு கோவை, வடபுத்தூர், வன்னிகுமார கோயிலில் நடைபெற்றது”
“கன்னியாகுமரி, திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் 400 ஆண்டுகளுக்கு பிறகும்; காஞ்சிபுரம், சாத்தனஞ்சேரி, கரியமாணிக்க வரதராஜ பெருமாள் கோயிலில் 300 ஆண்டுகளுக்கு பிறகும்; ராணிப்பேட்டை, தக்கோலம், கங்காதீஸ்வரர் கோயிலில் 150 ஆண்டுகளுக்கு பிறகும்;
திருநெல்வேலி, அரிகேசவநல்லூர், பெரியநாயகி சமேத அரியநாத கோயிலில் 123 ஆண்டுகளுக்கு பிறகும்; வேலூர், வெட்டுவானம் திரௌபதியம்மன் கோயிலில்110 ஆண்டுகளுக்கு பிறகும்; 5 கோயில்களுக்கு 100 ஆண்டுகளுக்கு பிறகும்; 6 கோயில்களில் 70 ஆண்டுகளுக்கு பிறகும்; 16 திருக்கோயில்களுக்கு 50 ஆண்டுகளுக்கு பிறகும், 15 கோயில்களில் 30 ஆண்டுகளுக்கு பிறகும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.”
2022 - 2023 ஆம் நிதியாண்டில் ரூ.158 கோடி மதிப்பீட்டில் 113 கோயில்களும்; 2023 - 24 ஆம் நிதியாண்டில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் 84 கோயில்களை புனரமைத்து பாதுகாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன; கிராமப்புற கோயில்களில் பணிகள் மேற்கொள்ள ஆண்டுதோறும் தலா ரூ.1,000 என்ற எண்ணிக்கை ரூ.1,250 ஆகவும்; நிதியுதவி தலா ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டு இதுவரை 3,750 கிராமப்புற கோயில்களுக்கு ரூ. 150 கோடி நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது.
திமுக அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை 9,415 கோயில்களில் ரூ.5,351.48 கோடி மதிப்பீட்டில் 20,649 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் 8,276 திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மேலும் 9,731 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதியும் வழங்கப்பட்டுள்ளன.
திமுக அரசு பொறுப்பேற்றபின், தொன்மையான கோயில்களைப் புனரமைத்து பாதுகாத்திடும் வகையில் குடமுழுக்குகள் நடத்தப்பட்டு வருகின்றன;
அந்த வகையில் 2,000-ஆவது குடமுழுக்காக மயிலாடுதுறை, பரசலூர் வீரட்டேஸ்வரர் கோயில் குடமுழுக்கு வருகிற ஆகஸ்ட் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது என சேகர்பாபு கூறியுள்ளார்.