சந்தோஷ் சிவனுக்கு கேன்ஸ் ஒளிப்பதிவுச் சாதனையாளர் விருது! - பெருமை பெறும் முதல் இந்தியர்!

கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவையொட்டி ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுக்கு சிறப்பு சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தோஷ் சிவனுக்கு கேன்ஸ் ஒளிப்பதிவுச் சாதனையாளர் விருது! - பெருமை பெறும் முதல் இந்தியர்!

எதிர்வரும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுக்கு சிறந்த சாதனைக்கான பியர் ஆசிங்யு ( Pierre Angénieux Tribute) விருது வழங்கப்படுகிறது.

இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் சந்தோஷ் சிவன்.

1986-ல் நிதியுடே கதா என்கிற மலையாளப் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமான சந்தோஷ் சிவன் தமிழ், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தவிர, தி டெரரிஸ்ட், உருமி, மல்லி, மும்பைகார் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். ஒளிப்பதிவாளராக, இயக்குநராக இதுவரை 12 தேசிய விருதுகளைப் பெற்று ஆச்சரியப்படுத்தியவர்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கிய தளபதி, ரோஜா, இருவர், ராவணன், செக்க சிவந்த வானம் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து இந்தப் படங்களின் வெற்றியில் பெரும் பங்காற்றியவர்.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் அதிக பாராட்டுகளைப் பெற்ற திரைப்படங்களில் ஒன்று ரோஜா. ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகமான அப்படத்தில் இடம்பெற்ற ‘சின்னச் சின்ன ஆசை’ பாடல் இந்தியளவில் மிகப் பெரிய கவனத்தைப் பெற்றதற்கு ரஹ்மான் ஒரு காரணம் என்றால், அப்பாடலின் வரிகளுக்கு ஏற்ப வயல்கள், அருவி, மரம் என கண்களைக் கவரும் சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு இன்னொரு காரணம்.

சின்னச் சின்ன ஆசை பாடலில்..
சின்னச் சின்ன ஆசை பாடலில்..

இந்தப் பாடல் குற்றாலத்தில் படப்பிடிப்பு செய்யப்பட்டபோது வயல்வெளிகளின் பச்சை நிறம் குறைவாக இருக்க, சந்தோஷ் சிவனிடம் “எனக்கு பாரதிராஜா படத்தில் வருவது போன்ற அடர் பச்சையான வயல் வேண்டும்” என வருத்தப்பட்டுச் சொன்னாராம் இயக்குநர் மணிரத்னம். சிறிது நேரம் யோசித்த சந்தோஷ் சிவன் லைட்டிங் மற்றும் கண்ணாடி மூலம் பச்சை வயலை ஓவியம்போல் ஒளிப்பதிவில் கொண்டு வந்து அசத்தியிருக்கிறார். இந்த அழகைக் கண்ட பல இயக்குநர்கள் படப்பிடிப்புக்காக குற்றாலத்தைத் தேடிச் சென்றதற்கு சந்தோஷ் சிவனே காரணம்.

இதுபோல், ‘காட்டுக் குயிலு’ (தளபதி), ‘நறுமுகையே’ (இருவர்), ‘காட்டுச் சிறுக்கி’ (ராவணன்) உள்ளிட்ட பாடல்களில் வெளிப்பட்ட ஒளிப்பதிவு தரமும் காட்சி ஒருங்கிணைப்பும் விமர்சகர்கள் மத்தியில் நினைவுகூரப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. எந்தக் கதையைத் திரை வழியே சொன்னாலும் அதற்கு தன்னால் முடிந்த வண்ணங்களைச் சேர்த்து ஓவியமாக மாற்றுவதில் கலைஞரான சந்தோஷ் சிவன், தான் இயக்கிய ‘உறுமி’ படத்தின் ஒளிப்பதிவை ஓவியம் போன்றே காட்சிப்படுத்தி சிலிர்க்க வைத்தார்.

இன்றும் பெருந்தச்சன், கலாபானி, அஹம், இருவர், ராவணன் உள்ளிட்ட படங்கள் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் தனித்துவம் பெற்ற படங்களாக கருதப்படுகின்றன.

ஒளிப்பதிவாளர் என்பதைத் தாண்டி இயக்குநராகவும் தனி கவனம் பெற்றவர் சந்தோஷ் சிவன். 1988-ல் இவர் இயக்கிய ‘ஸ்டோரி ஆஃப் திப்லு’ குறும்படத்திற்கு சிறந்த குறும்படம் பிரிவில் தேசிய விருது வழங்கப்பட்டது. இப்படம் உள்பட இவர் இயக்கிய ஹலோ, தி டெரரிஸ்ட், மல்லி, நவரசா, ப்ரம்பா ஆகிய படங்கள் சிறந்த படங்களுக்கான தேசிய விருதை வென்றவை.

விஜய்சேதுபதி நடிப்பில் உருவான மும்பைக்கார் படத்தை இயக்கி முடித்துள்ளார். கலியுகம், மோகா ஆகிய படங்களை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில், கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவாளர்களுக்காக வழங்கப்படும் பியர் ஆசிங்யு (Pierre Angénieux Tribute) விருது வழங்குவதற்காக சந்தோஷ் சிவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

உலகின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களுக்கு வழங்கப்படும் இந்த விருது, 2024 ஆம் ஆண்டிற்காக சந்தோஷ் சிவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையிலும் உலகளவில் புகழ்பெற்ற 10 பேர் இவ்விருதினைப் பெற்றுள்ளனர்.

சந்தோஷ் சிவனுக்கு கேன்ஸ் ஒளிப்பதிவுச் சாதனையாளர் விருது! - பெருமை பெறும் முதல் இந்தியர்!
குணா குகையில் த்ரில்லர்: மஞ்சுமெல் பாய்ஸ் - திரை விமர்சனம்!

சிறந்த ஒளிப்பதிவாளரும் நவீன ஸூம் லென்ஸ் நுட்பத்தைக் கண்டறிந்தவர்களில் ஒருவருமான பியர் ஆசிங்யுவின் பெயரால் உருவாக்கப்பட்ட இவ்விருதினை 2013 ஆம் ஆண்டு தொடக்கம் உலகளாவிய கேன்ஸ் திரைப்பட விழாக் குழு வழங்கி வருகிறது.

மேலும், சிறப்பு மிக்க இவ்விருதினைப் பெறும் முதல் இந்தியர் என்கிற பெருமையையும் சந்தோஷ் சிவன் பெறுகிறார்.

கேன்ஸ் திரைப்பட விழா வரும் மே மாதம் 14 ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. நிறைவு நாளுக்கு முந்தைய நாளான 24 ஆம் தேதி சந்தோஷ் சிவனுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com