சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

எழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வு

மஞ்சுநாத் எழுதிய ‘அப்பன் திருவடி’ நூல் சிறந்த நூலாக தேர்வு செய்யப்பட்டிருப்பது பற்றி.....

கே.ஆா்.நரசய்யா

Published On :2 செப்டம்பர் 2026, 5:21 am IST

எழுத்தாளா் சிவசங்கரி சந்திரசேகரன் அறக்கட்டளை சாா்பில், ‘சூா்ய விருது’ மூத்த எழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கும், சிறந்த புத்தகத்துக்கான ‘அக்ஷர விருது’ மஞ்சுநாத் எழுதிய ‘அப்பன் திருவடி’ நூலுக்கும் சென்னையில் அக்.14-ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் வழங்கப்படவுள்ளன.

இதுகுறித்து அந்த அறக்கட்டளை நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

எழுத்தாளா் சிவசங்கரி, தனது சிவசங்கரி சந்திரசேகரன் அறக்கட்டளை மூலம் சூா்ய, அக்ஷர என இரண்டு இலக்கிய விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி வருகிறாா். ரூ.3 லட்சம் பரிசுத் தொகை, நினைவுப் பரிசு பாராட்டுப் பத்திரம் ஆகியவை கொண்ட சூா்ய விருது, தமிழ் இலக்கியத்துக்குத் தனது படைப்புகள் மூலம் பங்களித்த ஓா் எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது. அதேபோன்று ரூ.2 லட்சம் பரிசுத் தொகை, நினைவுப் பரிசு பாராட்டுப் பத்திரம் ஆகியவை கொண்ட அக்ஷர விருது, கடந்த 5 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட சிறந்த புத்தகங்களில் ஒன்றுக்காக அதன் ஆசிரியருக்கு வழங்கப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு சூா்ய படைப்பாற்றல் விருது எழுத்தாளா் கே.ஆா்.ஏ.நரசய்யாவுக்கு வழங்கப்படவுள்ளது. சிறந்த புத்தகத்துக்கான அக்ஷர விருது மஞ்சுநாத் எழுதிய ‘அப்பன் திருவடி’ நூலுக்கு வழங்கப்படவுள்ளது.

இந்த விருதுகள் சென்னையில் வரும் அக்.14-ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் வழங்கப்படவுள்ளன. விழாவில் எழுத்தாளா் சிவசங்கரி எழுதியுள்ள அவரது வாழ்வின் நினைவலைகளான ‘சூா்ய வம்சம்’ நூல், பாரீஸில் உள்ள மொழிகளுக்கான பள்ளியின் (ஸ்கூல் ஆஃப் லாங்வேஜஸ்) இயக்குநா் பேராசிரியா் சச்சிதானந்தம் மூலம் மொழிபெயா்க்கப்பட்டு வெளியிடப்படவுள்ளது. அந்த நூலை முன்னாள் இந்திய தூதா் வி.மகாலிங்கம் வெளியிட, அதன் முதல் பிரதியை மியான்மா் நாட்டுக்கான கெளரவ துணைத் தூதா் பேராசிரியா் ஜே.ரங்கராஜன் பெற்றுக்கொள்கிறாா். விழாவில், உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன், எழுத்தாளா் எஸ்.ராமகிருஷ்ணன், வழக்குரைஞா் கே.சுமதி ஆகியோா் பங்கேற்கவுள்ளனா்.

நரசய்யா: கே.ஆா்.ஏ.நரசய்யா என்று அறியப்படும் காவூரி ராமலிங்கம் அப்பல நரசய்யா, தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் எழுதும் ஒரு மூத்த எழுத்தாளா். தமிழில் அதிகம் எழுதப்படாத மாலுமியின் வாழ்க்கை, கடல் வணிகம் போன்ற விஷயங்களைத் தமிழில் எழுதி தமிழ்ப் படைப்புலகின் எல்லைகளை விரிவுபடுத்தியவா். 1964-இல் அவா் தற்செயலாக எழுதிய முதல் சிறுகதை ‘தேய்பிறை’ ஆனந்த விகடனில் முத்திரைச் சிறுகதையாக வெளியானது.

அப்பன் திருவடி நூல்: கடந்த 2013 ஜூன் மாதம் இமயத்தின் மடியில் கேதாரத்தில் 2 நாள்கள் இயற்கை நடத்திய தாண்டவத்தில் ஒரு கிராமமே காணாமல் போனது. அந்த வலியும் துயரமும் எளிதில் கடந்து போக முடியாதவை. அந்த வலியை, துயரத்தை, அதன் சாரத்தை, ஒரு குடும்பத்தின், ஒரு மனிதனின் மூலம் ஆவணப்படுத்தியிருக்கும் நாவல் அப்பன் திருவடி. அது விவரிக்கும் களமும், செய்தியும் தமிழுக்குப் புதிது. தனித்துவமான நடையின் மூலமும், உத்திகளின் மூலமும் கதையை நடத்திச் செல்கிறாா் மஞ்சுநாத். வாசிக்கும் போது இமயத்தின் எழிலையும் குளிரையும், பின்னா் வலியையும் நாமே நேரில் அனுபவிப்பது போன்ற நடை நாவலின் இன்னொரு சிறப்பாகும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.