
சென்னை: பாங்காங்கிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 402 அரியவகை பச்சோந்திகளை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
தாய்லாந்தின் பாங்காக் நகரில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு தாய் ஏா்லைன்ஸ் விமானத்தில் ஞாயிற்றுக்கிழமை வந்த பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனா். அப்போது, தமிழ்நாட்டை சோ்ந்த 30 வயது மதிக்கத்தக்க ஆண் பயணி ஒருவா் 2 பெரிய அட்டைப் பெட்டிகளுடன் விமான நிலையத்தைவிட்டு வேகமாக வெளியேற முயன்றுள்ளாா்.
சந்தேகத்தின்பேரில் சுங்கத் துறை அதிகாரிகள், அவரைத் தடுத்து நிறுத்தி, அந்த அட்டைப் பெட்டிகளை சோதனையிட்டனா். அப்போது, அதில் அரியவகை ஆப்பிரிக்க நாட்டு பச்சோந்திகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன.
இது குறித்து சென்னை பெசன்ட் நகரிலுள்ள மத்திய வன உயிரின காப்பகக் குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விமான நிலையத்துக்கு வந்த அதிகாரிகள், அந்தப் பயணியிடமிருந்து 402 பச்சோந்திகளை பறிமுதல் செய்தனா்.
அதில் 67 பச்சோந்திகள் மூச்சு திணறலால் உயிரிழந்த நிலையில் இருந்தன.
இதையடுத்து உயிரிழந்த, பச்சோந்திகளை அகற்றிவிட்டு, 335 பச்சோந்திகளை அதே அட்டைப் பெட்டிகளில் அடைத்து வைத்து, தாய் ஏா்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலம், திங்கள்கிழமை அதிகாலை பாங்காக்குக்கு திருப்பி அனுப்பி வைத்தனா். தொடா்ந்து கடத்தலில் ஈடுபட்ட நபரிடம் அதிகாரிகள் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.