ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளி என்கவுண்டர் திமுக அரசின் நாடகம்: சீமான்

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளி திருவேங்கடம் மீதான என்கவுண்டர் திமுக அரசின் நாடகம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
சீமான் (கோப்புப்படம்)
சீமான் (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளி திருவேங்கடம் மீதான என்கவுண்டர் திமுக அரசின் நாடகம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட விசாரணை சிறைவாசி திருவேங்கடம், சென்னை - மாதவரத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

காவல் துறையினர் பாதுகாப்பில் இருந்த விசாரணை சிறைவாசி சுட்டுக்கொல்லப்பட்டது எப்படி? முக்கியமான அரசியல் தலைவரின் படுகொலையில் தொடர்புடைய குற்றவாளியின் பாதுகாப்பில் காவல்துறை அலட்சியமாக இருந்தது எப்படி? இந்திய அளவிலான கட்சியின் மாநிலத் தலைவரின் படுகொலையைத்தான் தடுக்க முடியவில்லை. குறைந்தப்பட்சம் அதில் சரணடைந்த விசாரணை சிறைவாசியையும் காப்பற்ற முடியவில்லை என்பது வெட்கக்கேடானது. வன்மையான கண்டனத்துக்குரிய இந்நிகழ்வு திமுக ஆட்சியில் காவல்துறை எந்த அளவிற்குத் திறனற்றதாகியுள்ளது என்பதையும், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எவ்வளவு மோசமாகச் சீரழிந்துள்ளது என்பதையுமே காட்டுகிறது.

உண்மையை மூடி மறைப்பதற்காக காவல் துறையினரே போலியாக துப்பாக்கிச்சூடு நடத்தியது பல வழக்குகளில் மெய்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் சரணடைந்தவர்கள் குற்றவாளிகள் அல்ல என்ற சந்தேகம் தற்போது விசாரணை சிறைவாசி திருவேங்கடம் கொல்லப்பட்டிருப்பதன் மூலம் அதிகமாகிறது.

சீமான் (கோப்புப்படம்)
சந்தேகத்தை ஏற்படுத்தும் ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளி என்கவுண்டர்: இபிஎஸ் குற்றச்சாட்டு

ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் இரண்டு திமுக நிர்வாகிகள் விசாரணைக்கு உட்பட்டிருக்கும் நிலையில், உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமென்று ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் உள்பட அனைவரும் வலியுறுத்தி வந்த நிலையில், விசாரணை தொடங்கும் முன்பே நடத்தப்பட்டுள்ள இத்துப்பாக்கிச்சூடு உண்மைக் குற்றவாளிகளைத் தப்பிக்க வைப்பதற்காக திமுக அரசு நடத்திய நாடகம்தான் இப்படுகொலையோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

என்கவுண்டர் எனும் பெயரில், விசாரணை சிறைவாசிகளைக் கொலைசெய்வதை எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. குற்றவாளிகள் மீதான மக்களின் கோபத்தையும், ஆளும் ஆட்சியாளர்கள் மீதான அதிருப்தியையும் மட்டுப்படுத்த வேண்டுமானால் என்கவுண்டர்கள் உதவலாமே ஒழிய, அது ஒருநாளும் குற்றத்துக்கான முழுமையானத் தீர்வில்லை.

ஆகவே, மனித உரிமைகள் ஆணையமும், நீதிமன்றமும் விசாரணை சிறைவாசி திருவேங்கடம் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது குறித்து தீர விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டுமெனவும், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துவதாக சீமான் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com