
மஸ்கட் (ஓமன்): 13 இந்தியர்கள் மற்றும் இலங்கையைச் சேர்ந்த 3 பேர் என 16 பேர்களுடன் கொமரோஸ் நாட்டின் கொடியுடன் சென்ற எண்ணெய்க் கப்பல் ஓமன் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக அந்நாட்டின் கடல்சார் பாதுகாப்பு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்த நிலையில், மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடல்சார் பாதுகாப்பு மையம் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டிருப்பதவாது: " 13 இந்தியர்கள் மற்றும் இலங்கையைச் சேர்ந்த 3 பேர் என 16 பேர்களுடன் கோமரோஸ் கொடியுடன் கூடிய ராஸ் மத்ரகாவில் இருந்து ஏமன் நாட்டின் துறைமுக நகரமான ஏடன் துறைமுகத்திற்கு சென்ற பிரஸ்டீஜ் பால்கன் என்ற எண்ணெய் கப்பல் தென்கிழக்கே 25 கடல் மைல்கள் தொலைவில் சென்றுகொண்டிருந்த போது ஓமானின் துகம் துறைமுகத்திற்கு அருகே கடலில் கவிழ்ந்தது. இதையடுத்து கப்பலில் இருந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த கப்பல் 117 மீட்டர் நீளமுள்ள எண்ணெய் தயாரிப்பு பொருள்களை ஏற்றிச் செல்லக்கூடிய வகையில் 2007 இல் தயாரிக்கப்பட்டது.
இத்தகைய சிறிய ரக எண்ணெய் கப்பல்கள் பொதுவாக குறுகிய பயணங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கப்பலில் இருந்த 13 இந்தியர்கள் மற்றும் இலங்கையைச் சேர்ந்த 3 பேர் என 16 பேரின் நிலை குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
முன்னதாக,கடந்த நவம்பர் 27 ஆம் தேதி கோமரோஸ் கொடியுடன் இந்திய பணியாளர்கள் உட்பட 14 பணியாளர்களுடன் எகிப்தின் டெக்ஹெய்லாவில் இருந்து இஸ்தான்புல்லுக்கு உப்பு ஏற்றிச் சென்று கொண்டிருந்த ராப்டார் சரக்குக் கப்பல், லெஸ்போஸின் தென்மேற்கே 4.5 கடல் மைல் (8.3 கிமீ) தொலைவில் சென்று கொண்டிருந்த போது அதிவேகக் காற்றின் காரணமாக கிரேக்கத்தின் லெஸ்போஸ் தீவின் கடலில் மூழ்கியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.