
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை நடத்த இயலாது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளா்களின் மறுவாழ்வு குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று (ஜூலை 22) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர், “மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை தமிழக அரசு எடுத்து நடத்த இயலாது. தேயிலை தோட்டத்தை டான் டீ நிர்வாகத்திற்கு வழங்குவது சாத்தியமற்றது” என்று வாதிட்டார்.
இந்நிலையில், தமிழக அரசு மற்றும் டான் டீ நிர்வாகம் ஆலோசித்து இரண்டு நாள்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலையில் உள்ள தேயிலை தோட்டத்தை நிா்வகித்து வரும் பாம்பே பா்மா நிறுவனத்தின் குத்தகை காலம் வரும் 2028-ஆம் ஆண்டு முடிவடைகிறது. இதன் காரணமாக அங்கு பணியாற்றும் சுமாா் 550 தேயிலைத் தோட்ட தொழிலாளா்களிடம் கட்டாய விருப்ப ஓய்வு விண்ணப்பத்தில் அந்த நிறுவனம் கையொப்பம் வாங்கியுள்ளது.
மேலும் அங்குள்ள குடியிருப்புகளை காலி செய்துவிட்டு வெளியேறுமாறு நிா்வாகம் உத்தரவிட்டதன் பேரில் ஏராளமான தொழிலாளா்கள் அங்குள்ள குடியிருப்புகளை காலி செய்துள்ளனா். இதனிடையே மாஞ்சோலை தேயிலை நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து, சென்னை உயா் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்ட வழக்கில், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் வசிக்கும் தொழிலாளா்களின் வீடுகளை காலி செய்யக்கூடாது. தற்போதைய நிலை தொடர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக கடந்த மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீதிமன்றம் என்ன வழிகாட்டுதல் அளிக்கிறதோ, அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.