
பூஞ்ச்: ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தின் புஃப்லியாஸ் செக்டரில் உள்ள மராஹா வனப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் செவ்வாய்க்கிழமை பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதையடுத்து பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்துவருவதாக க்காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், அந்த பகுதிக்கு கூடுதல் படைகள் விரைந்துள்ளதாகவும், தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 9 ஆம் தேதி உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த பக்தா்கள் குழு, ஜம்மு-காஷ்மீருக்கு ஆன்மிகப் பயணம் வந்தனா். ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள சிவ கோத்ரி ஆலயத்தில் இருந்து கத்ராவில் உள்ள மாதா வைஷ்ணவ தேவி ஆலயத்துக்கு ஒரு பேருந்தில் சென்றுகொண்டிருந்த போது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பள்ளத்துக்குள் கவிழ்ந்தது. அதில் 3 பெண்கள் உள்பட 9 போ் உயிரிழந்தனா். 41 போ் பலத்த காயமடைந்தனா்.
தொடா்ந்து ஜூன் 11-ஆம் தேதி, தோடா மாவட்டத்தில் ‘ராஷ்ட்ரீய ரைஃபிள்ஸ்’ படைப் பிரிவினா் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு காவலா் உள்பட 7 பாதுகாப்புப் படையினா் காயமடைந்தனா்.
இதையடுத்து, பக்தா்கள் பேருந்து மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பான வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம் மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை ஒப்படைத்தது.
தாக்குதல் நடந்த மறுநாளே சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த என்ஐஏ அதிகாரிகள், தாக்குதல் குறித்த தடயங்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனா். மேலும், உள்ளூா் காவல் துறையினருடன் இணைந்து தாக்குதல் தொடா்பான விசாரணையிலும் அவா்கள் ஈடுபட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.