மோடியின் பேச்சு பொய்யானது, மூர்க்கத்தனமானது: ப. சிதம்பரம் சாடல்

நிதிநிலை அறிக்கையில் 15 சதவீதத்தை ஒதுக்க விரும்பியதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியிருப்பது முற்றிலும் தவறானது
மோடியின் பேச்சு பொய்யானது, மூர்க்கத்தனமானது: ப. சிதம்பரம் சாடல்
Published on
Updated on
2 min read

புது தில்லி: முந்தைய காங்கிரஸ் அரசு இஸ்லாமியர்களுக்கு மொத்த நிதிநிலை அறிக்கையில் 15 சதவீதத்தை ஒதுக்க விரும்பியதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியிருப்பது முற்றிலும் தவறானது, மூர்க்கத்தனமானது மற்றும் வினோதமானது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சாடியுள்ளார்.

மத்திய அரசின் மொத்த நிதிநிலை அறிக்கையில் இஸ்லாமியர்களுக்கு 15 சதவீத நிதியை ஒதுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது; நிதிநிலையாக இருந்தாலும், இடஒதுக்கீடாக இருந்தாலும் மத அடிப்படையில் பிரிக்கப்பட ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

மக்களவைத் தோ்தலையொட்டி, மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்று பேசிய மோடி, மத்தியில் கடந்த 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அரசின் மொத்த நிதிநிலை அறிக்கையில் 15 சதவீத நிதியை தங்களின் விருப்பத்துக்குரிய வாக்கு வங்கியான இஸ்லாமியர்களுக்கு செலவழிக்க அந்த கட்சி திட்டமிட்டது. இந்த திட்டத்தை காங்கிரஸ் முன்மொழிந்தபோது, நான் குஜராத் முதல்வராக இருந்தேன்.

பாஜக தரப்பில் கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டதால், அவா்களால் திட்டத்தைச் செயல்படுத்த முடியவில்லை. அதே திட்டத்தை மீண்டும் கொண்டுவர காங்கிரஸ் விரும்புகிறது.

மத அடிப்படையில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்க நினைப்பது ஆபத்தான யோசனை. நாட்டு மக்கள் அனைவருக்கும் நலத் திட்டப் பலன்கள் கிடைப்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம். ஆனால், மத அடிப்படையில் நாட்டைப் பிரிக்கும் வேலையில் காங்கிரஸ் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறது.

அரசமைப்புச் சட்டத்தின் தலைமைச் சிற்பியான பி.ஆா்.அம்பேத்கா், கல்வி-வேலைவாய்ப்பில் மத ரீதியிலான இடஒதுக்கீட்டை உறுதியாக எதிா்த்தாா். இடஒதுக்கீடாக இருந்தாலும், பட்ஜெட்டாக இருந்தாலும் மத அடிப்படையில் பிரிக்கப்பட ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் கருத்தை கடுமையாக சாடியுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், பிரதமரின் பேச்சுகள் மற்றும் அறிக்கைகள் வினோதமானவை மற்றும் அவருக்கு உரை எழுதி கொடுப்பவர்கள் சமநிலையை இழந்துவிட்டனர் என்பதைக் காட்டுகின்றன" என்று தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மோடியின் பேச்சு பொய்யானது, மூர்க்கத்தனமானது: ப. சிதம்பரம் சாடல்
பத்திரிகையாளரின் சுதந்திரத்தை பறித்ததற்கான தண்டனையை யார் செலுத்துவார்கள்? - ப.சிதம்பரம் கேள்வி

இந்து-இஸ்லாமியர்கள் அரசியல் குறித்து ஒருபோதும் பேச மாட்டேன் என்றும், அப்படி பேசும் நிலை வந்தால் பொதுவாழ்வில் இருப்பதற்கான தகுதியை இழந்துவிடுவேன் என்று செவ்வாய்கிழமை கூறிய பிரதமர், அடுத்த நாளே, "இந்து- இஸ்லாமியர்களை பிரிக்கும் தனது வழக்கமான விளையாட்டை விளையாடியுள்ளார்" என்று சிதம்பரம் கூறினார்.

அதாவது, “மத்திய நிதிநிலை அறிக்கையில் 15 சதவீதத்தை இஸ்லாமியர்களுக்கு மட்டுமே செலவிட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு திட்டம் தீட்டியது என்ற மோடியின் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது.

காங்கிரஸ் இஸ்லாமியர்களுக்கு ஒரு நிதிநிலை அறிக்கையும், இந்துகளுக்கு ஒரு நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யும் என்ற அவரது குற்றச்சாட்டு மிகவும் மூர்க்கத்தனமானது, அது ஒரு மாயத்தோற்றம்" என்று சிதம்பரம் கூறினார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 112 ஆவது பிரிவு ஒரு வருடத்திற்கு ஒரு நிதிநிலை அறிக்கையை மட்டுமே தாக்கல் அனுமதிக்கிறது, அதுதான் மொத்த மத்திய நிதிநிலை அறிக்கை. இதில் இரண்டு நிதிநிலை அறிக்கைகள் எப்படி இருக்க முடியும்? என்று சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

"தேர்தல் பிரசாரத்தின் மீதமுள்ள நாள்களில், தவறான குற்றச்சாட்டுகள் மற்றும் மூர்க்கத்தனமான பேச்சுகளின் பாதையில் இருந்து மோடி தன்னை விடுவித்துக்கொள்வார் என்பது எனது முழுமையான நம்பிக்கை," என்று அவர் கூறினார்.

மேலும் பிரதமரின் அறிக்கைகள் நாட்டு மக்களை மட்டுமல்ல, உலகமே உற்றுப் பார்த்தும், பகுப்பாய்வு செய்தும், இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கவில்லை என்றும் சிதம்பரம் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com