
வரும் நவ. 9, 10 ஆகிய தேதிகளில் விருதுநகரில் கள ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வரும், திமுக தலைவமருமான முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர் தெரிவித்ததாவது:
“நவம்பர் 5, 6 தேதிகளில் கோவைக்குச் சென்று கள ஆய்வினைத் தொடங்கவிருக்கிறேன். மற்ற மாவட்டங்களிலும் தொடரவிருக்கிறேன். கள ஆய்வுப் பணிகளை அந்தந்த மாவட்டங்களில் நிறைவு செய்தபிறகு, கட்சிப் பணிகளையும் ஆய்வு செய்வேன்.
மேற்கு மண்டலத் தி.மு.க.வில் ஓட்டை விழுந்துவிட்டதுபோல அரசியல் களத்தில் சித்தரிக்கப்படுவதற்கு மாறாக, கொள்கை உரமிக்க மூத்த நிர்வாகிகளையும், லட்சிய நோக்கத்துடன் செயல்படும் இளைய பட்டாளத்தையும் கொண்ட கழகத்தின் கோட்டையாக மேற்கு மண்டலம் இருக்கிறது என்பதை, கோவையில் தரையிறங்கியதுமே உணர முடிந்தது. விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து, களஆய்வின் முதல் நிகழ்வான எல்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்காவைத் திறந்து வைப்பதற்குச் செல்வதற்காகப் புறப்பட்டபோது, 6 கிலோமீட்டர் நெடுகிலும் சாலையின் இருபுறமும் மக்கள் வெள்ளம்.
இதையும் படிக்க: நாம் தமிழர் கட்சியிலிருந்து 10க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விலகல்
சென்னையில் அண்ணா பெயரில் நூலகமும், மதுரையில் கலைஞர் பெயரில் நூலகமும் அமைந்திருப்பதுபோல, கோவையில் அமையும் நூலகம் மற்றும் அறிவியல் மையம் பெரியார் பெயரில் அமையும் என்பதைத் தெரிவித்து, 2026 ஜனவரியில் நூலகமும் அறிவியல் மையமும் திறக்கப்படும் என்பதையும் காலக்கெடுவுடன் அறிவித்தேன்.
கோவையில் பொதுமக்களின் மகிழ்ச்சியையும் உடன்பிறப்புகளாம் உங்களின் உற்சாகத்தையும் கண்டேன். நெஞ்சம் நிறைந்தேன்.
மக்களின் பேரன்பில் கோவை மாவட்டக் கள ஆய்வு மகிழ்வாக அமைந்தது. அறிவிக்கப்பட்ட திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்றுவோம் என்ற உறுதியை வழங்கி, நவம்பர் 9, 10 தேதிகளில் விருதுநகர் மாவட்டத்தில் ஆய்வுப் பணியினை மேற்கொள்கிறேன்.
கோவையில் தொடங்கினேன்! தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து வருவேன்!" என்று அவர் அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.