மின்னணு உற்பத்தித் துறையில் ரூ.2,666 கோடி முதலீடு ஈா்ப்பு: சிகாகோவில் முதல்வா் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

மின்னணு உற்பத்தித் துறையில் ரூ.2,666 கோடியை ஈா்த்து 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலான புரிந்துணா்வு ஒப்பந்தம் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையொப்பமானது.
stalin
ரூ. 2000 கோடி முதலீட்டில் ஜாபில் தொழிற்சாலைபடம்: எக்ஸ்
Published on
Updated on
1 min read

மின்னணு உற்பத்தித் துறையில் ரூ.2,666 கோடியை ஈா்த்து 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலான புரிந்துணா்வு ஒப்பந்தம் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையொப்பமானது.

இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈா்க்கும் வகையில், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோ நகரங்களில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டுள்ளாா். இதுவரையில் 14 முன்னணி தொழில் நிறுவனங்களுடன் ரூ.4,350 கோடி முதலீட்டுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், உலக அளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயா் அலுவலா்களைச் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி தொடா்ச்சியாக, சிகாகோவில் ஜாபில், ராக்வெல் ஆட்டோமேஷன் மற்றும் ஆட்டோடெஸ்க் ஆகிய நிறுவனங்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டன.

ஜாபில் நிறுவனம் திருச்சியில் மின்னணு உற்பத்தி நிறுவனத்தை ரூ.2,000 கோடி முதலீட்டில் அமைக்கவுள்ளது. இதன்மூலம் 5,000 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனம் காஞ்சிபுரத்தில் மின்னணு உற்பத்தி நிறுவன விரிவாக்கத் திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளது. ரூ.666 கோடி முதலீட்டிலான இந்தத் திட்டத்தால் 300-க்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், ‘ஸ்டாா்ட்அப்’-கள் போன்றவற்றில் தமிழக இளைஞா்களின் திறன்களை மேம்படுத்த ஆட்டோடெஸ்க் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்வுகளின்போது, தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, துறைச் செயலா் வி.அருண் ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் வே.விஷ்ணு உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com