
வேலூர்: குடியாத்தம் அருகே நண்பனின் குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து கொலை செய்த கட்டட ஒப்பந்ததாரர் வசந்த்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சிங்கில்பாடி ஏரிபட்டி கிராமத்தைச் சேர்ந்த கட்டட ஒப்பந்ததாரரான வசந்த்குமார் என்பவரும் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் வடிவேல் நகர் பகுதியை சேர்ந்த கட்டட தொழிலாளியான யோகராஜ் ஆகிய இருவரும் நண்பர்களாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே கட்டட ஒப்பந்ததாரர் வசந்த்குமார் என்பவருக்கு கடந்த அண்டு திருமணமான நிலையில் மனைவியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை வசந்தகுமார் மாதனூர் பகுதியில் உள்ள நண்பரும் கட்டட தொழிலாளியுமான யோகராஜ் வீட்டிற்கு சென்று யோகராஜ் மனைவியிடம் பேசி கடைக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதாக கூறி அவர்களின் யோகித் (5), தர்ஷன் (4) ஆகிய இரண்டு குழந்தைகளையும் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.
பல மணி நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் வசந்தகுமாருக்கு செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் அச்சமடைந்த யோகராஜ், தனது உறவினர்களுடன் ஆம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு குழந்தைகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதனிடையே, புகாரின் பேரில் ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் அனைத்து காவல்துறையினருக்கும் வாக்கி டாக்கி மூலம் இரண்டு குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் நண்பனே கடத்தி சென்றுள்ளதாக தகவலை தெரிவித்தனர். இதையடுத்து அனைத்து காவல்துறையினரும் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும் வசந்தகுமாரின் செல்போன் என்னை ஆய்வு செய்ததில் சிங்கில்பாடி ஏரிப்பட்டி கிராமத்தில் செல்போன் டவர் மூலம் வசந்த்குமார் அங்கு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
சிறிது நேரம் கழித்து சிங்கல்பாடி எரிபட்டி கிராமத்தில் உள்ள கோயில் பின்புறத்தில் இரண்டு ஆண் குழந்தைகள் சடலம் அருகே வசந்தகுமார் அமர்ந்து இருந்த வசந்தகுமார் கிராம மக்களை பார்த்தவுடன் அங்கிருந்து தப்பியோடி உள்ளார்.
இது குறித்து கிராம மக்கள் குடியாத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
குழந்தைகள் சடலம் மீட்பு
இதனிடையே குடியாத்தம் மற்றும் ஆம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தைகளின் சடலத்தை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் அந்தப் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டதில் விவசாய நிலத்தில் இருசக்கர வாகனம் ஒன்று இருப்பதாக கிராம மக்கள் கூறிய நிலையில் போலீசார் அந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து அங்குள்ள விவசாய நிலம் மற்றும் வீடுகளில் பொதுமக்கள் உதவியுடன் கொலையாளியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
கொலையாளி கைது
இந்த நிலையில், தனது பாட்டி வீட்டில் கட்டிலுக்கு அடியில் பதுங்கி இருந்த வசந்தகுமாரை காவல்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்து ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷிரியாகுப்தா தலைமையிலான குடியாத்தம் டிஎஸ்பி மற்றும் ஆம்பூர் டிஎஸ்பி உள்ளிட்ட காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நண்பனின் இரண்டு ஆண் குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து கொலை செய்த கட்டட ஒப்பந்ததாரரால் இரவிலும் அந்த கிராம மக்கள் அச்சமடைந்து சோகத்தில் மூழ்கினர்.
மன அழுத்தம்
மேலும் கிராம மக்கள் கூறுகையில் கொலையாளி வசந்தகுமார் மனைவியை பிரிந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர்.
நரபலியா?
மேலும் கொலை செய்யபட்டு இறந்த குழந்தைகளின் உறவினர்கள், பொதுமக்கள் கூறுகையில், கோயில் அருகாமையில் குழந்தைகளின் உடல் மீட்கப்பட்டுள்ளதால் அவர்களை நரபலி கொடுத்திருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.