தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்த நிலையில், சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்ததால் பூமி குளிர்ந்தது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்..
ஆந்திரம் மற்றும் ஒடிஸாவுக்கு இடைப்பட்ட மத்திய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வந்தது. இதன் காரணமாக வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இதனால் ஆந்திரம், தெலங்கானா, ஒடிஸா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று (செப். 24) வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் தரைக்காற்று ஓரிரு இடங்களில் மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
மேலும், கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொருத்தவரை..
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்கள்..
இன்று மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் இந்த நாளில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.