
சொத்து வரியை மீண்டும் உயர்த்த திட்டமிட்டு இருந்த நிலையில், அதற்கான தீர்மானம் சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் இன்று(செப். 27) நிறைவேற்றப்பட்டது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மதிப்பிற்குரிய துணை மேயர் மு.மகேஷ்குமார் அவர்கள், ஆணையாளர் (பொ) ஆர். லலிதா, இ.ஆ.ப.,,நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்
கடந்த 2022 ஆம் ஆண்டு மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது. குறைந்தபட்சம் 25 சதவீதம் முதல் அதிகபட்சம் 150 சதவீதம் வரை சொத்து வரி உயா்த்தப்பட்டது.
மேலும், வணிகப் பயன்பாட்டு கட்டடங்களுக்கு 100 சதவீதமும், தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய பயன்பாட்டு கட்டடங்களுக்கு 75 சதவீதமும் வரி உயா்த்தப்ட்டது. முன்னதாக, உயர்த்தப்பட்ட சொத்துவரி சொத்துகளின் அளவு மற்றும் மண்டலங்களைப் பொறுத்து வேறுபட்டது.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் 6 சதவீதம் வரை சொத்து வரியினை உயர்த்தி, இன்று நடைபெற்ற சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த 5-ஆம் தேதி சொத்து வரி உயர்த்துவது தொடர்பாக, உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் நகர பஞ்சாயத்து இயக்குநர் சார்பில், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், உள்ளாட்சி நிர்வாக மண்டல இயக்குநர்களுக்கு உத்தரவு பிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.