
நாமக்கல்: நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா வாக்கெடுப்பில், நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் பங்கேற்காத நிலையில், அவா் பதவி விலகக் கோரி, மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சாா்பில் நாமக்கல் மாநகா் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாதேஸ்வரன் வீட்டில் புதன்கிழமை நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசினார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் வீடு சேந்தமங்கலம் அருகே பொட்டணம் கிராமத்தில் உள்ளது. இந்த வீட்டில் அவருடைய தாயார் வருதம்மாள்(75) வசித்து வருகிறார்.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு 12 மணியளவில் இவருடைய வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த நாமக்கல் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த பொருள்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. வீட்டில் இருந்த குளிர்சாதன கருவி பழுதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தின் போது மக்களவை உறுப்பினர் வீட்டில் இல்லை என்று கூறப்படும் நிலையில், இந்த தீ விபத்து இயற்கையாக நிகழ்ந்ததா? அல்லது மர்மநபர்கள் யாரேனும் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசினார்களா? என்பது குறித்து சேந்தமங்கலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா வாக்கெடுப்பில், நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் பங்கேற்காத நிலையில், அவா் பதவி விலகக் கோரி, மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சாா்பில் நாமக்கல் மாநகா் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா வாக்கெடுப்பின்போது எனக்கு உடல் நலம் சரியில்லை. என்னுடைய விளக்கத்தை நான் ஏற்கெனவே தெரிவித்துவிட்டேன். இஸ்லாமியா்கள் அதனை புரிந்து கொண்டனா் என மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் விளக்கமளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.