மாநில சுயாட்சி: பேரவையிலிருந்து பாஜக வெளிநடப்பு!

மாநில அரசின் உரிமைகளைக் காக்கும் உயர்நிலைக் குழு குறித்த முதல்வரின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு.
மாநில சுயாட்சி: பேரவையிலிருந்து பாஜக வெளிநடப்பு!
Published on
Updated on
1 min read

மாநில அரசின் உரிமைகளை காக்கும் உயர்நிலைக் குழு தொடர்பான முதல்வரின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு செய்தது.

இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில், ஆளுநருக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, மாநில சுயாட்சி தொடர்பாக சட்டப்பேரவை விதி 110 கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.

அதன்படி மாநில உரிமைகளை மீட்டெடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஜோசப் குரியன் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என்றும் இந்தக் குழுவின் இடைக்கால அறிக்கை 2026 ஆம் ஆண்டு ஜனவரியில் தாக்கல் செய்யப்படும், இறுதி அறிக்கையை 2 ஆண்டுகளில் அளிக்கும் என்றும் அறிவித்தார்.

மேலும், "மாநில சுயாட்சியின் முதல் குரல் தமிழ்நாட்டில் இருந்துதான் ஒலிக்கத் தொடங்கும். மாநில உரிமைகளை மீட்டெடுப்பது குறித்த பரிந்துரைகளை இக்குழு வழங்கும்.

ஓய்வு பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசோக் வர்தன், திட்டக்குழு முன்னாள் துணைத் தலைவர் நாகநாதன் இக்குழுவின் உறுப்பினர்களாக இருப்பர். மாநில சுயாட்சியை மீட்டெடுக்கவும், மத்திய - மாநில அரசுக்கு இடையேயான உறவை மேம்படுத்தவும் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரும் முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்" என்று பேசினார்.

மாநில சுயாட்சி தொடர்பான முதல்வரின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக எம்எல்ஏக்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய நயினார் நாகேந்திரன்,

"மாநில சுயாட்சியால் நாட்டின் வலு குறையும். முதலமைச்சரின் அறிவிப்பு சரியானது அல்ல. தேர்தலை முன்னிறுத்தி ஏதாவது ஒரு தீர்மானத்தை திமுக அரசு கொண்டு வருகிறது" என்று கூறினார்.

இதனிடையே தமிழக பாஜக தலைவரான பிறகு முதல்முறையாக இன்று சட்டப்பேரவைக்கு வந்த நயினார் நாகேந்திரனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட ஆளும் கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக பேச வாய்ப்பளிக்கவில்லை என்று கூறி அதிமுகவினரும் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com