குடிநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி: பள்ளியின் உரிமம் ரத்து! தாளாளருக்கு நீதிமன்றக் காவல்!

மதுரை மழலையர் பள்ளியில் குடிநீர் தொட்டியில் சிறுமி விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் பள்ளியின் தாளாளர், உதவியாளருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்.
குடிநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி: பள்ளியின் உரிமம் ரத்து! தாளாளருக்கு நீதிமன்றக் காவல்!
Published on
Updated on
1 min read

மதுரை கே.கே.நகரில் மழலையர் பள்ளியில் குடிநீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவத்தில் பள்ளியின் தாளாளர், உதவியாளர் 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பள்ளியின் உரிமத்தை ரத்து செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை கே.கே. நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ மழலையர் பள்ளியில் கோடைக்கால சிறப்பு வகுப்பு நடைபெற்று வருகிறது. இந்த வகுப்புக்குச் சென்ற மதுரை உத்தங்குடி பகுதியைச் சேர்ந்த அமுதன் என்பவரது 4 வயது சிறுமி ஆருத்ரா, பள்ளிக்கு பின்புறம் உள்ள பகுதியில் நேற்று(செவ்வாய்க்கிழமை) நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது அங்கு திறந்து வைக்கப்பட்டிருந்த 12 அடி ஆழம் கொண்ட தண்ணீர் தொட்டியில் எதிர்பாராதவிதமாக உள்ளே விழுந்துள்ளார்.

இதைக் கண்ட மற்ற குழந்தைகள் உடனடியாக மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்க, உடனடியாக அங்கு ஓடி வந்த ஆசிரியர்கள், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சுமார் அரை மணி நேரம் சிறுமி தொட்டிக்குள் உயிருக்குப் போராடியுள்ளார். தீயணைப்புத் துறையினர் வந்து தொட்டிக்குள் கிடந்த சிறுமியை மீட்டு பள்ளி அருகே 100 மீட்டர் தொலைவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர்.

தொடர்ந்து மீட்கப்பட்ட சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் குழந்தை அதிகளவு தண்ணீர் குடித்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குழந்தை உயிரிழந்தது தொடர்பாக பள்ளி நிர்வாகத்தின் தரப்பில் இருந்து உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்காமல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக பள்ளியில் பயிலும் கூடிய மற்ற மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க உடனடியாக மற்ற குழந்தைகளின் பெற்றோர்கள் உடனடியாக பள்ளிக்கு வருகை தந்து குழந்தைகளை அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக  காவல் துணை ஆணையர் அனிதா உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பள்ளியின் உரிமையாளர் திவ்யா, உதவியாளர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்த மாவட்ட கல்வி அதிகாரிக்கு தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவிட்டார்.

அதன்படி, இச்சம்பவம் தொடர்பாக போலீசார், ஆர்டிஓ, மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் நேரில் ஆய்வு நடத்தி விசாரணையில் விதிமீறல் கண்டறியப்பட்டு பள்ளிக்கு சீல் வைத்தனர்.

பள்ளியின் தாளாளர் திவ்யா ராஜேஷ் மற்றும் உதவியாளர் வைரமணி ஆகிய இருவரையும் மதுரை அண்ணா நகர் போலீசார் கைது செய்து 15 நாள் நீதிமன்றக் காவலில் மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் பள்ளியின் உரிமத்தை ரத்து செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாகவே குழந்தை உயிரிழந்துள்ளதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com