சர்வதேச ஹோமியோபதி மாநாடு: 300 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிப்பு!

சர்வதேச ஹோமியோபதி மாநாடு தொடர்பாக...
சர்வதேச ஹோமியோபதி  மாநாடு:  300 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிப்பு!
Published on
Updated on
2 min read

சர்வதேச ஹோமியோபதி மாநாட்டில் 300 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (14.02.2025) சென்னை, கிண்டி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில், சர்வதேச ஹோமியோபதி மாநாட்டில் கலந்து கொண்டு 100 ஆராய்ச்சி கட்டுரை தொகுப்பு கொண்ட “ஹோமியோ விஷன் 2025” Compendium of Abstracts என்ற நூலினை வெளியிட்டு உரையாற்றினார்கள்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:

ஹோமியோபதி மருத்துவ முறை ஜெர்மானிய மருத்துவர் Dr.C.F.Samuel Hahnemann அவர்களால் 1796 அன்று கண்டுபிடிக்கப்பட்டு இந்தியா உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் ஒரு மாற்று மருத்துவ முறையாக திகழ்ந்து வருகிறது. தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவ கவுன்சில், தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவம் மற்றும் தொழிற்முனைவோர் சட்டம் 1971 இன் விதிகளின் கீழ் உருவாக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசால் 1975-ல் முதல் ஹோமியோபதி மருத்துவ கல்லூரி வெற்றி செல்வி அன்பழகன் பெயரில் செப்டம்பர் 15, 1975 அன்று கீழ்பாக்கம் மருத்துவமனை வளாகத்தில் கலைஞர் கருணாநிதியால் துவக்கி வைக்கப்பட்டது. தற்போது, தமிழ்நாட்டில் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் மதுரையில் அரசு ஹோமியோபதி மருத்துவ கல்லூரி மற்றும் 12 தனியார் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

மேலும், மூன்று கல்லூரிகளில் முதுகலை பட்டபடிப்பும் ஒரு கல்லூரியில் முனைவர் (Phd.) பட்டபடிப்பும் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் 109 ஹோமியோபதி மருத்துவ பிரிவுகள் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள், வட்டம் மற்றும் வட்டம்சாரா அரசு மருத்துவமனைகளிலும் செயல்பட்டு வருகின்றன. இன்று தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் சார்பாக நடைபெறும் சர்வதேச ஹோமியோபதி மாநாட்டை இணைந்து நடத்தும் ஸ்ரீ சாயிராம் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி மையம், சென்னை மற்றும் வெங்கடேஷ்வரா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சென்னை ஆகிய நிறுவனங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று நாம் அனைவரும் ஹோமியோபதி துறையில் உள்ள அறிவு, யோசனைகள், மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு முக்கியக் கட்டத்தினை அடைந்திருக்கிறோம். இந்த மாநாடு நிபுணர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கும் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதற்கும் சிறந்த தளமாக அமைகிறது.

இந்த மாநாட்டில் 1,700 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளதே ஒரு வரலாற்றுச் சாதனை! மேலும் 300 ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் 60 போஸ்டர்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்பது இந்த மாநாட்டின் மகத்துவத்தையும் பங்கேற்பாளர்களின் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது. நவீன சிகிச்சை முறைகளும் மாற்று மருத்துவ முறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது இன்றைய மருத்துவத் துறையின் அவசியமாகியுள்ளது.

இதையும் படிக்க: புதிய பாம்பன் பாலத்தில் மார்ச் முதல் ரயில் இயக்கம்! வெளியானது அறிவிப்பு

தனிப்பட்ட சிகிச்சை முறைகள் மற்றும் இயற்கைச் சிகிச்சைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஹோமியோபதி, நம் மருத்துவப் பிரபலங்களின் பயணத்தில் ஓர் அடையாளமாக விளங்குகிறது. இந்த மாநாடு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்திற்குப் பெருமை சேர்க்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக விளங்கும். இது எதிர்கால ஹோமியோபதி துறையில் பல புதிய முன்னேற்றங்களுக்கும் வழிவகுக்கும்.

நாம் அனைவரும் ஹோமியோபதியின் வளர்ச்சிக்காக சேர்ந்து உழைத்து, ஆரோக்கியமான மற்றும் கருணைமிக்க உலகத்தை உருவாக்க முயல்வோம் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உரையாற்றினார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் மரு. கி. நாராயணசாமி, பதிவாளர் மரு. க. சிவசங்கீதா, தேசிய ஹோமியோபதி ஆணையத்தின் உறுப்பினர் மரு. செந்தில் குமார் ஜெகதீசன், தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவக் கவுன்சில் தலைவர் மரு. ஜெயக்குமார் மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com