
பிகார் மாநிலம் ஜமூய் மாவட்டத்தில் இரண்டு வெவ்வேறு சமூகத்தினருக்கு இடையிலான மோதல் வழக்கில் ஒரு பெண் உள்பட 10 பேர் அம்மாநில காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜமூய் மாவட்டத்தின் பலியாதி பகுதியில் கடந்த பிப்.16 அன்று நடைபெற்ற மத ஊர்வலத்தின்போது இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் வெடித்தது. அப்போது, இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களைக் கொண்டு தாக்கியதில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, அங்கு இணையத்தள சேவை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது. மேலும், காவல் துறை அதிகாரி ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதையும் படிக்க: 30 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்த வங்கதேசத் தம்பதி, 22 வயது மகன் கைது!
இந்த மோதலானது மேலும் மோசமடையாமல் தடுப்பதற்காக அப்பகுதியில் காவல் துறையினர் நேற்று (பிப்.17) கொடி அணிவகுப்பு நடத்தியதுடன், 50 முதல் 60 பேரின் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், தற்போது குஷ்பூ பாண்டே எனும் பெண் உள்பட 10 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த ஊர்வலத்தை அதிகாரிகளின் அனுமதியின்றி நடத்தியதற்காக சில நபர்களின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறிய காவல் அதிகாரிகள், துண்டிக்கப்பட்ட இணையத்தள சேவையானது இன்று (பிப்.18) மீண்டும் துவக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.