நேபாள மாணவி மரணம்..மாணவர்கள் வெளியேற்றம்! தூதரக அதிகாரிகள் வருகை!

ஒடிசா விடுதியில் நேபாள மாணவி மரணமடைந்த விவகாரத்தில் அந்நாட்டு தூதரக அதிகாரிகள் நேரில் வருகைத் தருவதைப் பற்றி...
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

ஒடிசா கல்லூரி விடுதியில் நேபாள மாணவி சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில், தில்லியிலிருக்கும் அந்நாட்டு தூதரக அதிகாரிகள் இரண்டு பேர் இன்று (பிப்.18) அக்கல்லூரிக்கு நேரில் வருகைத் தருகின்றனர்.

புவனேஸ்வர் மாவட்டத்திலுள்ள பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு பயின்று வந்த நேபாளத்தைச் சேர்ந்த ப்ரகிரீத்தி லாம்சல் என்ற மாணவி, கடந்த பிப்.16 அன்று மாலை அவரது விடுதி அறையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்தக்கோரி அக்கல்லூரியில் பயிலும் பிற நேபாள மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

இதனால், அக்கல்லூரியின் அதிகாரிகள் போராட்டம் நடத்திய நேபாள மாணவர்கள் அனைவரையும் விடுதியிலிருந்து வெளியேற்றி கட்டக் ரயில் நிலையத்தில் எந்தவொரு முன் ஏற்பாடும் இன்றி இறக்கி விட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது.

பின்னர், அம்மாணவியின் மரணம் குறித்தும் மாணவர்கள் வெளியேற்றப்பட்டது குறித்தும் சிலர் தங்களது சமூக ஊடகப்பக்கத்தில் பதிவிட்டனர். அவை பகிரப்பட்டு நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நேற்று (பிப்.17) தனது முகப்புத்தகக் கணக்கில் பதிவிட்ட அவர் இந்த விவகாரம் குறித்து அந்நாட்டு அரசு ராஜதந்திர முறையில் இந்திய அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவதாகக் கூறினார்.

இதையும் படிக்க: மகா கும்பமேளா: ஒரே நாளில் 1.36 கோடி பேர் புனித நீராடல்!

பின்னர் நேற்று மாலை அவர் பதிவிட்ட மற்றொரு பதிவில், தில்லியிலுள்ள நேபாள தூதரகத்தின் அதிகாரிகள் இருவர் ஒடிசாவுக்கு அனுப்பப்பட்டு கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்ட மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளதாகவும், மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப அவர்கள் கல்லூரி விடுதியில் தங்கவோ அல்லது தாயகம் திரும்பவோ முடிவு செய்தால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று (பிப்.18) அந்நாட்டு தூதரக அதிகாரிகள் மரணமடைந்த மாணவி பயின்று வந்த தனியார் பொறியியல் கல்லூரிக்கு நேரில் வருகைத் தருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளியேற்றப்பட்ட மாணவர்களையும் அவர்கள் சந்திக்கவுள்ளனர்.

முன்னதாக, அம்மாணவி உடன் பயின்ற மாணவர் ஒருவரின் தொடர்ச்சியான துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும், அதனால் ஏற்பட்ட மனவுளைச்சலினால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாகவும் கூறி அம்மாணவியின் உறவினர் ஒருவர் புவனேஸ்வரிலுள்ள இன்போசிட்டி காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com