நேபாள நாடாளுமன்றத் தேர்தலில் பாலேந்திர ஷா என்ற பாலன் தலைமையிலான ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி (ஆர்எஸ்பி) அமோக வெற்றி பெற்றிருப்பது அந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்பம். நான்கு முறை பிரதமராக இருந்தவரும் சிபிஎன்-யுஎம்எல் கட்சித் தலைவருமான 74 வயது கே.பி. சர்மா ஒலியை, 35 வயதேயான பாலன் சுமார் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருப்பது அடுத்த ஆச்சர்யம்.
'ராப்' இசைக் கலைஞரான பாலன் தனது 32-ஆவது வயதில் 2021-ஆம் ஆண்டு காத்மாண்டு மேயர் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்று மேயரானவர். மேயர் பதவிக் காலத்தின்போது கழிவு மேலாண்மை, போக்குவரத்து சீரமைப்பு, பொது்மக்கள் சேவை, கலாசார பாதுகாப்பு தொடர்பான அவரின் முன்னெடுப்புகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. அவரது திட்டங்களுக்கு அரசியல்ரீதியான சில எதிர்ப்பகளும் எழாமல் இல்லை.
கடந்த ஜனவரியில் மேயர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, ஆர்எஸ்பி-யில் அவர் இணைந்தது இப்போதைய ஆட்சி மாற்றத்துக்கு வழிகோலும் என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து, அரசியலுக்கு வந்த அந்தக் கட்சியின் நிறுவனரான ரபி லாமிசானேகூட நினைத்திருக்க மாட்டார். 2022-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆர்எஸ்பியை தொடங்கிய லாமிசானே, பிரதமர் புஷ்ப கமல் தாஹால் பிரசண்டா தலைமையிலான அமைச்சரவையில் துணைப் பிரதமராகப் பதவி வகித்தவர்.
தலைமைப் பதவி உள்ளிட்ட சில வாக்குறுதிகளைப் பெற்றுக் கொண்ட பிறகே ஆர்எஸ்பி-யில் இணைந்தார் பாலன். இளைஞர்கள் மத்தியிலான அவரது செல்வாக்கு கட்சியையும் வலுப்படுத்தி, யுஎம்எல், சிபிஎன், நேபாளி காங்கிரஸ் ஆகிய பாரம்பரிய பெரிய கட்சிகளுக்கு மாற்றாக ஆர்எஸ்பி-யை உயர்த்த உதவும் எனக் கூறப்பட்டது. எதிர்பார்ப்பை எல்லாம் தாண்டி பெரிய கட்சிகளை வீழ்த்தி ஆட்சியையே பிடிக்கப் போகிறது ஆர்எஸ்பி.
முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியை எதிர்த்து, ஜாப்பா-5 தொகுதியில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சியின் பிரதமர் வேட்பாளர் பாலன் போட்டியிட்டபோது, அவரது துணிச்சலைப் பலரும் பாராட்டினர். இரு பிரதமர் வேட்பாளர்கள் நேருக்கு நேர் மோதிய அந்தத் தொகுதி நட்சத்திர தொகுதியானது. தேர்தல் முடிவில், பாலன் 68,348 வாக்குகளைப் பெற.கே.பி.சர்மா ஒலி வெறும் 18,734 வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வியடைந்தார்.
நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து கடந்த ஆண்டு மாணவர்கள், இளைஞர்கள் தொடங்கிய போராட்டம், பின்னர் ஆட்சியாளர்களின் ஊழலுக்கு எதிரான வன்முறைப் போராட்டமாக மாறியது. அரசுக் கட்டடங்கள், நாடாளுமன்றம் தீக்கிரையாக்கப்பட்டன. பிரதமரின் இல்லம், முன்னாள் பிரதமர்கள், அமைச்சர்களின் இல்லங்களும் சூறையாடப்பட்டன. போராட்டக்காரர்களின் வன்முறையில் உச்சநீதிமன்றக் கட்டடமும் தப்பவில்லை.
இளைஞர்களின் போராட்டத்தால் பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகியதையடுத்து நடைபெற்று முடிந்த இந்த நாடாளுமன்றத் தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. தேர்தலில் வழக்கம்போல பாரம்பரிய பெரிய கட்சிகள் களமிறங்கின. ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த 'ஜென் இஸட்' (1997 முதல் 2012 வரை பிறந்தவர்கள்) அமைப்பினர் ஓர் அணியாக இணைந்து தேர்தலைச் சந்திக்கவில்லை. ஆனால், அவர்களின் ஆதரவை ஆர்எஸ்பி முழுமையாகப் பெற்றிருப்பதை தேர்தல் முடிவுகள் எதிரொலிக்கின்றன.
குறைந்த வேலைவாய்ப்பு, குறைந்த ஊதியம் போன்ற நீண்ட கால பிரச்னையால் லட்சக்கணக்கான நேபாள இளைஞர்கள் வேலை தேடி வெளிநாடுகளுக்குச் செல்வது தொடர்ந்து வருகிறது. வேலைக்காக புலம்பெயர்தலைக் குறைக்கும் வகையில் உள்நாட்டிலேயே ஆண்டுக்கு 12 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் தனிநபர் வருமான சராசரியை 1,447 டாலரிலிருந்து 3,000 டாலராக உயர்த்துவோம் என ஆர்எஸ்பி அளித்த தேர்தல் வாக்குறுதி இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) இருமடங்காக, அதாவது 100 பில்லியன் டாலராக உயர்த்தப்படும்; பொதுமக்களுக்கு சுகாதார காப்பீடு ஏற்படுத்தப்படும் போன்றவை ஆர்எஸ்பி-யின் ஏனைய வாக்குறுதிகள்.
நேபாளத்தில் மக்களாட்சி தொடங்கியதிலிருந்து நிலையற்ற தன்மை நீடித்து வந்தது. நேபாளி காங்கிரஸ், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (யுஎம்எல்), நேபாள கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) ஆகிய மூன்று கட்சிகள்தான் ஒவ்வொரு தேர்தலிலும் மாறிமாறி கூட்டணி வைத்துக்கொண்டு ஆட்சியில் இருந்தன. 17 ஆண்டுகளில் பதவி விலகிய சர்மா ஒலியுடன் சேர்த்து 14 பிரதமர்கள். அந்த நிலையற்ற தன்மையும் ஆர்எஸ்பி-க்கு அமோக வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
அனுபவத்தில் ஆர்எஸ்பி இளைய கட்சி. அறுதிப் பெரும்பான்மை பெற்றிருந்தாலும் பாரம்பரிய பெரிய கட்சிகள் அளிக்கும் அரசியல் நெருக்கடிகளைச் சந்தித்தாக வேண்டும்; பிராந்தியத்தின் பெரிய நாடுகளான இந்தியா, சீனாவுடனான உறவில் சமநிலையைப் பேண வேண்டும்; குறிப்பாக, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியாக வேண்டும். பிரதமராகப் போகும் பாலேந்திர ஷா இவற்றை எவ்வாறு கையாளப் போகிறார் என்று ஒட்டுமொத்த உலகமும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
அரசியலுக்கு அப்பாற்பட்டது குடியரசுத் தலைவர் பதவி: பிரதமர் மோடி
மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!
தமிழக வரலாற்றில் முதல்முறை.. நீண்ட காலம் வெற்றிகரமாகத் தொடரும் கூட்டணி! - முதல்வர் ஸ்டாலின்

சின்னங்கள் படும் பாடு!
வீடியோக்கள்

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...
Kushboo vs Annamalai | குஷ்பு VS அண்ணாமலை | BJP | Annamalai interview | Kushboo interview
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

