இஸ்ரோ பணி அனைவரது கூட்டுப் பணி: வி.நாராயணன்

இஸ்ரோ பணி என்பது தனிப்பட்ட பணி அல்ல, அனைவருடைய கூட்டுப் பணி என இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வி.நாராயணன் தெரிவித்தார்.
இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வி.நாராயணன்
இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வி.நாராயணன்
Published on
Updated on
2 min read

இஸ்ரோ பணி என்பது தனிப்பட்ட பணி அல்ல, அனைவருடைய கூட்டுப் பணி என இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வி.நாராயணன் தெரிவித்தார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) 11-ஆவது தலைவராக தமிழகத்தை சேர்ந்த வி.நாராயணன் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய இஸ்ரோ தலைவா் எஸ்.சோம்நாத்துக்குப் பிறகு இஸ்ரோவின் அடுத்த தலைவராக டாக்டர் வி. நாராயணன் ஜன.14-ஆம் தேதி பொறுப்பேற்கிறாா். இவா் அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்த பதவியில் இருப்பாா்.

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்தவரும் இஸ்ரோவில் புகழ்பெற்ற விஞ்ஞானியான வி. நாராயணன், இஸ்ரோவின் முக்கிய மையங்களில் ஒன்றான திருவனந்தபுரம், வலியமலையில் அமைந்த இஸ்ரோவின் திரவ உந்து அமைப்பு மையத்தின் (எல்பிஎஸ்சி) இயக்குநரான பணியாற்றி வருகிறார்.

1984 இல் இஸ்ரோவில் சேர்ந்த இவர், இந்திய விண்வெளித் துறையில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகால கால அனுபவமுள்ள ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானி. ராக்கெட் மற்றும் விண்கல திரவ உந்துவிசையில் நிபுணத்துவம் பெற்றவர். நிறுவனத்திற்குள் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

இந்த நிலையில், இஸ்ரோவின் 11-ஆவது தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வி.நாராயணன் செய்தியாளர்களுடன் பேசுகையில், மிக முக்கியமான பொறுப்பை பிரதமர் நரேந்திர மோடி கொடுத்திருக்கிறார். அதனை மிக மிக முக்கியமான பொறுப்பு என நான் நினைக்கிறேன்.

இஸ்ரோவிற்கு அடுத்தடுத்து முக்கியமான சில திட்டங்கள் உள்ளன. இஸ்ரோ பணி என்பது தனிப்பட்ட பணி அல்ல, அனைவருடைய கூட்டுப் பணி என கூறினார்.

ராக்கெட் மற்றும் விண்கல திரவ உந்துவிசையில் நிபுணத்துவம் பெற்றவரான வி. நாராயணன், 1984 இல் இஸ்ரோவில் சேர்ந்து நிறுவனத்திற்குள் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

ஆரம்ப கட்டத்தில், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் ஒலி ராக்கெட்டுகளுக்கான திட உந்துவிசை பகுதி, ஆக்மென்டட் செயற்கைக்கோள் ஏவுதள வாகனங்கள் மற்றும் துருவ செயற்கைக்கோள் ஏவுதளம் வாகனங்கள் (பிஎஸ்எல்வி) ஆகியவற்றின் திட உந்துவிசை பகுதியில் பணியாற்றினார்.

இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி57, சூரியன் ஆய்வுக்கான ஆதித்யா எல்1 திட்டம், ஜிஎஸ்எல்வி மாக்-3 வகை ஏவுகணைக்கான ‘சிஇ20 கிரையோஜெனிக்’ என்ஜின் தயாரிப்பு, சந்திரயான் 2 மற்றும் 3 உள்ளிட்ட பல திட்டங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளாா்.

இஸ்ரோவின் திரவ உந்து அமைப்பு மையத்தின் (எல்பிஎஸ்சி) இயக்குநராக, கடந்த ஐந்து ஆண்டுகளில் 41 ஏவுதள வாகனங்கள் மற்றும் 31 விண்கல பயணங்களுக்கு 164 திரவ உந்துவிசை அமைப்புகளை வழங்கியுள்ளார்.

இவரது தலைமையிலான எல்பிஎஸ்சி குழு, இஸ்ரோவின் பல்வேறு திட்டங்களுக்கு 183 திரவ உந்துவிசை திட்டம் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளை வழங்கி உள்ளது.

1989 இல் ஐஐடி-கரக்பூரில் கிரையோஜெனிக் துறையில் முதுகலைப் பொறியியல் பட்டமும், 2001 இல் விண்வெளி பொறியியலில் முனைவர் பட்டும் பெற்றவர், விண்கல உந்துவிசைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார் மற்றும் அடுத்த 20 ஆண்டுகளுக்கு (2017 - 2037) இஸ்ரோவின் உந்துவிசை சாலை வரைபடத்தை இறுதி செய்துள்ளார்.

வி.நாராயணனின் பணிக்கு ஐஐடி கரக்பூரின் வெள்ளிப் பதக்கம், இந்திய விண்வெளி சங்கம் (ஏஎஸ்ஐ) தங்கப் பதக்கம் மற்றும் ராக்கெட் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பங்களுக்கான ஏஎஸ்ஐ விருது, இந்திய உயர் ஆற்றல் பொருள்கள் சங்கத்தின் குழு விருது, தேசிய பேரிடர் மீட்புப் படையின் (என்டிஆர்எஃப்) தேசிய வடிவமைப்பு விருது, சிறந்த சாதனை மற்றும் செயல்திறன் சிறப்பு விருதுகள் மற்றும் இஸ்ரோவின் குழு சிறப்பு விருதுகள், தேசிய பேரிடர் மீட்புப் படையின் (என்டிஆர்எஃப்) தேசிய வடிவமைப்பு விருது உள்ளிட்ட ஏராளமான பாராட்டுகளை பெற்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.