'இபிஎஸ் அவராகவே பதவி விலக வேண்டும்; இல்லையென்றால்...' - ஓபிஎஸ் எச்சரிக்கை!

அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி அவராகவே பதவி விலக வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி அவராகவே பதவி விலக வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

அமமுக சார்பில் சென்னை எழும்பூரில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார்.

நிகழ்வில் பேசிய அவர், 'பிரிந்து கிடக்கின்ற அதிமுக ஒன்றிணைய வேண்டும்' என நபிகள் நாயகத்திடம் வேண்டுதல் வைப்பதாகவும் அதிமுக இணைவதற்குரிய ஒளிவட்டம் தெரிகிறது, அது கண்டிப்பாக நடக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

அதேபோல நெல்லையில் அதிமுக அமைப்புச் செயலர் கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த ஓபிஎஸ் "பிரிந்து கிடக்கும் சக்திகள் அனைத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று நினைத்தவர் கருப்பசாமி பாண்டியன். அதிமுக தொண்டர்களின் எண்ணமும் அதுதான். அதற்கு எம்ஜிஆர் ஜெயலலிதா ஆன்மாவால் வழி பிறக்கட்டும்" என்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

பின்னர் கருப்பசாமி பாண்டியனுக்கு அஞ்சலி செலுத்த வந்த எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது ஓபிஎஸ் குறித்த கருத்துக்குப் பதிலளித்த அவர், ''கட்சியை எப்போது எதிரிகளிடம், அடமானம் வைத்தாரோ, கட்சியின் தலைமைக் கழகத்தை, அதிமுகவின் கோவிலை என்று அவர் உடைத்தாரோ, அவருக்கு இந்தக் கட்சியில் இருப்பதற்கு தகுதி இல்லை. அவரும் நானும் பிரிந்தது பிரிந்ததுதான். இனி சேர்வதற்கு சாத்தியம் இல்லை'' என்றார்.

இதன்பின்னர் சென்னை விமான நிலையத்தில் மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ்,

''எடப்பாடி பழனிசாமி தரப்பினர்தான் அதிமுக தலைமை அலுவலகத்தைத் தாக்கினர். காவல்துறையே அதைத்தான் சொல்லுகிறது.

அதிமுகவில் பிரிந்த சக்திகள் எல்லாம் ஒன்றிணைந்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற சூழல் உருவாகும். அதிமுக வெற்றி பெறக்கூடிய வாய்ப்புகள் எந்த காலத்திலும் இருக்கக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார்.

ஒற்றைத் தலைமை வந்தால் அனைத்துத் தேர்தலிலும் நான் வெற்றி பெறுவேன் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, ஒரு தேர்தலில்கூட வெற்றி பெற முடியவில்லை. பொதுச்செயலாளர் பதவியிலிருந்து அவராகவே விலகிக் கொள்வதுதான் அவருக்கு மரியாதையாக இருக்கும். இல்லை என்றால் அவர் அவமரியாதையை சந்திப்பார்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com