
கிஷ்த்வார்: ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சத்ரூவின் சிங்போரா பகுதியில் வியாழக்கிழமை காலை பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்து வருவதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சத்ரூவின் சிங்போரா பகுதியில் பதுங்கியுள்ள 4 பயங்கரவாதிகளை சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர், அவர்களுடன் வியாழக்கிழமை காலை முதல் துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது.
பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி வரும்ந்த 4 பயங்கரவாதிகளும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையால ரூ.5 லட்சம் பரிசு அறிவித்து தேடப்பட்டு வந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, மே 16 ஆம் தேதி தெற்கு காஷ்மீா் மாவட்டமான சுக்ரூ கெல்லா், ஷோபியன் மற்றும் டிரால் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்தத் தகவலின் அடிப்படையில், அந்தப் பகுதியை ஜம்மு-காஷ்மீர் காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினா் சுற்றிவளைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினா். அதற்கு பாதுகாப்புப் படையினா் பதில் தாக்குதல் நடத்தினா். இந்த இருவேறு தாக்குதல்களில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து, ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு மாவட்டங்களில் பயங்கரவாதிகளைத் தேடும் பணியை பாதுகாப்புப் படையினா் தீவிரப்படுத்தியுள்ளனா்.
அதுபோல, சோஃபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் குறித்து தகவல் அளிக்குமாறு ஆங்காங்கே பதாகைகள் வைக்கப்பட்டன. அதில், பயங்கரவாதிகள் குறித்து தகவல் அளிப்பவா்களுக்கு ரூ. 20 லட்சத்துக்கும் மேல் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
முன்னதாக, பஹல்காம் தாக்குதலில் தொடா்புடைய பயங்கரவாதிகள் குறித்து தகவல் கொடுப்பவா்களுக்கு இதே பரிசுத் தொகையை மாவட்ட போலீஸாா் அறிவித்திருந்தனா்.
இதனிடையே, பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியா ஆபரேஷன் சிந்தூரைத் தொடங்கியது, இதில் துல்லியமான தாக்குதல்கள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரில் பகுதிகளில் அமைந்திருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. இதில் சுமாா் நூறு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். ஜெய்ஷ் இ-முகாமின் தலைமையகமான பவல்பூர் மற்றும் லஷ்கரின் முக்கிய பயிற்சி தளமான முரிட்கே ஆகியவை ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையில் தகர்க்கப்பட்டது. அதன் பிறகு, பாகிஸ்தான் தொடுத்த தாக்குதலை இந்திய ராணுவமும் விமானப் படையும் திறம்பட முறியடித்தன. பாகிஸ்தானின் கோரிக்கையையடுத்து இரு நாடுகளிடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.