நகை பறிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி சுட்டுப் பிடிப்பு

காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் போலீஸார் அந்த நபரின் காலில் சுட்டுள்ளனர். இதில் காயமைடந்த நபரை போலீஸார் சுற்றிவளைத்து பிடித்தனர்.
சங்ககிரி தனிப்படை போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றவரை போலீஸார் சுட்டத்தில் வலது காலில் காயமடைந்து சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நரேஷ்குமார்.
சங்ககிரி தனிப்படை போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றவரை போலீஸார் சுட்டத்தில் வலது காலில் காயமடைந்து சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நரேஷ்குமார்.
Published on
Updated on
2 min read

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த வைகுந்தம் கிராமம், வாழகுட்டை என்ற பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் தோடு, மூக்குத்திகளை பறித்து சென்ற நபரை தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் சங்ககிரியிலிருந்து சின்னாகவுண்டனூர் செல்லும் சாலையில் ஆஞ்சநேயர் கோயில் அருகே பதுங்கியிருந்த குற்றவாளியை போலீஸார் பிடிக்க முயன்ற போது போலீஸாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பமுயன்றவரை சனிக்கிழமை அதிகாலை போலீஸார் காலில் சுட்டு பிடித்தனர். இதில் உதவிஆய்வாளர் உள்பட இருவர் காயமடைந்தனர். இது குறித்து உயர்காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர்.

சங்ககிரி, வைகுந்தம் கிராமம், வாழகுட்டை பகுதியில் மே 3 ஆம் தேதி சனிக்கிழமை நடந்து சென்ற பெண்ணை இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் தாக்கி அவர் அணிந்திருந்த முக்கால் பவுன் எடையுள்ள தோடு, மூக்குத்திகளை பறித்து சென்று விட்டார். இது குறித்து சங்ககிரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மகுடஞ்சாவடிகாவல் ஆய்வாளர் செந்தில்குமார், உதவி காவல் ஆய்வாளர் விஜயராகவன், தலைமை காவலர்கள் அரசு, வேல்முருகன், முதல் நிலை காவலர் செல்வகுமார், குழந்தைவேலு, ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

இந்நிலையில், சந்தேகத்திற்கிடமான வகையில் சங்ககிரியிலிருந்து சின்னாகவுண்டனூர் செல்லும் சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே மலையடிவாரம் பகுதியில் ஒரு நபர் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

போலீஸாரால் சுட்டுப் பிடிக்கப்பட்ட குற்றவாளி நரேஷ்குமார்
போலீஸாரால் சுட்டுப் பிடிக்கப்பட்ட குற்றவாளி நரேஷ்குமார்

இதையடுத்து தனிப்படை போலீஸார் சனிக்கிழமை அதிகாலை அந்த பகுதியில் தேடுல் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் இருந்த சிறிய கட்டடத்திற்கு முன் இருசக்கர வாகனம் இருப்பதை அறிந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த நபர் எதிர்பாரவிதமாக தனிப்படை போலீஸாரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் உதவி காவல் ஆய்வாளர் விஜயராகவன், முதல்நிலை காவலர் செல்வகுமார் ஆகியோர் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனிருந்த காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் போலீஸார் அந்த நபரின் காலில் சுட்டுள்ளனர். இதில் காயமைடந்த நபரை போலீஸார் சுற்றிவளைத்து சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர் அந்நபரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் சங்ககிரி அருகே உள்ள வாழக்குட்டை பகுதியில் ஒருபெண்ணிடம் தோடு, மூக்குத்திகளை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. அவர் ஓமலூர் வட்டம், பொட்டியபுரம் கிராமம், கட்டிக்காரனூர், பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் நிரஞ்சன் என்கின்ற நரேஷ்குமார் (25) என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து தகவலறிந்து வந்த சேலம் சரக காவல்துறை துணைத்தலைவர் இ.எஸ்.உமா சம்பவ இடத்தை பார்வையிட்டு சங்ககிரி அரசு மருத்துவமனையில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த காவல் உதவி ஆய்வாளர் விஜராகவன், முதல்நிலை காவல் செல்வகுமார் ஆகியோர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

சங்ககிரியில் தேடப்பட்டுவந்த குற்றவாளி பதுங்கியிருந்த அறையையும், குற்றவாளி பயன்படுத்திய இருசக்கரவாகனத்தையும் சனிக்கிழமை பார்வையிடும் சேலம் சரக காவல்துறை துணைத்தலைவர் இ.எஸ்.உமா. உடன் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஸ்கண்ணன்.
சங்ககிரியில் தேடப்பட்டுவந்த குற்றவாளி பதுங்கியிருந்த அறையையும், குற்றவாளி பயன்படுத்திய இருசக்கரவாகனத்தையும் சனிக்கிழமை பார்வையிடும் சேலம் சரக காவல்துறை துணைத்தலைவர் இ.எஸ்.உமா. உடன் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஸ்கண்ணன்.

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஸ்கண்ணன்,மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சோமசுந்தரம், சங்ககிரி உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஆர்.சிந்து, காவல் ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் ஆய்வின் போது உடனிருந்தனர்.

இது குறித்து விசாரணை நடத்திய காவல் உயரதிகாரிகள் சுட்டுப்பிடித்த நரேஷ்குமாரை மேல் விசாரணை, மேல் சிகிச்சைக்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு மாற்றம் செய்தனர்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் சுட்டுப்பிடிக்கப்பட்ட நரேஷ்குமார் மீது மகுடஞ்சாவடி, தீவட்டிபட்டி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் மூதாட்டிகளிடம் தோடு, மூக்குத்திகளை கொள்ளையடித்து சென்றது தொடர்பாக 21 வழக்குகள் பதிவாகி உள்ளது தெரியவந்துள்ளன. விருதுநகர் பகுதியில் குற்றசெயலில் ஈடுபட்டு ஒரு இரு சக்கரவாகனத்தை திருடி வந்ததும் தெரிய வந்துள்ளது.

சங்ககிரியில் கிராமத்திற்கு செல்லும் வழியில் போலீஸார் தேடப்பட்டு வந்த குற்றவாளியை சுட்டுப் பிடித்த சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com