

திருச்சி: தமிழ்நாட்டை யார் அதிகம் நாசம் செய்வது என்பதில்தான் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் இடையே போட்டி உள்ளது என்றும் ஆயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும் தமிழ்நாட்டில் எந்த மாற்றமும் இருக்காது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தாா்.
திருச்சி விமான நிலையத்தில் சனிக்கிழமை சீமான் செய்தியாளர்களுடன் பேசினார்.
அப்போது, திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றுதான் என திருமாவளவன் தற்போது பேசுகிறார். ஆனால், திராவிடம் தமிழ் தேசியத்திற்கு எதிரானது என கற்பித்தவர் திருமாவளவன்தான்.
தமிழ்நாட்டில் தமிழ் படிக்கவோ, பேசவோ, எழுதுவோ தெரியாதவர்கள் அதிகம் இருக்கிறார்கள். மொழி, கலை, இலக்கியம், வரலாறு, அரசியல் என தமிழர்களுக்கு எதுவும் இல்லாமல் போய்விட்டது.
இந்தி எதிர்ப்பு ஒரு நாடகம்
இந்தி எதிர்ப்புக்காக போராடிய மாணவர்களை துப்பாக்கியால் சுட சொன்னவர் பெரியார். தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் இந்தி உள்ளது. இந்தி எதிர்ப்பு என்பது ஒரு நாடகம். திருமாவளவன் தேவைக்கேற்ப மாற்றி மாற்றி பேசி வருகிறார்.
இலவச பரிசுப் பொருட்கள் வழங்குவதில் பெருமை இல்லை
பொங்கலுக்கு இலவச பரிசுப் பொருட்கள் தருவது கேவலமான ஒன்று. அதில் பெருமைப்பட ஒன்றுமில்லை. போராடக்கூடிய ஆசிரியர்கள் கைது செய்யப்படுவது கொடுந்துயரம். ஆசிரியர்கள் 15 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகிறார்கள்.
ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை
மதுவுக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தை ஆசிரியர்களுக்கு கொடுப்பதில்லை. எல்லாத் துறையை சேர்ந்தவர்களும் வீதிக்கு வந்து போராடும் நிலையிலும் ஆட்சியாளர்கள் நாங்கள் நல்ல ஆட்சியை தந்து கொண்டிருக்கிறோம் என கூறி வருகிறார்கள்.
போராடுவதற்கு அவர்களே காரணம்
அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் போராடுவதற்கு காரணம் அவர்களே தான். அவர்கள் தான் இந்த ஆட்சியை கொண்டு வந்தார்கள். அவர்கள் நினைத்திருந்தால் இந்த அரசு அமையாமல் தடுத்திருக்க முடியும்.
முதல்வர் கூறுவது வேடிக்கையாக உள்ளது
போதை பொருள் குறித்து பேச தமிழக அரசுக்கு எந்த தகுதியும் இல்லை. போதைப் பொருளை தடுப்போம் என முதல்வர் கூறுவது வேடிக்கையாக உள்ளது.
மக்களின் கோரிக்கைகளை கேட்டு தேர்தல் அறிக்கையை நிறைவேற்றுவோம் என கூறுவது மக்களுக்கு என்ன பிரச்னை என தெரியாமலே ஆட்சி செய்கிறீர்களா? என்கிற கேள்வியை எழுப்பி உள்ளது.
ஆட்சி மாறும், ஆட்சி முறை மாறாது
இந்த மண்ணில் நிலவுகிற திராவிடம், இந்தியம் என்கிற ஆட்சி முறையை மாற்றுவதுதான் மாற்றம். கூட்டணி உள்ளிட்டவற்றால் ஆட்சி மாறும் ஆனால் ஆட்சி முறை மாறாது.
காங்கிரஸ் - பாஜக, திமுக -அதிமுகவிற்கு எந்த கோட்பாடு மாற்றமும் கிடையாது. திமுகவிற்கு மாற்று அதிமுக என கூறுவது வெறும் வார்த்தையில்தான், கொள்கையில் எந்த மாற்றமும் கிடையாது.
ஆயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும் எந்த மாற்றமும் இருக்காது
தூத்துக்குடி துப்பாக்கி சூடு, கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் உள்ளிட்ட அவற்றில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழ்நாட்டை யார் அதிகம் நாசம் செய்வது என்பதில் தான் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் இடையே போட்டி உள்ளது. ஆயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும் தமிழ்நாட்டில் எந்த மாற்றமும் இருக்காது. தீய சக்திக்கு மாற்று எங்களைப்போல தூய ஆற்றல்கள் தான் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.