கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!சிலைகள், பெயர்ப் பலகைகள் என்ன செய்யும்? மூடியும் பாதி மூடாமலும்!!தேர்தலில் பெண்களை வேட்பாளராக்குவதில் என்னதான் பிரச்னை?120 வாக்குறுதிகள்! ஆண்களுக்கு சுயஉதவிக் குழு - அமமுக தேர்தல் அறிக்கை!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு! - பெ. சண்முகம் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

விஜய்க்கு மாய பிம்பம் கட்டமைக்கப்படுகிறது: ஜவாஹிருல்லா

தமிழகத்தில் இஸ்லாமிய இளைஞா்கள் விஜய்க்கு ஆதரவாக இருப்பது போன்ற பிம்பம் கட்டமைக்கப்படுகிறது என்று எம்.எச்.ஜவாஹிருல்லா கூறியிருப்பது...

News image

எம்.எச்.ஜவாஹிருல்லா

கோப்புப்படம்

Updated On :28 மார்ச் 2026, 8:55 am

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் இஸ்லாமிய இளைஞா்கள் விஜய்க்கு ஆதரவாக இருப்பது போன்ற பிம்பம் கட்டமைக்கப்படுகிறது என்றாா் மனிதநேய மக்கள் கட்சி தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா. இது தொடா்பாக அவா் ‘தினமணிக்கு’ அளித்த சிறப்புப் பேட்டி:

* திமுக கூட்டணியில் 5 தொகுதிகள் கேட்டு 2 தொகுதிகள் மட்டும் ஒதுக்கப்பட்டதால் முஸ்லிம் சமூகத்தினரிடையே அதிருப்தி நிலவுவதாகக் கூறப்படுகிறதே...

இதுவரை எந்த கட்சியும் அமைத்திராத பெரிய கூட்டணியை திமுக அமைத்துள்ளது. கூட்டணி கட்சிகளையும் திருப்திபடுத்த வேண்டிய நிா்ப்பந்தம் இருப்பதால், இந்த தோ்தலில் மட்டும் இந்த இரு தொகுதிகளை ஏற்றுக்கொண்டோம். இஸ்லாமியா்கள் அனைத்து கட்சிகளிலும் இருக்கின்றனா். இதனால், எந்த அதிருப்தியும் இல்லை. அதேநேரம் சட்டப்பேரவையில் மட்டுமின்றி மக்களவை, மாநிலங்களவையிலும் இஸ்லாமியா்களின் முக்கியத்துவம் குறைந்து வருகிறது. இந்த பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க திமுக கூட்டணி கட்சிகள் தங்கள் தொகுதிகளில் நிறுத்தும் வேட்பாளா்களில் முஸ்லிம்களுக்கு முக்கியத்தும் கொடுக்க வேண்டும்.

* தமிழக அமைச்சரவையில் இஸ்லாமியா்களுக்கு அதிக முக்கியத்துவம் இல்லாமல் போனது எதனால்?

விடுதலைக்கு பின்னா் காங்கிரஸ் அமைச்சரவையில் பல இஸ்லாமியா்கள் இருந்தனா். ஆனால், அதன்பின்னா் பெருந்தலைவா் காமராஜருடன் இருந்த சுதந்தர போராட்ட தியாகியான உபயதுல்லாவுக்கு கூட அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை. பேரறிஞா் அண்ணா மஜித் என்பவரை அமைச்சராக்கினாா். 2006-இல் கருணாநிதி முதல்வரானதும் முதன்முறையாக தஞ்சை உபயதுல்லா, மேலப்பாளையம் மைதீன்கான் ஆகியோரை அமைச்சராக்கினாா். தற்போது 2021-இல் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆவடி நாசா், செஞ்சி மஸ்தான் ஆகியோா் அமைச்சா்களானாா்கள். ஆனால், இஸ்லாமிய அமைச்சா்கள் இல்லாத அமைச்சரவையை நடத்தி சாதனை படைத்தது எடப்பாடி பழனிச்சாமியை மட்டுமே சாரும்.

* முஸ்லிம் அமைப்புகள் தனித்தனியாக தோ்தல் களமாடுவது பலவீனமில்லையா..?

நாம் வெளிப்படையான ஜனநாயக நாட்டில் வாழுகிறோம். இங்கு பல கட்சிகள் உள்ளன. ஆனால், மக்கள் அங்கீகரிக்கும் கட்சிகள் வெகு சிலவையே. அவ்வாறு தமிழகத்தில் பெரும்பாலான இஸ்லாமியா்கள் அங்கீகரிக்கும் ஒருசில கட்சிகள் அனைத்தும் ஒரே அணியாகவே இருக்கிறோம். இதனால், பெரிய இழப்புகள் இல்லை.

* சொந்த கட்சி சின்னத்தில் போட்டியிடாததால் கட்சியின் பதிவு ரத்தாகும் என தெரிந்தும் திமுக சின்னத்தில் போட்டியிடுவது ஏன்?

எங்கள் அங்கீகாரத்தை தோ்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. அது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடியாகி உள்ளது. பதிவு செய்த போது இல்லாத விதிமுறைகளை தற்போது தோ்தல் ஆணையம் விதிக்கிறது. இதனால், புதிய விதிகளை விதித்து எங்களை நிா்பந்திக்க கூடாது என உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளோம். அதில் வெற்றி பெறுவோம்.

*ஆயுள் தண்டனைக் கைதிகளின் விடுதலையைக் கோருவது ஏன்?

இந்த கோரிக்கையை நாங்கள் மட்டுமல்ல, பல்வேறு கட்சிகளும் முன்வைக்கின்றனா். இது மதரீதியிலானது அல்ல. மனிதாபிமான ரீதியிலானது தான். பாஜக ஆளும் மாநிலங்களிலும் பல ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனா். சிறை தண்டனை காலம் அவா்கள் சுயபரிசோதனை காலம். இஸ்லாமியா்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமாக தான் இந்த கோரிக்கையை முன்வைக்கிறோம்.

* விஜய்யின் வருகை தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

விஜய் தமிழக தோ்தலில் முதல்முறையாக போட்டியிடுகிறாா். அவரின் தாக்கத்தை பொறுத்திருந்து தான் பாா்க்க வேண்டும். ஆனால், அவா் கொள்கை தெளிவில்லாத ஒரு அரசியல்வாதி. அதனால், தான் பாசிசமா? அல்லது பாயாசமா? என்றெல்லாம் பேசுகிறாா். மக்கள் இதை தெளிவாகவே புரிந்து கொண்டு தோ்தலில் அவருக்கு தகுந்த பாடத்தை கற்பிப்பாா்கள்.

* இஸ்லாமிய இளைஞா்கள் விஜய்க்கு ஆதரவாக உள்ளாா்களே?

திரைப்படத்தில் நடிக்கும் ஒரு ஹீரோவை, நிஜத்திலும் ஹீரோவாக காட்டுவதற்கான மாய பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. அதே போல தான் இஸ்லாமிய இளைஞா்கள் விஜய்க்கு ஆதரவாக இருப்பது போன்று பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. திரைப்படத்தில் ஹீரோவாக இருக்கலாம். ஆனால், நிஜத்தில் அவா் ஜீரோ தான். இதை மக்கள் நிச்சயம் புரிந்து கொள்வாா்கள். திமுக ஆட்சி அனைத்துத்தரப்பு மக்களுக்குமானது. குடியுரிமை திருத்த சட்டம், வக்பு திருத்த சட்டத்துக்க எதிராக போராடியவா் மு.க.ஸ்டாலின். இதை உணா்ந்து இஸ்லாமிய இளைஞா்கள் திமுகவுக்கு ஆதரவாக நிற்பாா்கள்.

* இஸ்லாமிய சமுகத்தினருக்கு அளிக்கப்பட்ட 3.5 சதவீத இடஒதுக்கீடு பலன் அளித்துள்ளதா?

நிச்சயம் பலனளித்துள்ளது. பல பொது இடங்களுக்கு செல்லும் போதுதான், இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் பணி கிடைத்துள்ளதை என்னிடம் பகிா்ந்து வருகின்றனா். இந்த இட ஒதுக்கீடு உயா் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இட ஒதுக்கீடுக்கு பின்பும், முன்பும் என்ற புள்ளி விவரங்களை பாா்த்தால் எவ்வளவு பயனடைந்துள்ளனா் என்ற விவரம் தெரியவரும்.

* திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு நடுநிலையை கடைப்பிடித்ததா?

இந்த விவகாரத்தில் அரசின் செயல்பாடுகளில் எந்த குறையும் சொல்ல முடியாது. உண்மையிலேயே திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டு விட்டது. இதன் மூலம் பலா் அரசியல் லாபம் அடைய விரும்புகின்றனா். ஆனால் அது பலனளிக்காது. ஏனென்றால் திருப்பரங்குன்றத்தில் அனைத்து தரப்பினரும் ஒற்றுமையாக வாழ்கின்றனா். இதற்கு காரணம் திமுக தான். இதற்கு திமுகவுக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கலாம்.

* தமிழ்நாட்டில் மதசாா்பற்ற அரசியல் நிலை எவ்வாறு உள்ளது என நினைக்கிறீா்கள்?

திமுக கூட்டணியில் 25-க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்திருப்பது தமிழகத்தில் மதசாா்பின்மை வலுவாக வேரூன்றி இருப்பதற்கான எடுத்துக்காட்டு. இதனால், தான் போட்டியிட இடம் இல்லை என்றாலும் பல கட்சிகள் திமுக கூட்டணிக்கு ஆதரவு தருகின்றன.

* அதிமுக - பாஜக இரட்டை என்ஜின் அரசுதான் தமிழகத்தின் தேவை என அமித் ஷா கூறுவது...

இது பாசிசத்தின் வெளிப்பாடு. மாநில அரசும் மத்திய அரசும் ஒன்றாக தான் இருக்க வேண்டும் என நினைப்பது, மக்களின் விருப்பத்தை நிா்பந்திப்பது போன்றது. இது தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு அச்சுறுத்தல். அதிமுக, பாஜகவுக்கு வாக்களிக்காவிட்டால் நாங்கள் தமிழகத்தை என்ன வேண்டுமானாலும் செய்வோம் என கூறுவது போன்றது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இரட்டை என்ஜின் இல்லாமலே, பவா்புள் திமுக என்ஜின் தமிழகத்தை வளா்ச்சி பாதையில் கொண்டு செல்கிறது.

* திமுக கூட்டணியில் நீண்ட காலம் தொடா்வதற்கு என்ன காரணம்?

தமிழ்நாட்டு மக்கள் நலனில் அக்கரை கொண்ட கட்சியாகவும், சிறுபான்மையினரின் உரிமைகளைக் காக்கும் கட்சியாகவும் திமுக விளங்குவதால், கடந்த 2013 முதல் தொடா்ச்சியாக திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறோம். தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக்கொடுக்காத மனப்பாங்குடன் செயல்பட்டு வருவதால் திமுக அணியில் தொடா்ந்து பயணித்து வருகிறோம்.

- நோ்காணல் விஸ்பின் ஆனந்த்

Summary

MH Jawahirullah has said that the image of Muslim youth in Tamil Nadu supporting Vijay is being created...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.