தூத்துக்குடி : வட இந்தியாவிலிருந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உப்பளங்கள், ஏரிகள் மற்றும் பிற நீர்நிலைப் பகுதிகளுக்கு வலசை வரும் பறவைகளில் முதல் முறையாக புள்ளி மூக்கு வாத்துகள் வந்திருப்பது பொதுமக்கள், பறவை ஆர்வலர்களின் மனங்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
மேலும், இயற்கைச் சூழல் மண்டலங்களுடன் இயைந்து வாழும் இந்த பறவைகளின் வருகை, இந்த பகுதிகளில் உள்ள நீர்ச்சூழல் ஆரோக்கியத்துடனும் உயிரோட்டத்துடனும் திகழ்வதற்கு ஒரு சான்றாகக் கருதப்படுகிறது.
குள்ள குள்ள வாத்து, குவா குவா வாத்து, மெல்ல உடலைச் சாய்த்து, மேலும் கீழும் பார்த்து, மெல்லமாக நடக்கும் சின்ன மணி வாத்து... என்று குழந்தைப் பருவத்தில் குதூகலமாய்ப் பாடியுள்ளோம். இன்றளவும் ஆரம்ப வகுப்புகளில் குழந்தைகள் மழலை பேச்சுடன் பாடுவது நம்மை ஆச்சரியப்படுத்தும்.
அதேபோல, வட இந்தியாவிலிருந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உப்பளங்கள், ஏரிகள் மற்றும் பிற நீர்நிலைப் பகுதிகளுக்கு வலசை வரும் பறவைகளில் முதல் முறையாக அரிதாக காணக்கூடிய ஸ்பாட் பில் டக் எனப்படும் புள்ளி மூக்கு வாத்துகள் வந்திருப்பது பறவை ஆர்வலர்கள் மற்றும் இயற்கை காதலர்களின் மனங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
புள்ளி மூக்கு வாத்துகளை பொதுமக்கள், பறவை ஆர்வலர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசிக்கின்றனர். குறிப்பாக, இந்த புள்ளி மூக்கு வாத்துகள், தங்களுடைய குஞ்சுகளுடன் கூட்டமாக ஏரியில் நீந்துவதை பறவை ஆர்வலர்கள் மெய்மறந்து கண்டு ரசிக்கின்றனர். சுற்றுலாப் பயணிகளைக் கண்டு பழகி விட்ட இந்த புள்ளி மூக்கு வாத்து கூட்டம் ஓடி ஒளிந்து கொள்ளாமல், தங்கள் இஷ்டத்துக்கு நீந்துவது, இரையைத் தேடும் பணிகளில் ஈடுபடுகின்றன.
புள்ளி மூக்கு வாத்துகளை அவற்றின் தனித்துவமான தோற்றத்தைக் கொண்டு நாம் எளிதாக அடையாளம் கண்டுகொள்ளலாம். குறிப்பாக, அவற்றின் அலகின் நுனியில் உள்ள மஞ்சள் நிறமும், அலகின் மீது காணப்படும் தனித்துவமான புள்ளி அடையாளங்களும் இவற்றை அடையாளம் காண்பதற்கான முக்கியக் கூறுகளாகத் திகழ்கின்றன. பழுப்பு மற்றும் சாம்பல் நிறம் கலந்த இறகுகளால் உடல் முழுவதும் மூடப்பட்டும், அமைதியான தோற்றத்துடனும் காணப்படும் இந்த பறவைகள், நீர்நிலைகளைச் சுற்றி ஜோடிகளாகவோ அல்லது சிறிய குழுக்களாகவோ நடமாடுவதை நாம் பொதுவாகக் காணலாம்.
இந்த வாத்துகள் பொதுவாக அமைதியான நீர்நிலைகள், சதுப்பு நிலங்கள் மற்றும் தேங்கிய நீர் உள்ள பகுதிகளைத் தங்கள் வாழ்விடமாக விரும்பித் தேர்ந்தெடுக்கின்றன. இவை சிறிய நீர்வாழ் உயிரினங்கள், நீர்வாழ் தாவரங்கள், தாவரங்களின் விதைகள் மற்றும் இயற்கையாகக் கிடைக்கும் பிற உணவு ஆதாரங்களை உண்டு வாழ்கின்றன. இதன் விளைவாக, நீர்நிலைகளைச் சார்ந்த சூழல் மண்டலங்களின் உணவுச் சங்கிலியில் இவை ஒரு முக்கியப் பங்காற்றுவதாகக் கருதப்படுகின்றன.
புள்ளி மூக்கு வாத்துகளின் வருகை என்பது, ஏதோ ஒரு பறவை இனம் வந்து சென்றது என்ற அளவில் மட்டும் பார்க்கப்படுவதில்லை; மாறாக, இந்த பகுதியின் சூழலியல் சமநிலையும் பல்லுயிர்ப் பெருக்கமும் முறையாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்பதற்கான ஒரு இயற்கையான குறியீடாகவே இது கருதப்படுகிறது. இந்த பறவைகள், அந்த பகுதியின் சுற்றுச்சூழல் மாசு குறைவாக இருக்கும்போதும், வனவிலங்குகளுக்கு உகந்த சூழல் நிலவும்போதும் மட்டுமே மீண்டும் அந்த பகுதிகளுக்கு திரும்பிச் செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பறவைகள் தொடர்ந்து இந்த பகுதிகளுக்கு வருவதை உறுதி செய்வதற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உப்பளங்களையும் இயற்கை நீர்நிலைகளையும் பாதுகாப்பது, பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பேணிப் பாதுகாப்பது மிகவும் அவசியமானவை என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உள்ளூர் மக்களும் அரசு அதிகாரிகளும் இணைந்து இந்த பறவைகளின் இயற்கை வாழ்விடங்களைப் பாதுகாக்க முன்வருவார்கள் என்றால், எதிர்காலத்தில் இத்தகைய அரிய பறவை இனங்களை அவற்றின் இயற்கைச் சூழலிலேயே கண்டு ரசிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Indian Spot-billed Ducks are currently being seen in large numbers across the salt pans, lakes, and other wetland areas of the Thoothukudi district...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









