புது தில்லி: மேற்காசியாவில் நிலவும் நெடுக்கடிக்கு மத்தியில், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற பிரச்னைகளால் நாடு பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளது என்று வலியுறுத்திய திமுக எம்.பி. கனிமொழி, நாட்டின் பெட்ரோலிய இருப்புகளை வலுப்படுத்துவதற்கு பதிலாக, "குறுகிய கால தற்காலிகத் தீர்வுகளையே" நம்பியிருப்பதாக மத்திய அரசு மீது வியாழக்கிழமை திமுக எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
நாட்டின் வரையறுக்கப்பட்ட மூலோபாய பெட்ரோலிய இருப்பு திறன் மற்றும் சேமிப்பு உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதில் ஏற்படும் தாமதங்கள் குறித்த கவலைகளை சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் தெரிவித்தேன்.
இது தொடர்பாக கடந்த 2024 ஆகஸ்ட் 1 ஆம் தேதி, நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்ததாகவும், நாட்டின் அளவு மற்றும் மக்கள் தொகை கொண்டு ஒரு பெரிய நாடு ஏன் வெறும் 10 நாள்களுக்கு மட்டுமே போதுமான மூலோபாய பெட்ரோலிய இருப்புகளைக் கொண்டுள்ளது என்றும், அதிகரித்து வரும் உலகளாவிய பொருளாதார ஸ்திரமின்மைக்கு மத்தியிலும் சேமிப்புத் திறனை விரிவாக்கம் செய்யும் பணிகள் ஏன் மனசாட்சியின்றி தாமதப்படுத்தப்படுகிறது என்றும் நான் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியிருந்தேன்.
இந்த யதார்த்தத்தை நாடாளுமன்றத்தில் அரசு ஒப்புக்கொண்டது, ஆனால் தொழில்நுட்ப விளக்கங்கள் மற்றும் வாக்குறுதிகளுக்குப் பின்னால் ஒளிந்துகொள்ள முயன்றது. மூலோபாய இருப்புகளை விரிவுபடுத்துவதில் தாமதங்கள் தொடர்வதாக திமுக எம்.பி. குற்றம் சாட்டினார்.
"கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், தாமதங்கள் தொடர்கின்றன, விரிவாக்கம் மெதுவாகவே உள்ளது, மேலும் ஒவ்வொரு உலகளாவிய எண்ணெய் நெருக்கடிக்கும் நாடு தொடர்ந்து ஆளாகி வருகிறது," என்று கனிமொழி கூறினார்.
மேலும் அவர், நீண்டகால எரிசக்திப் பாதுகாப்பு குறித்த அரசின் தயார்நிலை குறித்து தாம் குறிப்பாகக் கேள்வி எழுப்பி இருந்ததாகவும், சேமிப்புக் கட்டமைப்புகளில் முதலீடு செய்வதற்குப் பதிலாகத் தற்காலிக நடவடிக்கைகளைச் சார்ந்திருப்பதை விமர்சித்ததாகவும் கூறினார்.
"நாட்டின் நீண்டகால எரிசக்திப் பாதுகாப்புத் தயார்நிலை குறித்த கவலைகளை தான் எழுப்பியிருந்தேன், மேலும், மூலோபாய இருப்புகளையும் சேமிப்புக் கட்டமைப்புகளையும் சேர்ப்பதற்குப் பதிலாக, அரசு ஏன் தொடர்ந்து குறுகிய கால தற்காலிகத் தீர்வுகளையே சார்ந்துள்ளது என்றும் கேள்வி எழுப்பியிருந்தேன். நாடாளுமன்றத்தில் இந்தக் கேள்விகள் எழுப்பப்பட்டபோது, அரசு ஒரு நல்லெண்ண உணர்வுடன் செயல்பட்டிருந்தால், உலகளாவிய நிச்சயமற்ற காலங்களில் தனது எரிசக்திப் பாதுகாப்பைப் பேணுவதற்கு நாடு இன்று மிகவும் சிறந்த நிலையில் இருந்திருக்கும். இந்த நாடு தயார்நிலையையும் நீண்டகாலத் திட்டமிடலையும் பெறத் தகுதியானது. அதற்குப் பதிலாக, உரைகள், காணொளிக் காட்சிகள், தாமதங்கள், கொள்கை ரீதியான அலட்சியம் மற்றும் தொடர்ச்சியான பாதிப்புக்குள்ளாகும் தன்மை ஆகியவற்றையே அது பெற்றுள்ளது," என்று அவர் மேலும் கூறினார்.
தொடர்ந்து நடைபெற்று வரும் மேற்காசிய நெருக்கடிக்கு மத்தியில், எரிபொருள், உரங்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருள்களின் இருப்பு குறித்து மத்திய அரசு ஆய்வு செய்த ஒரு நாள் கழித்து அவரது கருத்துகள் வெளிவந்துள்ளன.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற, மேற்கு ஆசியாவுக்கான முறைசாரா அமைச்சர்கள் குழுவின் ஆறாவது கூட்டத்தின் போது இந்த ஆய்வு நடைபெற்றது.
கூட்டத்தைத் தொடர்ந்து, நாட்டின் விநியோக நிலைமை இயல்பாகவே உள்ளதாக மக்களுக்கு உறுதியளித்த ராஜ்நாத் சிங்; மேலும், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு ஆகியவற்றை மக்கள் பதற்றத்துடன் முண்டியடித்துக் கொண்டு வாங்குவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகம் "முழுமையாகப் போதுமானதாகவே" உள்ளது. கடந்த நிதியாண்டில் நாட்டின் உள்நாட்டு நுகர்வு 243.2 மில்லியன் டன்களாக இருந்த நிலையில், நாட்டின் நிறுவப்பட்ட சுத்திகரிப்புத் திறன் ஆண்டுக்கு 258.1 மில்லியன் டன்களாக உள்ளதை அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச அளவில் எரிபொருள் விலைகள் உயர்ந்து வருவதால் ஏற்படும் முழுமையான தாக்கத்திலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்கும் வகையில், பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் தற்போது நாளொன்றுக்கு சுமார் ரூ.550 கோடி அளவிலான இழப்பைத் தாங்கிக்கொண்டு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Summary
DMK MP Kanimozhi on Thursday accused the Centre of relying on "short-term band-aid solutions" instead of strengthening India's strategic petroleum reserves, asserting that the country remains vulnerable to global oil shocks amid the West Asia crisis.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









